நம்ம பாதுகாப்பு படையினரோட பணியை கொச்சைப் படுத்தீங்கோ!

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல் துறை பல்வேறு உத்திகளை கையாள்கிறது. சட்ட விரோதமாகக் கூடும் கலகக்காரர்களை எவ்வாறு கட்டுப்படுத்தவது? எந்த அளவு காவல் துறை எதிர் பலம் உபயோகிக்கலாம் என்பது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்று விதி இருந்தாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டிய நிலை காவல்துறைக்கு உள்ளது. 1990-களில் காஷ்மீரில் காவல் துறையின் மீதும் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீதும் கல்வீச்சுப் போராட்டம் தொடர்ந்தது காவல் துறைக்கு பெரிய சவாலாக இருந்தது.

காஷ்மீர் நகரில் லால் சௌக் பழைய நகரப் பகுதி, அனந்த்நாக், சிறு பாகிஸ்தான் எனப்படும் புல்வாமா ஆகிய பகுதிகள் மிகவும் நெரிசலான குடியிருப்புகள் கொண்டவை. அங்கு இளைஞர்கள் தொடர்ந்து கல்லெறிந்து வன்முறையில் ஈடுபடுவதை எவ்வாறு கட்டுப்படுத்துவது? ஏதாவது போராட்டம் அறிவிக்கப்பட்டு கூட்டம் கூடிய பிறகு, கூட்டம் கூட்டிய தலைவர்களின் தூண்டுதலாலோ, கட்டுப்பாடின்மையாலோ சில நேர்வுகளில் அமைதியாக கூடிய கூட்டம் வன்முறையில் இறங்கக் கூடும். அப்போது விதிகள்படி குறைந்தபட்ச பலத்தின் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் கல்வீச்சில் ஈடுபடும்போது பிரச்னை பெரிதாகி விடுகிறது.

எல்லா சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளிலும் காவல் துறை மற்றும் நிர்வாகத்தின் விதிகளை மீறி கூடிய மக்கள் கூட்டம், சட்ட விரோத கூட்டமாக அறிவிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் மறைந்திருந்தும், நேராகவும் தாக்கும்போது அதுவும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடும்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கல் தாக்குதலை முறியடிக்க அதற்கேற்றவாறு பதிலடி கொடுக்க வேண்டும். குறைந்தபட்ச பதிலடியான கண்ணீர்புகை பலனளிக்காவிடில் துப்பாக்கி சூடு நடத்தும் கட்டத்துக்கு காவல் துறை தள்ளப்படுகிறது.

இப்போது காஷ்மீரில் காவல் துறை துப்பாக்கி சூட்டில் அபாயகரமில்லா தோட்டாக்கள் உபயோகிப்பதும், அதனால் கலகக்காரர்களுக்கு ஏற்படும் காயங்களும் பிரச்னையாக பேசப்படுகிறது. அபாயமில்லா தோட்டாக்களை காவல் துறை சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளில் பயன்படுத்த வேண்டும் என்று பல டி.ஜி.பி. மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது. தில்லியில் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் காவல் மேம்பாட்டு வாரியம், அபாயமில்லா தோட்டாக்களை ஆராய்ந்து, அவை துப்பாக்கி சுடும் நேர்வுகளில் பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில்தான் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்கள் சட்ட விரோத கும்பல்களை கட்டுப்படுத்த துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்படுகின்றன. காஷ்மீரில் 2010-ஆம் ஆண்டு தான் “பெல்லட்’ என்ற குறு ரவைகள் கொண்ட துப்பாக்கி சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உபயோகத்தில் வந்தது. அபாயமில்லா தோட்டாக்கள் மூலம் காயம் ஏற்படாது என்று நினைப்பது தவறு. “பெல்லட்’ பிரயோகிக்கும்போது அது கலகக்காரரின் உடம்பில் காயம் விளைவிக்கும். காயமுற்றவர் மேலும் வன்முறையில் ஈடுபட இயலாமல் முடங்கிவிடுவார்கள்.

இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீனிய மக்கள் போராட்டங்களில் “ஸ்வாங்க்’ என்ற நீர் பாய்ச்சியை வன்முறை கும்பலை கலைக்க உபயோகிக்கிறார்கள். இந்நீர் சாக்கடை துர்நாற்றத்தை கொடுக்கும். நாற்றம் தாங்காமல் கூட்டம் கலைந்து விடும். தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தை கலைக்கும் முறை தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அத்தண்ணீரில் மை கலந்திருக்கும். யார் மேல் தண்ணீர் படுகிறதோ அவர்கள்மேல் அந்த மை ஒட்டிக் கொள்ளும், லேசில் போகாது. பிறகு அதிலிருந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவும்.

கூட்டத்தை கலைக்க உதவும் அபாயம் குறைந்த குண்டாக ரப்பர் புல்லட் கருதப்படுகிறது. இந்த ரப்பர் குண்டு வன்முறை கும்பலுக்கு முன்னால் தரையில் சுடப்பட்டதும், குண்டு தரையில் பட்டு எகிறி கூட்டத்தைத் தாக்கும். குறைந்த காயம்தான் ஏற்படும். ஆனால் துப்பாக்கியிலிருந்து ரப்பர் புல்லட்டை நேரே ஒருவர் மீது சுட்டால் காயம் கொடியதாயிருக்கும்.

பயங்கரவாதிகள் பிடியில் காஷ்மீர் நகரம் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், பாகிஸ்தான் உதவியோடு உள்ளூர் காஷ்மீர் மக்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்கள் என்பது நுண்ணறிவுப் பிரிவு தரும் தகவல். பள்ளிகள் கொளுத்தப்படுகின்றன, ராணுவம் மற்றும் காவல் துறையினர், களப்பணியாளர்கள் தாக்கப்படுகிறார்கள். பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்படும் புறக்காவல் நிலையங்கள் தாக்கப்படுகின்றன. காவல் வீரர்கள் உயிரிழக்கிறார்கள்.

