November 27, 2022

சட்டசபை முடக்கமா? மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க கவர்னர் விளக்கம்!

மேற்குவங்க மாநில சட்டமன்றம் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு, மேற்கு வங்க கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றக் கூட்டத்தொடரை, பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கம் அளித்த கவர்னர் தன்கர், மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைத்ததாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாநிலத்தின் தலைவராக உள்ள கவர்னர், அந்த மாநிலத்திற்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால மேற்குவங்க கவர்னரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். கூடவே, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதுதான் ஜனநாயகத்திற்கு அழகு எனக்கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசியலமைப்பை நிலைநிறுத்த கவர்னர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் விளக்கமளித்துள்ளார். உண்மையை ஆராயாமல் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கருத்துகள், கடுமையானதாகவும், மனதை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டப்பேரவையை ஒத்திவைத்ததாகவும் மேற்கு வங்க கவர்னர் தன்கர் தெரிவித்துள்ளார்