June 26, 2022

வாட்ச்மேன் – திரை விமர்சனம்!

இன்று வரை இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி தன்னை சவ்கிதார் என்றழைத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் சூழலில் அதே டைட்டிலான ‘வாட்ச்மேன்’என்ற பெயரில் ஏல். எல் விஜய் வழங்கி இருக்கும் கொஞ்சம் நீளமான ஷார்ட் பிலிம்தான் இது. இதில் வாரந் தோறும் தான் நடித்த ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் ஜிவிபிரகாஷ் தோன்று கிறார். கூடவே நாயகி புதுமுகம் சம்யுக்தா, சுமன் , யோகிபாபு போன்றோரும் திரையில் தோன்றுகிறார்கள். அதிலும் தண்ணீர்கேன் போடும் அரையடிக் கூட இல்லாத ஜிவி பிரகாஷ் இந்தியாவின் டாப் ஹிட் டெர்ரரிஸ்டுகளை போட்டுத் தள்ளுவதாகக் காட்டி ரசிகர்களை காலி செய்து விட்டார்கள்.

படத்தின் கதை என்னவென்றால் பிழைப்புக்காக ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி வாட்டர்கேன் பிஸினஸில் இறங்கிய ஹீரோ ஜி.வி. பிரகாஷ்., அதில் பெருத்த நஷ்டத்தை சந்தித்த நிலையில், வாங்கிய கடனை இடனடியாக அடைக்க வழி இல்லாமல் ஒரு வீட்டில் திருட போகிறார், அதே வீட்டில் சில தீவிரவாதிகளின் பிடியில் இருக்கிறார் மாஜி போலீஸ் ஆபீஸர் சுமன். பிறகென்ன அந்த தீவிரவாதிகளின் பிடியிலிருந்து சுமனை மீட்டு அந்த போலீஸ் ஆபீசரிக்கு பர்மெனண்ட் வாட்ச்மேன் ஆவதுதான் ஸ்கீரின் பிளே!

நாயகன் ஜிவி பிரகாஷ் ஆரம்பத்தில் இருந்தே தொபுக்கடீர் என்று அடிக்கடி விழுந்து எழுந்து விழுந்து மிரண்டு, வெகுண்டு, புரண்டு, நடிக்க இயலாமல் விழி பிதுங்குகிறார். ஹீரோயின் சம்யுக்தா டைட்டிலில் பெயர் வந்த அளவுக்குக் கூட சீன்களில் வரவில்லை என்பதால் அவர் குறித்து சொல்ல ஒன்றுமில்லை.  யோகிபாபு மூனு சீன் வருகிறார். வேஸ்ட்.  வில்லன்கள் இந்திய அளவில் தேடப்படும் தீவிரவாதிகளாம்.. அதனால்தானோ என்னவோ இருட்டிலேயே நடமாடிக் கொண்டு ஹைடெக்கான துப்பாக்கியால் குறி தவறிச் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் அந்த டெர்ரரிஸ்டுகளுக்கு டிமிக்கி கொடுத்தப்படி உலாவும் அந்த நாயையாவது சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நாய் ஒருமுறை தரையோடு தரையாக பம்மி நகர்கிறது. இரண்டுமுறை கதவுக்கு முன்னால் கையுயர்த்தி நிற்கிறது. நம்ம கையில் உள்ள செல்போனிலுள்ள யூ டியூப்-பில் கூட விதவிதமான நாய் சாகசம் பார்கும் போக்கு அதிகரித்து இருப்பதால் இந்த டாக் போங்காட்டம் செய்வது போரடிக்கிறது. ஹூம் ராம.நாராயணன் படத்தில் வரும் நாய் சாகசம் கூட இன்னும் பலருக்கு நினைவில் உள்ளதை விஜய் மறந்துவிட்டார் போலும்.

மேலும் சென்னை போன்ற மெட்ரோபாலிட்டின் சிட்டியில் உள்ள ஒரு பங்களாவில் நைட் முழுக்க எந்திர துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் , அந்த வீட்டு சிலிண்டர் வெடிக்கிறது. ஆனா, ஆனா.. — அட போங்கப்பூ..

மொத்தத்தில் இந்த வாட்ச்மேன் காசுக் கொடுத்துக் காணத் தகுந்தனவனில்லை.

மார்க் 2. 25 / 5