முதல்வர் & பிரதமர் சந்திப்புக்கு இப்படி ஆயத்தமாகிப் போனால்தான் என்னவாம்?

முதல்வர் & பிரதமர் சந்திப்புக்கு இப்படி ஆயத்தமாகிப் போனால்தான் என்னவாம்?

டந்த தமிழ்நாடு சட்டசபைப் பொதுத்தேர்தலின் போது நரேந்திர மோடியும், மு.க.ஸ்டாலினும் நேரடி வாதபேதங்களின் மூலமாக மேடை முழக்கப் மோதல் நிகழ்த்தி வந்தனர். மக்களின் தீர்ப்பின் மூலம் முதல்வர் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், டில்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். ஜனநாயக ஆணி வேரது ஆரோக்கியத்தின் ஆற்றலை இது அடையாளப்படுத்தி இருக்கிறது.

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டதும், கொரோனா கொடூரத்தைக் கருவறுக்கும் களப்பணியில் கவனம் செலுத்தி வந்தார். சூழல் சுமூகமானதும் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டார். பிரதமர் அலுவலகம் நினைத்திருந்தால் சந்திப்புக்கான நேர ஒதுக்கீட்டைத் தாமதப்படுத்தி இருக்கலாம். ஆனால் அத்தகைய நிலைப்பாட்டை அந்த அலுவலகம் செய்யவில்லை. இதன் பின்னணியில் மோடியின் மந்திராலோசனை இருப்பதை மறுப்பதற்கில்லை. அரசு வேறு…அரசியல் வேறு தானே! கோஷம் மாறுபட்டாலும், நேசம் வேறுபட்டாலும், தேசம் என வந்துவிட்டால் ஒருங்கிணைப்பே சிறப்பளிப்பு என இருதரப்பினரும் கருத்தில் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தைப் போன்றே மேற்கு வங்கத்திலும் மோடி -மம்தா கடும் வார்த்தைப் போர் நிகழ்த்தி வந்தனர். தேர்தல் முடிந்தது. மம்தா மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் இன்னும் அவர் மரியாதை நிமித்தமான சந்திப்புக்காக பிரதமருக்கு வேண்டுதல் அனுப்பவில்லை. தேர்தல் காலத்துக் கனத்த மனத்துச்சூடு இருதரப்பிலும் இன்னும் ஆறிவிடவில்லை என்பதை அப்பட்டமாக அறிய முடிகிறது. இத்தகைய நிலை தமிழ்நாடு முதல்வரிடம் இல்லை என்பது கண்ணியமான அரசியலின் கவின்மிகு காட்சிகள்.

பிரதமரைச் சந்திக்க புது டெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஆயத்தமாக இருந்த போது, பிரதமரின் முழு பாதுகாப்புடன் கூடிய கார் தேடி வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏற்றிக்கொண்டு பிரதமர் முகாமுக்குச் சென்றது. இது பெரிதாகத் தமிழகத்தில் பேசப்பட்டது. எனினும் சில பாஜக பிரமுகர்கள் என்னிடம் பேசியபோது, “இது சாதாரணமான நடைமுறைதான். பிரதமரின் கார் எனில் அதில் அமர்ந்து இருக்கும் முதல்வர் எவ்வித ஃபீரிசிங் எனும் தடவல் தடய உடல் சோதனையில் இருந்து தவிர்க்கவே” என்றனர். “எனவே இத்தகைய சமயத்தில் மற்றவர்கள் எனில் பிரதமர் இல்லம் வரை சொந்த கார்… பிரதமர் வீட்டு வாசலில் வேறு கார். இதுவே நடைமுறை. வந்த காரில் இருந்து பிரதமர் இல்லத்துக் காருக்குள் நுழைவதற்கு முன்னதாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். இவற்றைத் தவிர்க்கத்தான் இத்தகைய கார் அனுப்பப்பட்டது” என்றும் அவர்கள் விளக்கினர். எனவே முதல்வருக்கு தடவல் தடய உடல் சோதனையைத் தவிர்க்க பிரதமர் பாதுகாப்புப் படை முடிவு எடுத்ததே நல்லெண்ணத்தின் அடையாளமாகக் கொள்ள முடியும்.

இந்திய அரசியலில் நல்ல அம்சங்களைத் தள்ளிவைத்து விடுவதும், புண்படும் எண்ணங்களைப் பண்ணிசைத்துப் பரப்புவதும் இயல்பான அரசியலாகி விட்டது. இதனைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான அம்சங்களையும் அலங்காரப்படுத்திப் பார்ப்பது நாட்டுக்கே நல்லது. அந்த பாணியிலேயே தான் என் பார்வையும் பாய்கிறது.

