November 27, 2022

தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த அப்டேட் அலெர்ட்!

RTI என்று பொதுவாக அறியப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) இல்லையெனில், அரசு நிர்வாகத்தில் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவு படுத்தும் குறைந்தபட்ச வாய்ப்புகூட இருந்திருக்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. அதுசார்ந்து — அப்போதும் இப்போதும் விவாதங்கள் உண்டு. இந்தச் சட்டம் முழுமையாக இல்லை; எல்லா அதிகார அமைப்புகளையும் உள்ளடக்கியதாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

ஆனாலும் சாதாரண இந்தியக் குடிமகனுக்கு அரசு நிர்வாகம் தொடர்பாக ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் சாத்தியமான ஒரே உடனடி வழி, இந்த ஆர்.டி.ஐ. சட்டம்தான். இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களுடன் தகவல் உரிமை (திருத்தம்) சட்டம் – 2019 பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்டது. இது, தகவல் ஆணையர்களின் தன்னாட்சி சுதந்திரத்தை பாதிப்பதாக விமர்சிக்கப்பட்டது.

1987-ம் ஆண்டு வாக்கில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீர் வட்டாரத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர் பிரச்சினையை முன்னெடுத்தது எம்.கே.எஸ்.எஸ். என்ற சமூக இயக்கம். உள்ளூர் அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியது. தகவல் அறிவது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை, அரசு நிர்வாகத்தின் சீர்கேடுகளுக்கு தகவல்களை மூடி மறைப்பதே காரணம் என்ற கருத்தை வலியுறுத்தி, அந்த அமைப்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டது. அதன் எதிரொலியாக, முதலில் ராஜஸ்தானிலும் பிறகு சில மாநிலங்களிலும் அதனைத் தொடர்ந்து 2005-ல் சட்டமாகவும் உருப்பெற்றது தகவல் அறியும் உரிமை.

எம்.கே.எஸ்.எஸ். என்ற தொழிலாளர், விவசாயிகள் மேம்பாட்டு அமைப்பின் முகமாகத் திகழ்ந்தவர், அருணா ராய். அருணா சென்னையில் பிறந்து, தில்லியில் வளர்ந்தவர். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று புதுவை உள்பட பல இடங்களில் பணியாற்றியவர். ராஜஸ்தானில் பணியாற்றுகையில், சக நண்பர்கள் ஒத்துழைப்புடன் எம்.கே.எஸ்.எஸ். இயக்கத்தை நிறுவி, தீவிரமாகச் செயல்பட்டார். அதற்காக தனது ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்தே விலகினார். அந்த நண்பர்கள் குழுவைச் சேர்ந்த பங்கர் ராய் என்பவரை பின்னாளில் திருமணம் செய்துகொண்டார். (அருணாவைப் போலவே அவரும் ஒரு முன்னோடி சமூகச் செயற்பாட்டாளர். ஐ.ஏ.எஸ். அதிகாரி. கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை துறைசார் நிபுணர்கள் மூலமாக வழங்கும் “Barefoot College” என்ற வெற்றிகரமான இயக்கத்தின் மூலவிசை).

அருணா – பங்கர் தம்பதியர், தங்களின் சமூக அர்ப்பணிப்புக்கு எந்த இடையூறும் வந்து விடக் கூடாது என்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்ற முடிவை எடுத்தார்கள் என்பது அவர்கள் பற்றிய இன்னொரு முக்கியமான பதிவு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் பத்து ரூபாய் விண்ணப்பக் கட்டணத்துடன் அரசுத் துறைக்கு தகவல் கேட்டு விண்ணப்பிக்கலாம். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் கிடையாது. ஆனால், வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள் என்பதற்கு உரிய அதிகாரியிடமிருந்து சான்று இணைக்க வேண்டும். வறுமையிலிருப்பவன் தகவல் உரிமை என்ற பேச்சை எடுப்பானா?

தமிழகத்தில், மாநிலத் தகவல் ஆணையம் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கிறது. நான்கு தகவல் ஆணையர்கள் மற்றும் ஒரு தலைமைத் தகவல் ஆணையர் தலைமையில் இது இயங்கி வருகிறது. இந்தத் தகவல் ஆணையத்தின் இணையதளத்தில் 2006முதல் விரிவான ஆண்டறிக்கை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் 2016-க்குப் பிறகு அப்படியான அறிக்கை ஏதும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் மேலான கவனத்துக்கு உரியது.

இத்தனைக்கும், “முன்மாதிரியாகத் திகழும் தமிழகத் தகவல் ஆணையம்” என்ற தலைப்பில் முன்னணித் தமிழ் நாளிதழ் ஒன்றில் கடந்த ஆண்டு இந்த ஆணையத்தின் இணையதள செயல் பாட்டைப் பாராட்டி ஒரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. “மாநிலத் தகவல் ஆணையம் அதன் இணைய தளத்தில் எல்லா விவரங்களையும் இடம்பெறச் செய்து பிறதுறைகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது” என்பது அச் செய்தியின் வரிகள்.

நான்காண்டுகளாக ஆண்டறிக்கைப் பதிவேற்றம் செய்யப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. யாரேனும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. அந்த ஆண்டறிக்கையில் அப்படி என்ன இருக்கும்? முக்கியமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் சார்பாக பெறப்பட்ட தகவல் உரிமை கோரும் விண்ணப்பங்கள் எத்தனை, அதன் மீதான நடவடிக்கை என்ன என்பது பற்றிய விவரங்கள் இருக்கும்.

2016 ஆண்டறிக்கையின்படி அதிகபட்சமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக 1,43,713 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (60,242), வணிக வரி மற்றும் பதிவு (16,569) உயர்கல்வி (16,897) என்ற வரிசையில் மொத்தம் 3,75,284 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. 11,647 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இப்படியான புள்ளிவிவரங்கள் கொண்டது அந்த அறிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 80 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக முந்தைய புள்ளிவிவரம் கூறுகிறது. சமீபத்திய நிலவரம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. பொதுநிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பது ஊழலற்ற, நேர்மையான அரசாங்கத்துக்கு அடிப்படை. அதற்கான சட்டம்தான் தகவல் உரிமைச் சட்டம். இதுபற்றி, பெரியவர், நடுத்தர வயதினர், 90-களின் வார்ப்புகள் மற்றும் 5ஜி தலைமுறையினருக்கு எந்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது அல்லது ஊட்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை.

ஓர் அமைப்பைப் பலப்படுத்தும் உரிமையையும் அது சார்ந்த வாய்ப்புகளையும் பொதுச் சமூகம் எவ்வாறு கைக்கொள்கிறது என்பதைப் பொருத்தே அச் சமூகத்தில் அறம் ஓங்கும். நமக்கு – எல்லாவற்றுக்கும் யாராவது வரவேண்டியிருக்கிறது அல்லது தரவேண்டியிருக்கிறது.

குறிப்பு :நேற்று (அக்டோபர் 25) தகவல் அறியும் உரிமைச் சட்ட தினம்.

இளையபெருமாள் சுகதேவ்