இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள்! – ராமதாஸ் காட்டம்!

இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள்! – ராமதாஸ் காட்டம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒரு கட்டமாக அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்திருக்கின்றன. அதன் பயனாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் அவர் உட்பட இரண்டு பேர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இத்தனை நாட்களாக இரு குழுக்களும் எழுப்பிய அத்தனை சத்தங்களும் இதற்காகத்தான் என்பதை இணைப்பு விழா வைபவம் நிரூபித்திருக்கிறது.

அதிமுகவின் இரு அணிகளும் எதற்காக உடைந்தன… எதற்காக இணைந்தன என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். கடந்த 6 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பன்னீர்செல்வம் அணியும், பன்னீர்செல்வம் அணி மீது எடப்பாடி பழனிசாமியும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் அரசியலில் ஏற்பட்ட முடைநாற்றம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் தமிழக அரசியல் அரங்கிலிருந்து விலகாது.

அதிமுகவிலிருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் இணைப்புக்காக முன்வைத்த முதல் நிபந்தனை சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர்களின் அந்த நிபந்தனை இன்று வரை ஏற்கப்படாத நிலையில் எந்த அடிப்படையில் அவர்கள் இணைந்தார்கள் என்ற தமிழக மக்களின் வினாவுக்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.

 

அதிமுகவின் எந்த அணியைச் சேர்ந்தவர்களும் உத்தமர்கள் அல்லர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டாலும் கூட, சசிகலாவின் காலில் விழுந்து அரசியல் நடத்தியவர்கள்தான். சசிகலாவுக்கும், இவர்களுக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. அதிமுகவில் இப்போது நடைபெற்றிருப்பது சுயநல, சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம்.

அதிமுகவிலிருந்து விலகிய பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கடந்த ஆறு மாதங்களில் தமிழக மக்களின் நலனுக்காக ஏதேனும் ஒன்றையாவது செய்திருப்பார்களா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கடந்த 6 மாதங்களில் மக்கள் நலனுக்கான ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தி இருக்குமா? கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கோடி களைக் கொட்டிக்கொடுத்து வாங்கிய பதவியை தக்கவைத்துக் கொள்வதில்தான் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினார்கள். அதேபோல், இழந்த பதவியை எதை விற்றாவது பிடித்து விட வேண்டும் என்பது மட்டும்தான் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் ஒற்றை நோக்கமாக இருந்தது.

இணைப்பின் மூலம் இரு அணியினரும் தங்களின் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டனர். ஆனால், பாவம் இவர்களை நம்பி, வாக்களித்த மக்கள்தான் இப்போது ஏமாளிகளாகியிருக்கின்றனர். நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு பறிபோன போதும், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும் அதன் பாதிப்புகளை சரி செய்ய துரும்பைக்கூட அசைக்காத ஆட்சியாளர்கள் இப்போது பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் இரவு பகலாக பேச்சு நடத்தி இணைந்திருப்பதி லிருந்தே இவர்கள் எத்தகைய சந்தர்ப்பவாதிகள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள் செய்த துரோகத்திற்கான தண்டனை நிச்சயம் உண்டு. அதிலிருந்து இவர்கள் தப்ப முடியாது.

இயற்கை எதிராக நடக்கும் எந்த வினையையும் இயற்கையே சரி செய்யும். தமிழகத்தில் நடந்துள்ள கொள்ளைக்கான கூட்டணியையும் மண்ணை கவ்வ வைக்கும் வலிமை இயற்கைக்கும், மக்களுக்கும் உண்டு. வெகுவிரைவில் இயற்கையும், மக்களும் அவர்களின் வலிமையை நிரூபிப்பார்கள். அப்போது இருக்க வேண்டிய இடத்தில் அனைவரும் இருப்பார்கள். அப்போது புதியதோர் தமிழகம் அமையும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!