September 18, 2021

அப்போலோவில் அட்மிட் ஆன ஜெயலலிதா என்னதான் நடந்துச்சு? – டாக்டர்கள் பேட்டி முழு விபரம்

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்தாண்டு செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அரசு தரப்பில் இன்று விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பாலாஜி, பாபு ஆப்ரஹாம் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

அப்போது சொன்னது இவைதான்:

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவுக்கு உலகின் உன்னத சிகிச்சை முறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்வதேச மருத்துவ முறைகளுக்கு உட்பட்டுதான் சிகிச்சை வழிமுறைகள்  அமைந்தன. ஆனால் அவர் மரணத்திற்கு பிறகு சிகிச்சை தொடர்பாக பல்வேறு விதமான வதந்திகள் உலவுகின்றன. அத்தகைய சந்தேகங்களை தீர்ப்பது அவசியம் என்பதால் அதற்கு விளக்கம் அளிக்கவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.  இது அப்பல்லோ மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ள சந்திப்பு அல்ல. தமிழக அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்தான் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

appolo jaya 6

அவர் முதன் முதலாய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பொழுது சுய நினைவுடன்தான் இருந்தார்.  சிகிச்சைக்கு கொண்டு வரும்போது ஜெயலலிதா சுயநினைவில்தான் இருந்தார்.முதலில் காய்ச்சல் மற்றும் நீரிழப்பு காரணமாகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதற்கு பின்னர் நடத்தப்பட்ட சோதனைகளின் பொழுது அவருக்கு கடுமையான நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்றின் காரணமாக அவருடைய நுரையீரல், இதயம் ஆகியவை கடுமையாக பாதிக்கபட்டிருந்தன. மூச்சு விடுவதில் கடும் சிரமம் உண்டானது. மேலும் அவரது ரத்தத்தில் பாக்டீரியா அதிகமாக கலந்திருந்தது. எனவே நாங்கள் தொடர்ந்து  அவரது உடல்நிலையை ஆய்வு செய்து வந்தோம்.

அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவான கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருந்தது. மேலும் சிறுநீரகத் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவருக்கு ‘செப்சிஸ்’ எனப்படும் உடல் நலக் குறைவு உண்டானது.  இதனுடைய தொடர் விளைவுகளே அவருக்கு மேலும் தொடர் உடல் நலக் குறைபாடுகளை உருவாக்கியது.

மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் அவருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. பின்னர் அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகளின் தீவிரத் தன்மையின் காரணமாக, மருந்துகள் மூலம் வரவழைக்கப்பட்ட உறக்கத்தில் இருக்க வைக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை மூலம் எழுப்பப்பட்ட அவருக்கு பிஸியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதற்கு இடையே சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கான அனுமதி கடிதத்தில் கையெழுத்திட வேண்டி 22.10.16 அன்று கட்சியினர் அவரை அணுகினர். கடிதம் அவருக்கு படித்துக் காட்டப்பட்டது. அப்பொழுது அவர் சுய நினைவுடன்தான் இருந்தார்.அப்பொழுது கையில் ட்ரிப் ஏற்றப்பட்டதன் காரணமாக கை வீங்கியிருந்தது.  எனவே கையெழுத்திட முடியாத காரணத்தால் அவர் கைரேகை பதித்தார். இதற்கு மருத்துவர் பாபு சாட்சியாக இருந்தார்.

அவர் முடியும் போதெல்லாம் எங்களுடன் உரையாடினார். தொலைக்காட்சி பார்த்தார். தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொண்டார். அவை அனைத்தும் உண்மைதான். பின்னர் ட்ரக்கஸ்டாமி சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு நினைவு முழுமையாக திரும்பியது. ஆனால் தொண்டையில் துளையிடப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலையில் எங்களுடன் சைகை முறையில் உரையாடுவார். மருத்துவர் பீலேவின் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்தும் அப்போது அவர் கேட்டறிந்தார்.

சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மாலை அவருக்கு இருதய அடைப்பு ஏற்பட்டது. அப்போது அங்கே மருத்துவ பணியாளர்கள்  இருந்ததால் உடனடியாக அவருக்கு ‘சி.பி.ஆர்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலன் அளிக்காததால் அவருக்கு ‘எக்கோ’ கருவி பொருத்தப்பட்டது. அப்போது அதை விட செய்வதற்கான சிறந்த வழி ஒன்றும் இல்லை.

ஆனால் எக்கோ கருவி பொருத்தப்பட்ட மறுநாளும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. நின்ற இருதயத்துடிப்பானது மீண்டும் செயல்படவே இல்லை. இந்த நிலையில்தான் சசிகலா மற்றும் ஜெயலலிதாவின்  குடும்பத்தார், அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அன்று நள்ளிரவு வாக்கில் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. பின்னர் சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக உடலியல் துறை தலைமை மருத்துவரான திருமதி சுதா சேஷய்யன் தலைமையிலான குழுவினர்  அவரது உடலை ‘எம்பார்மிங்’ எனப்படும் பதப்படுத்துதல் முறைக்கு உட்படுத்தினர்.

பிரபலமான தலைவர்கள் மரணம் அடையும் பொழுது அவர்களது உடலை ‘எம்பார்மிங்’ செய்வது வழக்கமான ஒன்றுதான். முன்னாள் முதலவர் எம்.ஜி.ஆர் உடலும் இதே முறையில்தான் ‘எம்பார்மிங்’ செய்யப்பட்டது. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பபடும் பொழுது பார்வையாளர்களால் எதுவும் ஆகாமல், சிதையாமல்  இருக்கவே இம்முறை பயன்படுத்தப்படுகிறது. அன்று நள்ளிரவு 12.15க்கு துவங்கிய இந்தப்பணி 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அவரது உடலில் 5.5 லிட்டர் எம்பார்மிங் திரவமானது உட்செலுத்தப்பட்டது.

அவரது உடல்நிலை பற்றி  சசிகலா, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு சீரான கால அளவில் எடுத்துரைக்கப்பட்டது.  ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதன்முறையாக மருத்துவனைக்கு   வந்திருந்த பொழுது கண்ணாடிக் கதவு  வழியாக ஜெயலலிதாவைப் பார்த்தார்.இரண்டாவது முறையாக வந்த பொழுது பார்க்கவில்லை.  சற்றும் எதிர்பாராத விதமாக இருதய அடைப்பு ஏற்பட்டிருக்காவிட்டால் அவர் ஒரு வாரத்தில் வீடு திரும்பியிருப்பார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் கால்கள் உட்பட உடலின் எந்த பாகமும் அகற்றப்பபடவில்லை. மேலும் அவருக்கு எந்த விதமான உறுப்பு மாற்று சிகிச்சையும் செய்யப்படவில்லை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தினசரி விளக்கமளிக்கபப்ட்டது. இது குறித்த சந்தேகங்கள் நியாயமானவை அல்ல. ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5.30 கோடி வரை செலவானது. சிகிச்சைக்கான பில் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேல் விபரம் அப்பல்லோ மருத்துவமனை மேலாண்மை இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ரிச்சர்ட் பீலே கூறும்போது, “தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் ஜெயலலிதா சிகிச்சை குறித்து விளக்கமளிக்க சென்னை வந்திருக்கிறேன்.தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.”  என்று குறிப்பிட்டார்.