ஐ.. சக்கன்னா புயல் உருவாகுது- தமிழ்நாட்டுக்கு மழை நீர் கிடைக்குமா?

அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என  முன்னரே தகவல் வெளியாகி இருந்த நிலையில்  வங்கக் கடலில் வரும் 29ம் தேதி புயல் சின்னம் உருவாகும் என்றும், இது சென்னை – நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல மாவட்டங்களில் சதத்தை தாண்டி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டு வெப்பம் விளாசி வந்தது. குமரி மாவட்டத்திலும் 100 டிகிரியை எட்டி கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. இதனால் வெளியில் தலைகாட்ட முடியாமல் பொது மக்கள் தவித்தனர்.  இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம், “இந்த செய்தியைப் பார்த்தும் உடனடியாக சந்தோஷப்பட்டது சென்னைவாசிகளாகத்தான் இருப்பார்கள். ஏன் என்றால் சென்னையை வாட்டி வதக்கி வரும் கோடை வெப்பமும், அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் கோடை மழையும்தான்.

ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். அதாவது மழையும், புயல் சின்னமும் சென்னையை குளிர்விக்கவும் செய்யலாம், கண்டும் காணாமல் போய்விடவும் செய்யலாம். அதாவது இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 26ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 2 நாட்களில் இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடையும்.

புயல் சின்னமாக வலுவடைந்து, 29ம் தேதியில் இருந்து தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும். இந்த புயல் சின்னம் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புயல் சின்னம் சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

ஆனால், எத்தனையோ முறை சென்னையை நோக்கி வரும் புயல் சின்னம் கூட அக்கம் பக்கத்து ஊர்களை காலி செய்துவிட்டு போயிருக்கிறது என்பதை சென்னை மக்களும் கவனத்தில் கொண்டு மழை பெய்யும், ஆனால் பெய்யாது என்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வதே நல்லது.

உதாரணத்துக்கு கடந்த ஆண்டு வங்கக் கடலில் உருவான கஜா, பேத்தை, சாகர் போன்ற புயல் சின்னங்கள் அனைத்துமே சென்னையை நோக்கி வருவது போலவே பாவலாக் காட்டிக் கொண்டு இருந்தது. பிறகு கடலூர், நாகப்பட்டினம் என அதன் திசைகளை மாற்றிக் கொண்டு நமக்கு டாடா காட்டியதுதான் மிச்சம். அதற்காக சென்னைக்கு மழை பெய்யாது என்று சொல்லவில்லை. அதை நம்பி காத்திருந்து கண்ணீர் விட வேண்டாம் என்பதற்காகவே இவ்வளவையும் சொல்கிறோம்.

இதையேதான் தமிழ்நாடு வெதர்மேனும் கூறியிருக்கிறார், தற்போதிருக்கும் வானிலைப் புகைப் படங்கள் எல்லாம் தமிழகத்துக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு வார காலத்துக்கும் மேல் இருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இவ்வளவு சீக்கிரம் அறிவித்திருப்பதே மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. புயல் சின்னம் உருவாகி அது தமிழகத்தைக் கடக்கும் என்பதில் சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதியாக உள்ளது.

ஆனால், புயல் சின்னம் என்றால் அதில் பல முரண்களும், மாற்றங்களும் இருக்கும். எனவே காத்திருப்போம். சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போல நடந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான். அடுத்த 3 நாட்களில் இது உறுதியாகிவிடும். சென்னைக்கு மழையும் வேண்டும், தண்ணீரும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மழை வந்தால் நல்லது.