திருமணம் முன்பே பிரிவுக்கும் மனதை தயார் படுத்திவிடுவது மிக நல்லது!

ஒரு ஃபேஸ்புக் ரவுண்ட் அப்.. அமைதியாக..பலர் நல்ல தரமான கட்டுரைகளை எழுதுகிறார்கள்..  வழக்கம் போல கவிதை, பிரிவு, நேசம், பாசம் ஒருப்பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது. காலை வணக்கம், மொக்கை பதிவுகள், சமீபத்தில் அதிகளவில் சுய முன்னேற்ற, பின்னேற்ற, டப் மேஷ். பாட்டு , ஸ்மூயுல் வீடியோ பதிவுகள்..ட்ரெண்டிங் பதிவுகள். பிறந்த நாள், புத்தக வெளியீடு, அதற்கான வாழ்த்துகள் என நிற்காமல் ஓடிகொண்டே இருக்கறது. அவ்வப்பொழுது ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணில் படாமல் இல்லை. ஆங்காங்கே பெண்கள் பற்றிய பதிவுகள்..அதில் ஒன்றுதான் லிவிங் டுகதர் பற்றிய பதிவுகள் கண்ணில்பட்டன. சமுக மாற்றத்தை புரிந்து கொள்ளாமல் இவற்றை பொதுவாக விமர்சிக்க முடியாது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இது ஏற்றுகொள்ள முடியாமல் உள்ளனர். இருப்பினும் அவரவர் பார்வைகளில் நியாயம் என்பது வேறாக உள்ளது.

பெண்களும் சரி, ஆண்களும் சரி திருமணமோ, லிவிங் டுகதரோ எதில் இணைவாய் இருந்தாலும் வெளிநாடுகள் போல எல்லாவற்றையும் பேசி , பணம் முதற்கொண்டு எப்படி பகிர வேண்டும் என முடிவு செய்து ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் வைத்து விடலாம் என்றே தோன்றுகிறது.

வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி திருமணம் செய்யும் பொழுது பெண்களின் வீட்டில் முன்பே அவர்களின் சொத்து, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்து விட வேண்டும். ஒரு நாள் இருவருக்கும் மன கசப்பு வரும் பொழுது பெண் பொருளாதார ரீதியில் வலுவிழந்து இருக்கும் பொழுது நியாயம், நேர்மைக்கு எல்லாம் உறவில் இடமிருக்காது. பணம் இருக்குமிடத்தில் அதிகாரம் சாயும்.

இருவரும் பொருளாதார ரீதியில் பலமாக இருப்பினும் முன் கூட்டியே பண பரிமாற்றம் பற்றி பேசிவிடுவது நல்லது. ஏற்பாடு செய்யும் திருமணத்திலும் இவற்றை பேசிவிடலாம். . மனதுக்கு கவுன்சிலிங் செய்வது, மாற்றங்களை எதிர்கொள்வது போல பைனான்ஸ் கவுன்சலிங் செய்து விடுவது நல்லது.

ஆண்களை விட பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னுக்கு வர இன்னும் இரு தலைமுறை காலம் வேண்டும். ஆனால் இணையக் காலத்தில் ஆணோ, பெண்ணோ யார் எப்பொழுது வேண்டுமானாலும் மனம் மாறலாம். எதுவும் நிச்சயமில்லை. பிடித்து இருந்தால் வாழலாம் இல்லாவிடில் பிரியலாம் என்ற கோட்பாடுகள் அதிகளவில் உள்ளே வந்துவிட்டது.

நிலையில்லா வாழ்வில் பொருளாதார ரீதியிலும் பேசி முடிவெடுப்பது நாளை விபத்தோ, வேறு விஷயங்களோ நடக்கும் பொழுது அது அழகாக குடும்பத்தில் கை கொடுக்கும்,. நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது. பிரிவை யோசித்தே திருமணம், லிவிங் டுகதர் எல்லாம் ஆரம்பிக்கணும். நம்பிக்கைதான் வாழ்கை என்றால் நமக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ் தேவையில்லையே!!. எங்கோ தவறுகிறது என்பதால்தானே பத்திரம், பதிவு, ஸ்டாம்ப் எல்லாம் இருக்கிறது. சட்டங்களும் இருக்கிறது.

எப்படி பிடித்து இருக்கிறதோ வாழ்வதில் பிரச்னை இல்லை. அது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் இனி பொருளாதார, மனம் இரண்டிலும் சுய மதிப்புடன் எப்பவும் எதற்கும் தயாராக இருக்குமளவுக்கு இணையும் முன்பே யோசித்து, பேசி முடிவெடுப்பது நல்லது. இதற்கு பெற்றோர் களும் சரியாக யோசிப்பது நல்லது. பெண்கள் ஏதுமில்லாமல் நிற்கிறாள் என்றும், பையனின் சொத்து எல்லாம் டைவர்சில் போய் விட்டது என்றும் நாளை கண்ணை கசக்க வேண்டாம். அதை தவிர திருமணம் முன்பே பிரிவுக்கும் மனதை தயார் படுத்திவிடுவது மிக நல்லது. ஏன் என்றால் திருமணம் என்பது அத்தனை விளையாட்டல்ல..

மருந்துகள் கசக்கும், ஆனால் நல்லது. அப்படிதான் இந்த ஆலோசனைகளும். இது எனக்கும் நான் சொல்லிக்கொள்வதுதான்.

கிருத்திகா தரன்