February 8, 2023

கைது.!பின்னாடி இன்னான்னா? ஜூம் பண்ணி பார்ப்போம். (முடிந்தால் பிள்ளைகளிடம் படித்துக் காட்டுங்கள்)

ல விஷயங்களில் இவர்கள், இவர்கள் கைது என பேப்பரில் கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள். மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள். தற்செயலாய் சிக்கும் புதியவர்களின் நிலைமை இருக்கிறதே. அதுதான் இங்கே பெரும்பான்மை. ஆனால் அவர்களில் பலருக்கும் சட்டத்தின் பின்விளைவுகள் என்பது மருந்துக்கும் தெரியாது. சட்டம் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று இந்த காலத்து தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கெத்து காட்டுகிறார்கள். மாஸ் ஹீரோக்களின் பில்டப் சினிமாக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து கும்பலைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. சாதாரண அடிதடி என்று வைத்துக்கொள்வோம். விசாரணைக்கு என்று காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். காவல் நிலையத்தில் நுழையும்போதே பின்னங்கழுத்தில் அடி விழும். டூட்டிக்கு புதிதாக வருபவர்கள், என்ன கேசு இது என்று நாலு தட்டு தட்டிவிட்டுத் தான் மற்ற வேலையையே பார்ப்பார்கள். அதே மாதிரி, அடுத்த டூட்டிக்கு வரும்போது அக்யூஸ்ட்டை பார்க்க வாய்ப்பு இருக்காது என்று நினைத்து போகும்போது கொஞ்சம் விருந்து வைத்து விட்டு தான் செல்வார்கள். சுருக்கமா சொன்னா இருக்கிறவங்க, வர்றவங்க, போறவங்கன்னு எல்லார்கிட்டயும் விழும்.

இவ்வளவு விழுந்தாலும் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே காத்துக் கொண்டிருப்பதால் பெரிதாக ஒன்றும் தெரியாது. யாரையாவது பிடித்து எப்படியாவது பேசி எதையாவது கொடுத்து வெளியே கொண்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். அதாவது அடித்ததோடு விட்டுடுவாங்க என்ற அசால்டான நம்பிக்கை . ஆனால் எப்ஐஆர் போட்டு ரிமான்ட் செய்தே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி காவல்நிலையத்தில் பலரும் பேசிக் கொள்ளும் போதுதான், லாக்கப்பில் இருக்கும் பார்ட்டிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போதுகூட அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாது.

நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு செல்லும்போது கூட ஏற்கனவே தெரிந்த காவலர்கள்தான் வருவார்கள். கூடவே குடும்பத்தினரும் உறவினர்களும் வருவார்கள். நீதிபதி ரிமாண்ட் செய்து சென்ட்ரல் ஜெயிலுக்காக வேனில் ஏற்றும் வரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அருகில் பார்க்க முடியும். இதற்குப் பிறகுதான் சோதனைகள் ஆரம்பிக்கும். வேனில் ஏற்றிய பிறகு குடும்பத்தினர் உறவினர்கள் கட் ஆவார்கள். ரிமாண்ட் க்கு பிறகு சகஜமாக பேசிக்கொண்டு கூடவே வரும் காவலர்கள் சென்ட்ரல் ஜெயிலில் ஒப்படைத்த உடன் காணாமல் போய்விடுவார்கள்.

சென்ட்ரல் ஜெயில்.. முற்றிலும் புதிய இடம்.. உள்ளே அட்மிஷன் போடுவதற்காக அங்க அடையாளங்களை கேட்கும்போதே விதவிதமாக சீர்வரிசை. புழுவை விட விட கேவலமாக கருதி அவர்கள் நடத்துகிற விதத்திலேயே ஜென்மம் செத்துப் போய்விடும். அதற்கப்புறம் சிறையில் பிளாக் என்கிற வகுப்பு. விதவிதமாக தடுமாற்றங்கள் கலந்து வீசும் அங்கு ஏகப்பட்ட பேருடன் விசாரணைக் கைதி என்ற அந்தஸ்தோடு குடும்பம் நடத்திய ஆக வேண்டும். டாய்லெட் காலியாக இருக்கும் நேரம் பார்த்து அதைப் பிடித்து போய் வருவதற்குள்.. மூன்று வேளையும் கியூவில் நின்று தட்டில் வாங்கித் தின்னுவதற்குள்.. கக்கூசை கழுவ விடலாம் துணிகளை துவைக்க விடலாம் தோட்ட வேலை செய்ய விடலாம் இன்னும் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையையும் செய்யச் சொல்லலாம் வார்டன்கள் சொல்வதை செய்யாவிட்டால் அடுத்தடுத்த கட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டே போகலாம்.

