பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. ‘பிராமணர்களே இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ ‘பிராமண, பனியாக்களே உங்களைத் தேடி வருகிறோம்’, ‘பழி வாங்கியே தீருவோம்’ போன்ற வாசகங்கள் கொண்ட சுவர்களின் படங்கள் சமூக ஊடகங்களை அலங்கரித்தன. இதன் விளைவாக நேற்று #BrahminLivesMatter என்ற ஹேஷ்டேக் உலா வரத்துவங்கி மதியத்துக்குள் டிவிட்டரில் முன்னணியில் டிரெண்டிங் ஆகும் அளவுக்குப் போனது. இந்த ஹேஷ்டேக் ஒரிஜினல் ஐடியா இல்லை. அமெரிக்காவில் அப்பாவி கறுப்பர்கள் போலீசாரால் அதிக அளவில் கொலையுறுவதை கண்டிக்க துவங்கப்பட்ட #BlackLivesMatter ஹேஷ்டேக்கின் உல்டாதான்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘பிராமணர்கள் இந்தியாவின் யூதர்கள்’ என்று பதிவுகள் இடத் துவங்கி விட்டார்கள். எந்த ஒரு உயிரும் பறிக்கப்படக் கூடாது என்பதில் நம்மில் பெரும்பாலானோருக்கு மாற்றுக் கருத்து இருக்காது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் உயிர்கள் பிரத்தியேகமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஒரு ஹேஷ்டேக் போட்டுப் புலம்பும் அளவுக்கு பிராமணர்கள் இந்தியாவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்களா? பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாகி, ரோமன்களால், எகிப்தியர்களால், பின்னர் முஸ்லிம்களால் கொடும் வன்முறைகளுக்கு ஆளாகி சொந்த ஊரிலேயே வாழ இயலாமல் துரத்தி அடிக்கப்பட்டு ஐரோப்பாவில் அகதிகளாக வாழ்ந்து பல நூறாண்டுகள் கேவலமாக நடத்தப்பட்டு பின்னர் அங்கும் கொடும் வன்முறைகளை, இ*ன ஒ*ழிப்பை எதிர்கொண்ட யூதர்களும் பிராமணர்களும் ஒன்றா?

இந்தியாவில் வரலாற்று ரீதியாக பிராமண உயிர்கள் சிறப்புப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்திருக்கின்றன. யாராலும் சுலபமாக மேலே கை வைத்து விட இயலாத லெவலுக்கு கெத்து காட்டி வந்தவர்கள் பிராமணர்கள். அதற்கு முக்கிய காரணம் பிரம்மஹத்தி தோஷம் எனும் சாபம். பிராமணர்களை கொலை செய்பவர்களுக்கு இந்தப் பாவம் வந்தடையும். அது அவர்களுக்கும் அவர்கள் வம்சாவளிகளுக்கும் தீரா வலிகளை ஏற்படுத்தும் என்று இந்துப் புனித நூல்கள் எச்சரிக்கின்றன . ரிக் வேதத்தில் விரித்ரா எனும் கொடூரனை இந்திரன் கொலை செய்கிறான். விரித்ரா ஒரு பிராமணன் என்பதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து பக்கவாதம் வந்து நகரவே இயலாமல் பாதிக்கப்படுகிறான். பின்னர் பிரம்மா தலையிட்டு அதை சரி செய்ய வேண்டி வருகிறது. (இந்தக் கதையில் அந்த பிரம்மஹத்தி ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள் என்பது கூடுதல் விசேஷம்!)போலவே அரை-பிராமணன் ராவணனைக் கொல்லும் ராமனையே பிரம்மஹத்தி தோஷம் பீடித்து அதன் மூலம் பல பரிகாரங்கள் செய்ய வேண்டி வந்தது என்பது ஐதீகம். பிரம்மாவின் ஒரு தலையை கொய்த சிவனைக் கூட அந்த தோஷம் விடவில்லை.

வரலாறு முழுக்க பல்வேறு புராணங்களிலும் இலக்கியங்களிலும் இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டே வந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டு இலக்கியமான ‘பத்மாவத்’ தில் ராணி பத்மாவதி குளிக்கும் போது ராஜகுரு அவளை மறைந்திருந்து ரசித்து விடுகிறான். அது ராஜா ரத்னசேனனுக்குத் தெரிய வந்து விட அந்த ராஜகுருவை நாடு கடத்தி விடுகிறான். ‘என்னை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து விடக் கூடாது என்பதால்தான் உன்னை சும்மா விடுகிறேன், இல்லையேல் இந்நேரம் உன் தலை தரையில் வீழ்ந்திருக்கும்!’ என்று எச்சரிக்கிறான். (இன்றளவும் பிராமணக் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் ஆகப்பெரிய வசைச்சொல் இதுதான். என் அப்பாவே கூட என்னிடம் கோபப்பட்ட தருணங்களில் ‘போடா பிரம்மஹத்தி’ என்றுதான் திட்டுவார்.)

இப்படி பல்வேறு வகைகளில் பிராமண உயிர்கள் பாதுகாக்கப்பட்டே வந்திருக்கின்றன. சும்மா அப்படி இப்படியெல்லாம் பிராமணர்கள் மீது கை வைத்து விட முடியாது என்ற லெவலில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் புராணங்கள்தானே என்று சொல்லலாம். ஆமாம் இவை எல்லாமே வெறும் கற்பனைக்கதைகள்தான். ஆனால் பல்வேறு விதங்களில் கதைகள் நிஜ வாழ்வை பிரதிபலிக்கவே செய்கின்றன. அவற்றைத் தாண்டியும் பிராமணர்களுக்கு எதிராக பெரும் வன்முறைகள் இந்தியாவில் அரங்கேறியதாக தகவல்கள் இல்லை. அப்படி எல்லாம் இல்லை, வரலாறு முழுக்க பிராமணர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்திருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் அவற்றுக்கான ஆதாரங்களை புராணங்களில் அல்லது வேறு வரலாற்று நூல்களில் இருந்து எடுத்துக் கொடுக்கலாம்.

