October 25, 2021

உண்மையில் சுகப்பிரசவம் என்றால் என்ன என்பது குறித்தும் நாம் பேசவேண்டியுள்ளது!

திருப்பூரில் நடந்த பிரசவகால மரணம் பிரசவம் குறித்தும், அல்லோபதி மற்றும் மரபுவழி பாரம் பரிய மருத்துவங்கள் குறித்தும் பொதுவெளியில் விவாதிக்கவேண்டிய சூழலை உருவாகி யுள்ளது. இது ஆரோக்கியமானதும் அவசியமானதும் கூட. ஏனெனில் அல்லோபதி மருத்துவம் குறித்தும், பாரம்பரிய மருத்துவங்கள் குறித்தும் மக்கள் புரிந்துகொள்ளவும் தாங்கள் எந்த மருத்து வத்தினைப் பின்பற்ற வேண்டும் என்ற முடிவினை எடுப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் நம்புகி றேன். எனது இரண்டு குழந்தைகளை அறுவை சிகிச்சையில் பெற்றெடுத்த தாயாகவும், ஒரு மரபு வழி மருத்துவராகவும் பிரசவம் குறித்த எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  அறிவியல்பூர்வ மருத்துவம், வளர்ச்சியடைந்த மருத்துவம் என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் அறுவை மருத்துவர்களே….!!! எனது சந்தேகங்களுக்கு தெளிவேற்படுத்துங்கள்.

எனது பாட்டி 1930 களில் தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டில் பிரசவித்தார். எனது தாயார் 1970 களில் தனது நான்கு குழந்தைகளில் மூவரை வீட்டிலும், சிறிய வீட்டில் மூன்று குழந்தைகள் இருக்கும் சூழலில், அவர்கள் முன்பு பிரசவிக்க இயலாத சூழலில் எனது தங்கையை அரசு மருத்துவமனையிலும் பெற்றெடுத்தார்.

நாங்கள் சகோதரிகள் மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் இரண்டு குழந்தைகள். 1990களில் ஆறு குழந்தைகளும் மருத்துவமனை களில் அறுவைசிகிச்சையில் பிறந்தவர்கள். ஒவ்வொரு சிசேரியனுக்கும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

அல்லோபதி மருத்துவம் வளர்ச்சியடைந்த மருத்துவம். அறிவியலின் உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் அனைத்தும் சுகப்பிரசவங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிசேரியன்கள். தற்போது அருகிப்போய்விட்ட சுகப்பிரசவங்கள் அனைத்துக் குழந்தைகளும் சிசேரியன் குழந்தைகள். இதுவா ஒரு மருத்துவத்தின் வளர்ச்சி…???? உங்களால் சுகப்பிரசவங்கள் என்று பெயரிடப்பட்டவையும் உண்மையில் “சுகப்பிரசவங்களா?” உண்மையில் சுகப்பிரசவம் என்றால் என்ன என்பது குறித்தும் நாம் பேசவேண்டியுள்ளது.

பிரசவம் என்பது மிகக்கொடுமையானது போன்றதும், ஒரு பெண்ணிற்கு மறுபிறப்பு என்பதைப் போன்றதும், சினிமாக்களில் பிரசவக்காட்சிகளில் ஒரு பெண் அதீத வேதனையையும், கொடூரத் தையும் அனுபவிப்பதைப்போன்ற காட்சிப்படுத்தல்களினாலும் பிரசவம் குறித்த பயம் திட்டமிட்டு மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இருக்கும் பெண்கள் கருவுற்ற வுடனே யே உறுதிப்படுத்திக்கொள்ள அல்லோபதி மருத்துவத்தையே நாடுகிறார்கள். மகப்பேறு  மருத்துவ ரின் பரிந்துரையின் பேரில் கால்சியம், வைட்டமின், போலிக் என்று அனைத்து சத்து மருந்து களையும், மாத்திரைகளையும் தனது கர்ப்பகாலத்தில் தவறாமல் உட்கொள்வதோடு, பலமுறை ஸ்கேன் எடுக்கப்பட்டு குழந்தையின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, முறையாகத் தடுப்பூசிகளும் ஏற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணிற்கு, இன்னும் சொல்லப்போனால் மாதாந்திரப் பரிசோதனையின் மூலம் மருத்துவரின் தொடர்கண்காணிப்பில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு ஏன் சுகப்பிரசவம் நிகழ்வதில்லை…?? எதற்காகத் தாயின் வயிற்றைக்கிழித்து குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.. .??? இதற்கு நீங்கள் காரணங்கள் பல கூறலாம்.