சுமார் 3,000-த்திற்கும் மேற்பட்ட காவல் வீரர்கள் காயமடைந்துள்ளர்கள், சுமார் 200 கல்வீச்சு கலகக்காரர்கள் பெல்லட்டுகளால் காயமடைந்துள்ளார்கள். ஜம்மு – காஷ்மீர் பிரச்னை எழுபது ஆண்டுகளாக தொடர்கிறது. இந்திய ராணுவத்தை சட்டம் – ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடுத்தக் கூடாது, அஊநடஅ என்ற பாதுகாப்பு படையினருக்கு கொடுக்கப்படும் விசேஷ அதிகாரங்கள் வாபஸ் பெற வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை சில அரசியல்வாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் வைக்கின்றனர்.

பிரிட்டிஷ் இந்தியா 1947-ஆம் வருடம் இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிந்தபோது, பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் செய்தனர். இந்திய ராணுவம் உடனடியாக தலையிட்டு கலகக்காரர்களை தடுத்து நிறுத்தியது.கலகக்காரர்களை விரட்டி ஆக்கிரமித்த பாகத்தை மீட்டிருக்கலாம். ஆனால் சில தலைவர்கள் எடுத்த முடிவால் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டு லைன் ஆஃ ஆக்சுவல் கன்ட்ரோல் என்ற அடிப்படையில் இருநாடுகளின் ஆளுகையில் உள்ள எல்லை பிரச்னைக்கு முடிவான தீர்வு காண திட்டமிடப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் தனித்துண்டாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்போது எடுத்த ஒரு தாற்காலிக முடிவு நிரந்தரமாக இன்னும் தொடர்கிறது. “ப்ளீபிசைட்’ என்ற வாக்கெடுப்பு மூலம் மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும் என்ற முடிவு இக்காலகட்டத்தில் செயல்படுத்த முடியாது. இன்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த 24 சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாகவே வைக்கப்பட்டு சட்டப் பேரவை நடத்தப்படுகிறது.

காவல் துறை, மத்திய பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகங்களால் இந்தியாவின் இறையாண்மை காப்பாற்றப்படுகிறது. காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இப்போதுள்ள நிலைமையை பற்றி மனம் நொந்து கூறுகிறார். அவர் திருக்குரான் நெறிகளை பின்பற்றுபவர். தினமும் போராட்டம், திசை மாறிய இளைஞர்கள் பயங்கரவாதிகள் பிடியில் வன்முறை செயல்களின் தாக்கம் புரியாது பாதுகாப்புப் படையினரை எதிர்க்கும் மனப்போக்கு வெறியாக மாறியிருக்கிறது என்கிறார்.

“கல்லெறி போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கொடுத்துதான் வன்முறையில் ஈடுபட செய்கிறார்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள். பாதுகாப்பு படையினர் மீது கழிவு நீரையும், அழுகிய மாமிசங்களையும் முட்டைகளையும் வீசுகிறார்கள். இரவு நேரம் மத்திய ரிசர்வ்படை பாதுகாப்பு கூடாரங்கள் மீது கிரெனேட் வீசுகிறார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக களியாட்டம் ஆடுகிறார்கள். காவல் நிலையம் சூறையாடப்படுகிறது’ என்றுகூறி மனம் வெதும்புகிறார் அந்த மருத்துவர்.

இம்மாதிரி சூழலில் பாதுகாப்புப் படையினர் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவர்களது தற்காப்பிற்காகவும் பொது அமைதியை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கும்போது அதை கொச்சைபடுத்தும் விதமாக அரைவேக்காட்டு அறிவிலிகள் ஊடகங்களில் பேசுவது வேதனைக்குரியது. மத்திய ரிசர்வ் படை கமாண்டர் பிரமோத் குமார் சுதந்திர நாள் கொடியேற்றிவிட்டு திரும்பும் வழியில் பயங்கரவாதிகளின் கண்ணி வெடிக்கு பலியானார். மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தியதுதான் அவரது கடைசி பணி.

கர்னல் விஜயேந்தர் தாப்பர் என்ற 70 வயது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, கார்கில் போரில் இறந்த தனது மகன் விஜயகாந்த் உயிர் துறந்த இடத்தை பார்க்க கார்கில் போர் நடந்த இடத்திற்கு 16,000 அடி நடந்தே சென்றார் என்ற செய்தி படித்து உருகாதவர் இருக்க முடியாது. விஜயகாந்த் காஷ்மீரில் உள்ள கார்கில் மலை பகுதியில் எல்லை காவலில் பணியில் இருந்தபோது பாகிஸ்தான் ஊடுருவலாளர்களால் கொல்லப்பட்டார். எழுபது வயது தந்தையின் கடைசி ஆசை தனது உயிர் போகுமுன் மகன் உயிர் துறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்பதுதான். அவரது 16,000 அடி மலைப் பயணம் எவ்வளவு சோகமும் தனிமையும் கலந்ததாக இருந்திருக்கும்?

பாதுகாப்பு வீரர்கள் இந்திய மக்களின் சுதந்திர வாழ்விற்காக தங்களின் இளமையையும் உயிரையும் தியாகம் செய்கிறார்கள். அவர்களது தியாகம் வீணாகாமல் இருக்க, எந்நிலையிலும் நமது தேசத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நாம் சபதம் எடுப்போம்.

ஆர். நடராஜ் MLA