June 23, 2021

ஆடலும், பாடலுமாய் நடக்கும் திருமணங்களை நடத்தி வைக்க மாட்டோம்! – உ.பி. காஜி அறிவிப்பு!

ஆடலும், பாடலுமாய் நடக்கும் திருமணங்களை இனி நடத்தி வைக்க மாட்டோம் என தியோபந்த் மதரஸாவின் மவுலானா அசார் உசைன் அறிவித்துள்ளார். இவர், உத்தரபிரதேச மாநிலம் சஹாரான்பூரில் முஸ்லிம் திருமணங்களை நடத்தி வைக்கும் காஜி பொறுப்பிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

நம் நாட்டில் திருமணம் என்றாலே மணப்பெண்கள் குனிந்த தலை நிமிராமல் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நற்பண்புகளை உள்ளடக்கி குனிந்த தலையுடையவர்களாகவே இருப்பர். அத்துடன் பெற்றோர் சொல்லே மந்திரம் அந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆணும், பெண்ணும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பெற்றோர் சொல்படி கேட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்துவர். அதன்பின்னர் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெண் பார்க்கும் படலங்கள் தொடர்ந்து மணமக்களின் விருப்பங்களுக்கேற்ற திருமணங்கள் நடைபெற்றன.

அதெல்லாம் மலையேறி போய் தற்போது காதல் என்ற என்ற மாயவலையில் சிக்கி புது ஸ்டைலில் கல்யாணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிரது. அதாவது மெஹந்தி சடங்குகள், பஃப்பே  உணவு முறை, திருமணத்துக்கு முன்பே மணகோலத்தில் புகைப்படங்கள் எடுப்பதுடன் ரிசப்ஷன் நிகழ்ச்சி நடத்துவது, மணமக்கள் முன்பு ஆடல், பாடல்கள் உள்ளிட்டவை வழக்கத்துக்கு மாறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதையெல்லாம் விட தற்போது மணமேடைக்கு வரும் பெண்கள் நாணத்தை மறந்து நளினமாக நடனமாடும் திருமணங்கள் நிறைய அரங்கேறுகின்றன. அதிலும்  தற்போது எல்லா மத திருமணங்களிலும்: இந்த, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

அதே சமயம் வட மாநிலங்களில் முஸ்லிம் திருமணங்களின்போது மாப்பிள்ளை ஊர்வலங்களில் மேளதாளங்கள் இடம்பெறுவது வழக்கம். பல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பாட்டு கச்சேரிகளும் நடைபெறும். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குத்தான் உபி.யின் தியோபந்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற முஸ்லிம்களின் மதரஸாவான தாரூல் உலூம் மவுலானாக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தியோபந்த் மதரஸாவின் மவுலானா காஜி அசார் உசைன் கூறும்போது, “இஸ்லாத்தில் மேளதாளம், ஆட்டம், பாட்டங்களுக்கு அனுமதி இல்லை. இவற்றுடன் நடைபெறும் திருமணங்கள் இஸ்லாத்துக்கு விரோதமானது. இனி அதுபோல் நடைபெறும் திருமணங்களை முன்னின்று நடத்தி வைக்க மாட்டோம்” என்றார்.இதற்கு முன்பு ராஜஸ்தானிலும் முஸ்லிம் திருமணங்களை நடத்தி வைக்கும் காஜிகள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உதய்பூர் உட்பட பல நகரங்களில் மேளதாளம், கொண்டாட்டங்களுடன் நடைபெறும் திருமணங்களை நடத்தி வைக்க முடியாது என ஏற்கெனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.