கருத்தறித்ததில் இருந்து ஒரு மருத்துவத்தை நம்பி முழுமையாகத் தன்னை ஒப்படைக்கும் ஒரு பெண்ணிற்கு சிசேரியன்தான் என்று தீர்மானித்தபின்பு ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லும் முன் பெண்ணின் உறவினர்களிடம் என்ன காரணத்திற்காகக் கையெழுத்து பெறப் படுகிறது…??? அந்தப்படிவத்தில் என்ன இருக்கிறது என்று கையெழுத்துப் போடுபவருக்குத் தெரியுமா…???

“அறுவை சிகிச்சையின் போது, மரணம் உட்பட எதுவும் நிகழலாம், எது நிகழ்ந்தாலும் சிகிச்சை யளிக்கும் மருத்துவர் எந்தவிதத்திலும் பொறுப்பாகமாட்டார் ” இதுதானே படிவத்தின் சாரம் ???? கடவுளுக்கு இணையாக மருத்துவரை நம்பித் தங்களை ஒப்படைக்கும் மக்களுக்கு மருத்துவத்தின் பெயரால் இழைக்கப்படும் மாபெரும் துரோகமல்லவா இது???

தனது முதல் குழந்தையை வீட்டிலேயே சுகமாகப் பெற்றெடுத்துவிட்டு, பிரசவித்த நான்கு மணி நேரத்தில், தன்னைப் பார்க்க வந்த உறவினர்களுக்குத் தேநீர் தயாரித்துக்கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்த தனது தங்கையைப் பார்த்த ஒர் பெண் பகிர்ந்து கொண்டது. “எனக்கும் முதல் பிரசவம் மருத்துவமனையில் நிகழ்ந்தது. சுகப்பிரசவம் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு அது சுகமான தாக இல்லை. மருத்துவர் கணித்த நாள் கடந்தும் வலி வராத காரணத்தினால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டேன். ஊசிமூலம் மருந்தேற்றியும், பிறப்புறுப்பில் ஜெல் தடவப்பட்டும் செயற்கையாக வலி உருவாக்கப்பட்டது. வலிவரும் நேரம் என்னை முக்கச்சொல்லிக் கட்டாயப் படுத்திக்கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் நான் சோர்வுற்றுவிட்டேன். அதன்பின் வலி வரும்போதெல்லாம் உடன் இருந்த செவிலியர் தங்களின் கால் முட்டியால் என் வயிற்றில் அழுத்தினர். ஓர் இரவுப் போராட்டத்திற்குப் பின் ஒருவழியாய்ப் பிரசவித்தேன். பிரசவித்து இரண்டு வாரங்களுக்கும் என்னைப்படுக்கையில் இருந்து எழுப்பி உட்கார வைக்க, குளிக்கவைக்க, உடைமாற்ற என்று இரண்டுபேராவது உடன் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

என் தங்கை எத்தனை இயல்பாக, சிரமமின்றி இந்தக்குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள்? இதுவல்லவா சுகப்பிரசவம்? நான் தற்போது கருவுற்று மூன்று மாதங்கள் ஆகிறது. எனது இரண்டாவது குழந்தையை நானும் வீட்டிலேயே பிரசவித்துக்கொள்வேன் “,. (இந்தமுடிவினை எடுத்த இந்தத்தம்பதியினர் படிப்பறிவற்ற பாமரர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள்) தான் கூறியது போலவே தனது இரண்டாவது குழந்தையைத் தனது கணவர்மட்டும் உடனிருக்க வீட்டில் உண்மையில் சுகமாகப்பெற்றெடுத்ததோடு, மூன்றே மணிநேரத்தில் தனது வேலைகளை கவனிக்கத்தொடங்கினார்.

மருத்துமனையில் நடக்கும் சுகப்பிரசவத்தின் லட்சணத்திற்கான ஒரு உதாரணத்தை மட்டுமே இங்கு பதிவு செய்திருக்கிறேன். அல்லோபதி மருத்துவத்தின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள ஏராளமான உதாரணங்கள் மக்களிடம் உள்ளன. இதுபோன்ற செய்திகள் அறிவியல்பூர்வமற்றதாகவும், முட்டாள்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் தெரிகிறதா…????

ஆய்வகங்களையும், மருத்துவ உபகரணங்களையும், மருத்துவ ஆய்வறிக்கைகளையும் மட்டுமே நம்பும் அல்லோபதி மருத்துவம் பாரம்பரிய, மரபுவழி மருத்துவங்களை அறிவியல்பூர்வமற்றது என்று விமர்சிக்கிறது. அல்லோபதி மருத்துவத்தின் மருத்துவ சேவைக்கு மேலும் சில உதாரணங்கள்.

