November 29, 2022

என்னக் கொடுமை இது: சீரழிந்து கொண்டிருக்கும் சிறார்கள் குறித்த கவலை!

மீப காலமாக, வளரிளம் பருவத்துச் சிறார்கள் ஈடுபடும் குற்ற நடவடிக்கைகள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகின்றன. ஊடகங்களில் வெளிவரும் குற்றச் செய்திகளில் பெரும்பாலானவற்றில் சிறாருக்குத் தொடர்பிருப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.

விருதுநகரில் நடைபெற்ற கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இப்படியான கொடூரத்தில் பள்ளிச் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி எதிர்காலத்தை பற்றிய நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

வேலூர் சத்துவாச்சாரியில் பீஹாரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட்டுள்ளார் விசாரணையில் இந்தக் குற்றவாளிகள் பட்டியலிலும் இரண்டு சிறார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஆடு திருட்டைத் தட்டிக்கேட்ட திருச்சி எஸ்.ஐ பூமிநாதன் கொலையிலும் இரண்டு சிறாருக்குத் தொடர்பிருப்பதாகக் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

நேற்று, கஞ்சா விற்றவர்களை விரட்டிப் போன போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியில், அந்தக் கும்பலிலும் சிறுவர்கள் இருப்பதாக வரும் தகவல்கள்  வெறும் அதிர்ச்சி மட்டுமல்ல பெரும்கவலையும்கூட.

அரசுப் பேருந்துக்குள் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் மது அருந்தும் வீடியோ வைரலாகப் பரவிய அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் அடுத்ததாக பேருந்துக்குள் கத்தியுடன் பயணிக்கும் மாணவர்களின் வீடியோ வெளிவந்துள்ளது.

மிகச் சமீபமாக, ஒரு வார காலத்துக்குள் தேனியில் ஒரு சிறுவன் ‘ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு…’ என்று தொடங்கி ஆசிரியர்களையும் போலீசாரையும் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தி மிரட்டியும் திட்டியும் பேசும் வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்டது. பள்ளிக்குக் கத்தியுடன் வரும் சிறார், ஒழுக்கமாக இருக்கச்சொன்னாலோ, கடுமையாக நடந்துகொண்டாலோ, ஆசிரியரைக் கத்தியால் குத்தும் சம்பவங்கள் தினசரிகளில் இப்போதெல்லாம் அடிக்கடி வெளிவருகின்றன.  மாணவர்களிடமிருந்து பாதுகாப்புக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதைப் பார்க்க  வேதனையாக இருக்கிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று சொன்ன தமிழ் மரபு என்ன ஆனது? இந்தச் சீர்குலைவு எப்படி நேர்ந்தது? கல்வியின் பயன்தான் என்ன? வருங்கால சமுதாயம் எப்படி இருக்கும்? இவற்றிலிருந்து சிறாரை, மாணவர்களை எப்படி மீட்பது?

அலைபேசி என்ற சாதனத்தை வேறு வழியே இல்லாமல், பெருந்தொற்றின் காரணமாக, பெற்றோரும் ஆசிரியர்களுமே மாணவர்கள் கைகளில் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் கடந்த இரண்டாண்டுகளாக இருந்துவருகிறது. அதை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? அதிலிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்கிறார்கள்? எதுவெல்லாம் அவர்களை ஈர்க்கிறது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை யார் கண்காணித்து அறிவார்கள்? நம்பிக்கை இருந்த எல்லா இடங்களிலும் இப்போது சந்தேகம் மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மிகப் பெரிய கேள்விக்குறியைச் சுமந்தபடியே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிள்ளைகள் மத்தியில் சாகச மனநிலை உருவாகியுள்ளது. தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம் தன்னம்பிக்கை என்பதிலிருந்து விலகி, அடுத்தவரை அச்சுறுத்தும் நிலைக்குக் கீழிறங்கியிருக்கிறது. நல்லொழுக்கமும், கீழ்ப்படிதலும் தங்கள் சாகசங்களுக்கு எதிரானவை என்ற மனப்போக்கு வளரிளம் பருவத்துச் சிறாரிடம், பால் பேதமற்று, மேலோங்கி இருப்பதைக் காணமுடிகிறது.

அடிப்படையில் பள்ளிக் கல்வியில் நீதிபோதனை வகுப்புகளை மீட்டெடுக்க வேண்டியது இன்றைய முதல் தேவை. இத்துடன், மனநல ஆலோசனைகளை, பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், இன்னும் சொல்லப் போனால், பெற்றோருக்குமே வழங்க, அந்தந்த பள்ளிகளில் முன்னெடுப்பது நன்மை பயக்கும். இதை அரசாங்கம் முன்னின்று நடத்தவேண்டும், அல்லது பள்ளிகளை நடத்தும்படி வற்புறுத்த வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் சிறார் இப்படியான குற்ற நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளின் சூழலைப் பாதுகாப்பானதாக ஆக்குவதுடன், மாணவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வளரிளம் பருவத்துப் பிள்ளைகளைச் சட்டம் கரிசனத்துடன் அணுகுகிறது. அதுதான் சரியானதும் கூட. ஆனால் அவர்கள் ஏற்படுத்திவிடும் பாதிப்புகளைச் சரிசெய்வது மிகப் பெரிய சவால். இதிலும் வருமுன் காப்பதே அறிவுடைமையாக இருக்கும்.

இந்தச்சிறார்கள்  எங்கே விரக்தியடைகிறார்கள், எதன் மீதான வெறுப்பு இவர்களை இந்த சூழ்நிலைக்கு தள்ளுகிறது என்பதை நாம் உடனடியாக கண்டறிய வேண்டும்.

அரசு,, ஆசிரியர்களுடனும், பெற்றோருடனும், மனநல மருத்துவர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக நடத்தவேண்டும். இத்தகைய மோசமான நிலையை மாற்றி, மாணவர்களைச் சீர்திருத்தப் பாதையில் வழிநடத்த, தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தங்கவேலு,
துணைத் தலைவர்
மக்கள் நீதி மய்யம்