ஜெயிலுக்குப் போன ஓரிரு தினங்கள் தொடர்ந்து குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பிஸ்கட் பழங்களுடன் வந்து அக்கறையாக பார்ப்பார்கள்.. ஜாமின் கிடைப்பதில் தாமதம் ஆகி உள்ளே இருக்க இருக்க, அக்கறை யோடு வந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களின் வருகை என்பது குறைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் அடியோடு கூட நின்று போகும். ஜாமீன் கிடைத்து வெளியே வரும்வரை ஏண்டா இந்த தவறை செய்தோம் என்று நினைத்து வருந்தாதே தருணமே இருக்க முடியாது. வாரங்கள் கழித்து மாதங்கள் கழித்து ஜாமீனில் வந்த பிறகு, பட்டதெல்லாம் போதும் என நொந்து போய் சொந்த வேலையை பார்க்க ஆரம்பித்து இருப்பார். அப்படியே ஜெயில் சமாச்சாரத்தையும் மறந்து விடுவார்.

ஆனால் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்திலிருந்து நேரில் ஆஜராகும்படி சம்மன் வரும். அப்போது பார்த்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். ஒரு வியாபாரம் ஆரம்பித்து நன்றாக போய்க் கொண்டிருக்கலாம். அல்லது புது மாப்பிள்ளையாக மாமனார் வீட்டில் கெத்து கூட காட்டிக் கொண்டிருக்கலாம். எல்லாமே தொலைஞ்சு போச்சு என்று மறந்துவிட்டிருந்தால் இந்த நேரத்தில் பார்த்தா இந்த எழவு வரவேண்டும் என நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டு உட்காருகிற கட்டம் அது.

குற்றப்பத்திரிகை தாக்கல் விசாரணை என நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் அலைய நேரிடும். உள்ளூரில் வழக்கில் சிக்கி உள்ளூர் நீதிமன்றத்தில் அலைய நேரிட்டால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் வெளியூரில் தப்பு செய்துவிட்டு அங்கேயே அங்கேயே மாட்டி அந்த நீதிமன்ற எல்லைக்குள் வழக்கு நடந்தால், சுத்தம். ஒவ்வொரு முறையும், அன்றைய தின எல்லா வேலைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு வழக்குக்காக ஊரு விட்டு ஊரு போய் வரும் வரை நாய் அலைச்சல்தான்.

சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு குளிக்கப் போய் அங்கு தகராறு செய்துவிட்டு வழக்கு பதிவாகி சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்காசி நீதிமன்றத்திற்கு இன்றைக்கும் நடப்பவர்கள் பலருண்டு. இதே போல நீண்டதூர மாவட்டங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கு ஏதாவது ஒரு விஷயத்தில் தகராறு வழக்கு பதிவாகி சொந்த ஊருக்கும் தகராறு நடந்த ஊர் நீதிமன்றத்திற்கும் அலையும் பரிதாபங்கள் பற்றிக் கேட்டுப் பாருங்கள். விதவிதமான கண்ணீர் கதைகள் கிடைக்கும்.  சரி போகட்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு கட்டம். இதற்குப் பிறகு?

வேறென்ன? தண்டனை கொடுத்தால் உள்ளே போக வேண்டியதுதான். விடுதலை என்றால் ஆள விடுங்கடா சாமி என்று புத்தர் ரேஞ்சுக்கும் போகலாம். எல்லாமே பழகிவிட்டதால் அடுத்த ரவுண்ட்டையும் பார்த்துவிடலாம் என இன்னும் திமிர் அதிகமாகலாம். அப்புறம் வழக்குகளுக்கான செலவு, சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே அவமானம்.. போன்றவை உள்ளூர் வரிகள்..
முக்கிய குறிப்பு.. சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாமல் விட்டது தான் அதிகம்..!

ஏழுமலை வெங்கடேசன்