எட்டு ஆண்டுகளாகக் குழந்தையின்றி வேதனைப்பட்ட ஒரு தம்பதியினர் அல்லோபதி மருத்து வரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். சிகிச்சை காலத்தில் அப்பெண்ணிற்கு மாத விடாய் நின்று லேசான குமட்டலும், தலைசுற்றலும் துவங்குகிறது. சிறுநீர் ஆய்வு, நெகட்டிவ் என்று கூறுகிறது. ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் ஏதோ வளர்வதாகவும் அது நிச்சயமாகக் குழந்தையில்லை என்றும் அடித்துச் சொல்கிறது. ஆனால் வயிற்றில் வளரும் ஏதோ ஒன்று, துரிதமாக வளர்கிறது, இது கேன்சராகவும் இருக்கலாம் என்று அனுமானிக்கப் படுகிறது. அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது. ஆபரேஷன் தியேட்டரில் உதவியாளர்களுடன் மருத்துவர் அறுவைசிகிச்சை செய்து கருப்பையை நீக்கிவிடுகிறார். கருப்பையை வெட்டி நீக்கியபின்பு , கருப்பைக்குள் இருந்தது அந்தத் தம்பதியரின் எட்டாண்டு கால வேதனையைப் போக்கவந்த மூன்றே மாதங்களான சின்னஞ்சிறுவிரல்கள் வளர்ந்த நிலையில் இருந்த சிசு என்பது தெரியவருகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மருத்துவ உதவியாளர் தனது வேலையை விட்டு வெளியேறுகிறார்.

திருமணமான நான்காண்டுகள் கருத்தறிக்காத ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் நின்றுபோகிறது. லேசான குமட்டல் துவங்குகிறது. உணவு பிடிக்காமல் போகிறது. இரண்டு மாதங்கள் கழித்து பிறப்புறுப்பில் லேசான இரத்தக்கசிவு ஏற்படுகிறது மருத்துவரிடம் ஆலோசிக்கிறார். ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் வளர்வது கட்டியென்றும், துவக்க நிலையிலேயே அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிவிடுவது நல்லது என்றும் ஆலோசனை கூறுகிறார் மருத்துவர். ஆனால் அந்தப்பெண்ணோ , “தன் வயிற்றில் வளர்வது குழந்தைதான் என்றும் அறுவைசிகிச்சைக்கு சம்மதிக்கமாட்டேன் ” என்றும் உறுதியாக இருந்தார். ஐந்தாவது மற்றும் ஏழாவது மாதத்திலும் ஸ்கேன் செய்த ரிப்போர்ட்கள் கட்டியை உறுதி செய்தன. அவ்வப்போது லேசான ரத்தக்கசிவும் இருந்தது. இப்படியே மரணித்தாலும் பரவாயில்லை, அறுவை சிகிச்சைக்கு ஒத்துழைக்கமாட்டேன் என்று உறுதியாக இருந்த அந்தப்பெண் ஒன்பதுமாதம் இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தன் வீட்டிலேயே அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார். அல்லோபதி மருத்துவத்தின் பேச்சை கேட்டிருந்தால்….????

ஃபெலோப்பியன் குழாயில் அடைப்பு இருப்பதைத் துல்லியமாக ஸ்கேன் மூலம் கண்டுபிடித்த அறுவை மருத்துவம், அடைப்பை நீக்க வக்கின்றி, வழியின்றி, இரண்டு பக்கமும் ஃபெலோபியன் குழாயை வெட்டி நீக்கி, அப்பெண்ணக் காப்பாற்றிவிட்டது. அப்பெண்ணிற்கு வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. ஃபெல்லோபியன் குழாய் இன்றி அப் பெண்ணால் கருத்தரிக்க இயலுமா…??? அறுவை மருத்துவம்தான் பதில் சொல்லவேண்டும்  . மனித உடலை ஒரு எந்திரம் போல் கையாளும் இந்த மருத்துவம், மனித உணர்வுகளைப்பொருட்டாக மதிக்காத இந்த மருத்துவம் தன்னை அறிவியல்பூர்வமருத்துவம் என்று மார்தட்டிக்கொள்கிறது. தன்னைத்தவிர பாரம்பரிய மருத்துவங்களை ஒரு மருத்துவ முறையாகவே அங்கீகரிக்க மறுக்கிறது.

அல்லோபதி மருத்துவமே…!!!! கேள்… நாங்கள் எந்திரங்களின் பேச்சைக்கேட்பதில்லை. உயிரற்ற எந்திரங்கள் அளிக்கும் ரிப்போர்ட்கள் உணர்வு நிரம்பிய உயிர்களுக்கு சிகிச்சையளிக்க எங்களுக்கு எந்தவகையிலும் உதவுவதில்லை. நீங்கள் நம்பும் அறிவியல் வேறு. ஆனால் நாங்கள் உணர்ந்த அறிவியல் வேறு.