பிரதமரும், முதல்வரும் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்த காட்சிகள் செய்தித் தாட்களிலும் இதர ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன. இவை முந்தைய முதல்வருடன் பிரதமர் இருந்து பேசிய காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஒப்புமைப்படுத்தப்பட்டு கருத்து பேதங்கள் ஏற்கனவே கனத்து ஒலித்து வருகின்றன.

பிரதமர் முன்னிலையில் முதல்வர் நிமிர்ந்து அமர்ந்து உரையாடிய போது தமிழகமே நெற்றியை நிமிர்த்திக் கொண்டதாகத் தோன்றியது. கருத்தில் வலிமைமிக்க கலைஞரின் வாரிசு, வரலாறு எழுதவேண்டும். பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் கோரிக்கை மனுவின் அம்சங்களில் பெரும்பாலானவை நிதி சார்ந்தவையே! எனினும் பிரதமர் சந்திப்பின் போது தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழநிவேல் தியாகராஜன் தவிர்க்கப்பட்டு இருப்பது சமயோகித சாமர்த்தியம்.

பிரதமருடனான சந்திப்பின் போது தமிழ்நாட்டுத் திட்டங்கள் பற்றி எழுத்து வழி அளிப்பு மட்டுமே பிரதானம். கழுத்து வழி விளக்கங்கள் அளிக்க நேரம் இடம் தராது. எனவே சுயமான சேமநல விசாரிப்புகளில் தான் அதிக நேரம் செலவிடப்பட்டு இருக்க வேண்டும். இவை தொடர்பான புல்லட் பாயின்ட் கோரிக்கைகள் ஊடகங்களில் உலவி வருகின்றன. இந்த கோரிக்கைகள் ஒரே மனுவில் வரிசை கட்டி வழங்கப்பட்டு இருக்கின்றனவா? இதைத் தெரிந்துகொள்ள இயலவில்லை. எனினும் மனுப் பரிமாற்றத்தின் போது கைமாறிய மனுவை மட்டும் வைத்துப் பார்த்தால் அது ஒற்றை மகஜர் என்றே தோன்றுகிறது. அடையாளப்பூர்வமாக ஒற்றை மனு, மற்றவை கற்றை மனுக்களாகவும் வழங்கப்பட்டு இருக்கலாம்.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் எனத் தனித்தனி அமைச்சகங்கள் உண்டு. ஒரே அமைச்சகம் சார்ந்த கோரிக்கைகள் என்றாலும் அதனுள் உள்ள தனித்தனிப் பிரிவுகள் தான் கவனிக்கும். ஒரே மனு எனில் அதை எந்த துறைக்கு அனுப்பி எதை பரிசீலனை செய்வது என்பது குழப்பமானது. எனவே இனி தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய முக்கியமான பணி உண்டு.

பிரதமரிடம் சமர்ப்பணம் செய்த ஒவ்வொரு கோரிக்கைப் பற்றியும் தனித்தனியே மனுக்களைத் தயார் செய்ய வேண்டும். அவற்றை அமைச்சகத்தின் தொடர்புள்ள கோரிக்கை மனுக்களைத் தனித்தனியே தொகுத்து அவற்றை அந்தந்த ஒன்றிய அமைச்சரிடம் நேரில் சென்று கொடுக்க வேண்டும். பின்னர் அந்தந்த அமைச்சக அதிகாரிகளிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு அந்த கோரிக்கை மனுக்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது என்று தொடராய்வு செய்ய வேண்டும். இதுதொடர்பான மாதாந்திர ஆய்வு நிலைப்பாடுகளை அறிக்கை வடிவில் சமர்ப்பணம் செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். கவனிக்காத கோரிக்கைகள் காலாவதியாகிப் போகும்.

இப்பணிகளைச் செய்யும் பொறுப்பைத் தமிழ்நாடு அரசின் டெல்லிப் பிரதிநிதியான விஜயனிடம் சமர்ப்பித்து விடவேண்டும். மூன்று முறை எம்.பி.யாக இருந்து டில்லி அமைச்சகங்களுக்குள் அடிக்கடி விஜயம் செய்து பழக்கப்பட்டவர் தான் விஜயன். எனவே தனது டெல்லித் தொடர்புகளின் மூலமாக இப்பணியை அவர் சாதித்துக் காட்ட வேண்டும். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றும் இரு உயரதிகாரிகளும் இந்த பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு செயலாற்ற வேண்டும். எறும்பூரக் கல்லும் தேயுமே!

நூருல்லா ஆர்.

ஊடகர்

24-06-2021.

error: Content is protected !!