சுதந்திரத்துக்குப் பின்னும் கூட பிராமணர்களுக்கு எதிராக இ*ன ஒ*ழிப்பு மாதிரி பெரிய முயற்சிகள் நடந்ததாக தகவல் இல்லை. பிராமணர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று பெரியார் கூக்குரல் விடுத்தாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரைக் கடுமையாக விமர்சிக்கும் பிராமணர்களே கூட புகார் வைக்கையில் மயிலாப்பூரில் சிலர் பூணூலை அறுத்தார்கள். திருநெல்வேலியில் பலர் குடுமியைப் பிடித்து இழுத்தார்கள் என்றுதான் சம்பவங்களை சொல்வார்கள்.

ஒரு பக்கம் பிராமணர்களுக்கு எதிரான வன்முறைகள் இப்படி சில்லறைத்தனமாகவே இருக்கிறது. மறுபக்கம் பிராமணர்களின் ஆதிக்கம் அவர்களின் மக்கள் தொகையை விட பற்பல மடங்கு அதிகமாக இன்றளவும் இருக்கிறது. இந்தியாவில் எந்தத் துறையிலும் பிராமணர்கள் ஆதிக்கம் சுமார் 30-35% வரை இருக்கிறது. இந்தியாவின் செல்வங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் பிராமணர்கள் வசம் இருக்கிறது. சராசரி ஆண்டு வருமானத்தில் ஜெயின்களுக்கு அடுத்து பிராமணர்கள்தான் இடம் பெற்றிருக்கின்றனர். வருவாய் சமநிலையின்மை பிராமணர்கள் மத்தியில் மிகவும் குறைவாக இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் பிராமண சமூக முன்னேற்றத்துக்காக (!) பிரத்தியேகமாக அரசுத் துறை வைத்து சிறப்பு திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார்கள்.

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொண்டு வர முயலும் அரசு கூட முன்னேறிய சாதியினருக்கு மிக அதிக வரம்பு வைக்க வேண்டிய நிலைதான் நிலவுகிறது. அப்படிப்பட்ட பெரும் செல்வாக்குடன்தான் இன்றும் பிராமணர்கள் வாழ்கின்றனர். அதுவும் எவனோ ஒரு மூடன் சுவற்றில் கிறுக்கி விட்டான் என்பதையே டிவிட்டரில் முன்னணியில் டிரெண்டிங் செய்யக் கூடிய அளவில் அவர்கள் செல்வாக்கு இருக்கிறது. இதெல்லாம் போதாது என்று யூதர்களோடு தங்களை ஒப்பிட்டுக் கொண்டு அங்கலாய்த்துக் கொள்ளும் தடித்தனமும் கூட பிராமணர்களுக்கு இருக்கிறது.

மாறாக, பெண்கள், ஒடுக்கப்படும் சமூகத்தினர் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். தேசிய குற்றவியல் ஆவண அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் Crime Against Women, Crime Against Dalits, Crime Against Scheduled Tribes என்று தனியாக செக்சன்கள் இருக்கின்றன. 2021 அறிக்கையின்படி ஒரே ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான 51,000 வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (உத்திரப் பிரதேசத்தில் மட்டுமே 13,000.) பட்டியலின ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 9,000. இவை இரண்டுமே முந்தைய ஆண்டுகளில் இருந்து அதிகரித்துள்ளன. வரதட்சிணை இறப்பு, குடும்ப வன்முறை, வன்புணர்வு, பாலியல் கொடுமைகள் போன்ற பெண்களுக்கு எதிராக 4,28,000 குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன. முந்தைய ஆண்டை விட 15% உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் தலித்துகளுக்கு, பெண்களுக்கு, ஆதிவாசிகளுக்கு எதிரான சுவர்க்கிறுக்கல்கள், இலக்கியங்கள், திரைப்படங்கள், புனித நூல்களை கணக்கிட ஒரு கமிட்டி பத்தாது. அதற்காக பிரத்தியேகமாக ஒரு படையை நியமிக்க வேண்டி இருக்கும். ஆகவே, பிராமணர்களே, சும்மா எவனோ ஒரு லூசு சுவரில் எதையோ கிறுக்கி விட்டான் என்று பயப்படாதீர்கள். நூற்றாண்டுகளாக அரசர்கள் பிராமணர்களைப் போற்றிப் பாடும் கலாச்சாரம் இன்னமும் முடிவுக்கு வந்து விடவில்லை. நமது அரசுகள் அந்த ஆளை விட மாட்டார்கள். அவன் கிடைக்கவில்லை எனினும் வேறு ஒரு அப்பாவியைப் பிடித்து உங்கள் முன் நிற்க வைத்து அவனுக்கு தண்டனை அளித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். பெண்கள், தலித், ஆதிவாசிகளுடையது போல அற்பமானதா என்ன பிராமண உயிர்? இந்திரனையும் ராமனையுமே நீங்கள் சும்மா விடவில்லை. ஒரு தில்லிக்கார லூசுப் பயலை விட்டு விடுவீர்களா? போங்க பாஸ், ரொம்ப டென்ஷன் ஆகாம போய் உங்கள் சிம்மாசனத்தில் திரும்ப உட்கார்ந்து கொள்ளுங்கள். யாராவது தூக்கிக் கொண்டு ஓடி விடப் போகிறார்கள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!