நாங்கள் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் அறிவியலின் ரகசியத்தைக். கூறுகிறேன். கொஞ்சம் சோறு , காய்கறி, சப்பாத்தி, இட்லி, தோசை, பழங்கள் என நாம் எடுத்துக்கொள்ளும் உணவைத் தனக்குத் தேவையான உதிரமாக மாற்றிக்கொள்ளும் பேரறிவைத் தன்னுள் புதைந்து வைத்துள்ளது நம் உடல். இதனை உங்களின் எந்தவொரு மேம்பட்ட அறிவியல் உபகரணமும் நிகழ்த்த இயலாது. உடலின், இயற்கையின் அந்த மாபெரும் ரகசியத்தை, உன்னத அறிவியலை உணர்ந்தவர்கள் நாங்கள். உங்களால் முடிந்தால் இந்த அறிவியலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

அல்லோபதி மருத்துவத்தில் சிசேரியனுக்கு சொல்லப்படும் முக்கியக் காரணங்கள்,

1. குறிப்பிட்ட நாள் கடந்தும் பிரசவ வலி வரவில்லை எனில் குழந்தைக்கு ஆபத்து,

2. பனிக்குட நீர் குறைந்து விட்டதால் தாயால் பிரசவிக்க சிரமம்

3. குழந்தை கழிவை உட்கொண்டு விட்டது

4. தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி உள்ளது

5. முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்த குழந்தையும் சிசேரியன் தான்.

வீட்டுப்பிரசவங்களில் இயற்கையாக நிகழ்ந்துகொண்டிருப்பது கீழே

1. பசி, தாகம், உறக்கம், ஓய்வினை முறையாகக் கடைபிடித்து, இயற்கை வழி வாழ்வியலை மேற்கொண்டுள்ள ஒரு பெண்ணிற்கு கருத்தறித்த நாள் குறித்த எந்தக்கணக்கும் தேவையில்லை. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி முழுமையடைந்த நிலையில் வலி ஏற்பட்டு இயல்பாகப் பிரசவிக்கிறார்.

2. பனிக்குட நீர் சிறிதுசிறிதாக இரண்டு வாரங்களாக வெளியேறிய நிலையில், வலி ஏற்பட்டு, சிரமமின்றிப் பிரசவம் நடக்கிறது.

3. குழந்தை வெளியில் வந்து முதல் மூச்செடுத்தபின்பே நுரையீரலும், பெருங்குடலும் இயங்கத் துவங்குகின்றன. அதன் பின்பே குழந்தை மலம் கழிக்கும். எனவே கருப்பையில் குழந்தை கழிவை உட்கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை.

4. குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தை மூன்று முறை சுற்றியிருந்த நிலையிலும், புறத்தலையீடு தேவை இன்றி, குழந்தையின் உடல் தானாகச் சுழன்று விடுவித்து வெளியேறுகிறது.

5. முதல் இரண்டு குழந்தைகள் சிசேரியனுக்குப்பின், மூன்றாவது குழந்தை சுகப்பிரசவமாக வீட்டில் நிகழ்கிறது.

பிரசவம் என்பது செய்யப்படும் செயல் அல்ல. இயல்பாகத் தானாக நடக்கும் இயற்கையின் நடவடிக்கை. நாயும், பூனையும், பசுவும் யானையும், ஒட்டகச்சிவிங்கியும் பிரசவிக்க இயற்கையைத்தவிர யாரைத்துணைக்கு அழைக்கின்றன…???? எந்த விலங்கிற்காவது சிசேரியன் தேவைப்பட்டுள்ளதா…???

ஒருவர் எதை உண்ணவேண்டும், எதை உடுத்தவேண்டும், எதைப்படிக்கவேண்டும், எந்த மருத்துவ முறையைப்பின்பற்ற வேண்டும் என்பது அவரவரி தனிப்பட்ட உரிமை. இதில் தலையீடு செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

1990 களில் இயற்கைவழி வாழ்வியல் குறித்த அறிவு எனக்குக் கிடைத்திருந்தால் எனது இரண்டு குழந்தைகளையும் வீட்டிலேயே சுகமாகப் பெற்றெடுத்திருப்பேன். அல்லோபதி மருத்துவமனை யின் பக்கம் தலைவைத்தும் படுத்திருக்கமாட்டேன். இரண்டு சிசேரியனுக்குப் பின்பான பல்வேறு உடல் உபாதைகளில் இருந்தும் தப்பித்திருப்பேன்.

அக்குஹீலர். அ. புனிதவதி