November 27, 2022

என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பொறுப்பேற்று உள்ளார் ஜோ பைடன். கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா தர்மசங்கடங்களையும், உள்நாட்டு மோதல்களையும், வெளிநாட்டு கண்டனங்களையும் ஒரு சேரப் பெற்று வந்தது நின்று போய் மீண்டும் 2016 ஆம் ஆண்டின் நிலைக்கு திரும்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே காங்கிரஸ் சபையால் இருமுறை கண்டனங்களுக்கு ஆளான அதிபர் டொனால்ட் டிரம்ப். எதிர்பாராத வகையில் 2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் நான்காண்டுகளில் எதையும் பெரிதாக மாற்றவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்டடத்திற்குள் தனது ஆதரவாளர்களை உட்புகச் செய்து அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டார். குடியரசுக் கட்சியின் முந்தைய அதிபர்களில் அதிகம் ஆபத்தானவர் என வரலாறு சொல்லும் விதத்தில் தனது செயல்பாடுகளைக் கொண்டிருந்தார். நிக்ஸன், ரீகன், புஷ் (இரண்டு பேரும்) ஆகிய அதிபர்கள் சமீபகாலமாக அமெரிக்காவை ஆண்டிருந்தாலும் குடியரசுக் கட்சி தன்ன்னிடம் வெற்றி பெறக்கூடிய வேறொரு வேட்பாளர் இல்லை என நினைக்கும் அளவிற்கு டிரம்ப் ஆதிக்கம் செலுத்தி யிருக்கிறார்.

உலகளவிலான பொருளாதாரச் சூழல், சீனா-அமெரிக்க வர்த்தகம், ஐரோப்பாவின் ஒத்துழைப்பு இன்மை எனப் பலப் பிரச்சினைகளுக்கு இடையே டிரம்ப் பதவியேற்றபோது அவர் உள்ளூர் மக்களுக்கு அதிரடியாக ஏதேனும் செய்வார் என்றே நினைக்கப்பட்டது. ஆனால் கொரோனா, உலகளவிலான மந்த நிலையால் அமெரிக்காவின் பொருளாதாரச் சூழல் மாறவில்லை. டிரம்ப் பெரிய மாறுதல்கள் எதையும் கொண்டு வரவில்லை. இருந்தாலும் அவரது பேச்சு அதிகம் படித்திராத மக்களிடையே பிரபலமாகியிருந்தது. ஆனால் அது மீண்டும் தேர்வு செய்யப்பட உதவவில்லை. மாறாக ஜோ பைடன் சென்றமுறை டிரம்ப் பெற்ற 306 எலக்டோரல் வாக்குகளைப் பெற்று அதிபராகி விட்டார்.

இப்போதுள்ள சூழலில் ஜோ பைடன் ஒபாமா காலத்து பொருளாதாரக் கொள்கைகளையே வேறு பெயர்களில் கொண்டு வரலாம் என்கின்றனர். உள்ளூரில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். சீனாவுடனான வர்த்தக மோதல்களை முடிவிற்கு கொண்டுவருவதோடு ஐரோப்பா, மேற்கு ஆசியா, இந்தியா உள்ளிட்ட பசிபிக் பிரதேசம் ஆகிய அமெரிக்காவின் செல்வாக்கு மேலும் சரிந்துவிடாமல் இறுக்கிப்பிடிக்க வேண்டும். குறிப்பாக பசிபிக் பிரதேசத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த டிரம்ப் குவேட் (QUAD) எனும் கொள்கையை ஏற்படுத்தினார். இது முன்னாள் ஜப்பான் பிரதமர் அபேவினால் உருவாக்கப்பட்டு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கொண்டு செயல்படுகிறது. இப்போது பைடன் இக்கொள்கையை பாதுகாப்பும், வளமும் கொண்ட இந்தோ-பசிபிக் என்று மாற்றியுள்ளார். பெயர் மாறினாலும் வடிவம் மாறவில்லை. தொடர்ச்சியாக சீனாவின் ஆதிக்கத்தை தென் சீனக் கடல் பகுதிக்கு மேலேயே தடுத்து நிறுத்துவதே நோக்கம்.

தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தென் சீனக்கடலில் சீனா தேவையின்றி ஆதிக்கம் செலுத்துவதை கண்டிக்கின்றன. சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றும் சீனாவிற்கு எதிராக வெளிவந்தும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை நிறுத்தவில்லை. அத்துடன் தனது பழைய கொள்கையான தைவானை சீனா வுடன் இணைக்க வேண்டும் என்பதையும் கைவிடவில்லை. பிரிட்டிஷ்ஷாரிடம் இருந்து ஹாங்காங்கையு, போர்ச்சிகீய மகாவு பகுதியையும் தன்னுள் இழுத்துக் கொண்ட சீனா இப்போது தைவானையும் இணைக்கத் துடிக்கிறது. ஆனால் தைவான் தனி நாடாக ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு சபை விரிவாக்கப்பட்டால் அதில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக விளங்கும் வாய்ப்புண்டு. இந்தியாவிற்கு அந்தத் தகுதியை வழங்கிவிடக்கூடாது என்பதில் சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் உறுதியாகவுள்ளன. அதைக்கொடுத்தால்தான் இந்தியா அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பிரதேசங்களுடன் நீண்ட கால நல்லிணக்க உறவைப் பெற முடியும். அது மட்டுமின்றி இந்தியாவுடன் அண்டை நாடுகள் போரிடும் சூழல் வந்தால் இந்தியப்பெருங்கடல், தென் பசிபிக் ஆகிய கடல் பிரதேசங்களில் அமைதி நிலவாது. இது உலக வர்த்தகத்திற்கு பெரும் தடையாக இருக்கும். இதைத் தவிர்க்க எண்ணியே அமெரிக்கா சீனாவுடன் மோதலை வளர்க்காமல் அதன் செல்வாக்கைத் தகர்க்கப்பார்க்கிறது. இந்தியா ஆக்கிரம்ப்பு நாடாக இருந்ததில்லை.

பங்களாதேஷ் போர் கூட அகதிகளின் வருகையினால் மட்டுமேயாகும். அத்துடன் நீண்ட காலத்திற்கு பாகிஸ்தான் கிழக்கிலிருந்து இம்சை தருவதை நிறுத்த இயலும் என்பதாலும் புதிய நாட்டை உருவாக்கியது. இலங்கையில் இந்தியாவிற்கு எதிராக சீனா சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்துச் செயல்படுகிறது. பாகிஸ்தான், இலங்கை நாடுகளுக்கு ஏராளமான கடன்களை சீனா அளித்துள்ளது. அவை அக்கடன்களை திரும்பச் செலுத்த இயலாமல் போனால் சீனாவின் காலனி நாடுகளாக மாறத்தான் வேண்டியிருக்கும். இப்போதே ஏறக்குறைய அப்படித்தான் இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பைடனின் அரசில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் அதிகாரமிக்கப் பதவிகளில் அமரப்போவது கூடுதல் அழுத்தத்தை இந்தியாவின் எதிராளிகளுக்கு உருவாக்குகிறது. ஒபாமா காலத்தை விட இப்போது அமெரிக்காவிற்கு இந்தியாவின் சந்தை அதிகம் தேவைப்படுகிறது. அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியனவும் இந்தியாவைக் குறிவைத்துள்ளன. எனவே இந்தியாவின் நீண்ட காலப் பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்கா ஏதேனும் செய்தேயாக வேண்டியக் கட்டாயமுள்ளது. அதை எப்படி பைடன் செய்வார் என்பதே இப்போதையக் கேள்வி. பதவியேற்று முதல் ஆறு மாதங்களுக்குள் பைடன் இந்தியா வந்தாலும் வியப்பில்லை. அப்படி வரும் பட்சத்தில் டிரம்ப் போல வெறுங்கையுடன் வர மாட்டார் என்பதே மோடி அரசின் எதிர்பார்ப்பு.

இந்தியா அமெரிக்காவிடம் அதிகம் எதிர்பார்ப்பது முதலீடுகளை. டெஸ்லா போன்ற கார் நிறுவனங்கள் இங்கு வந்தாலும் இந்தியாவின் பொருளாதாரத் தேவை தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளிலும் அடங்கியுள்ளது. சீனாவிடம் எப்படி தொழில்நுட்பப் பரிமாற்றங்களை அமெரிக்க நிறுவனங்கள் செய்கின்றனவோ அதே அளவில் செய்ய வேண்டும் என்பதே அதிகபட்ச எதிர்பார்ப்பு. இந்தியாவின் விவசாயத் துறை இன்று ஒரே நாடு, ஒரே சந்தை என ஆகியுள்ள நிலையில் இதை அமெரிக்க நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன என்பது தெரியவில்லை.

இந்தியாவில் இளம் வயதினர் அதிகம் இருந்தாலும் குழந்தைகள், பெண்களிடையே கடும் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளது. இதைத் தீர்க்க அமெரிக்க தொழில் நுட்பங்கள் உதவலாம். குறிப்பாக அதிகச் சத்துள்ள உணவு தானியங்களை உற்பத்தி செய்யத் தேவையான தொழில் நுட்ப உதவி போன்றவை தேவைப்படுகின்றன. இந்தியர்கள் அமெரிக்காவில் வேலைத்தேடிச் செல்லத் தடையாக இருந்த ஹெச்-1பி விசா போன்றவற்றில் தாராள அணுகுமுறையை பைடன் அரசு மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே நீண்டகால இருபுறமும் பயனுள்ளக் கொள்கையொன்றையே பைடன் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு