October 17, 2021

விண்வெளிக்கு ராக்கெட் ஏவப் படுவதை நேரில் பார்க்க ஆசையா?

விண்வெளிக்கு ராக்கெட் ஏவப் படுவதை ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்கள், விஞ்ஞானிகள் என குறிப்பிட்ட சிலரே நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டு வந்தனர். இந்நிலையில், பொதுமக்களும் இவற்றை நேரடியாகக் காணும் வகையில் அண்மையில் திறந்தவெளி அரங்கு ஒன்று அமைக்கப் பட்டு அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. சுமார் ஐந்தாயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த அரங்கில் இருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுகிறது.

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது. சந்திரயான்-2 விண் கலத்தில் ஆர்ப்பிட்டர்(சுற்றுகலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்வது என்று இஸ்ரோ முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளது. இன்று அதாவது -ஜூலை 4ம்தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு மேல்தான் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியும். சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரின் இணையதளமான www.shar.gov.in இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

அந்த இணையதளத்தில் 4ம் தேதி நள்ளிரவுக்கு மேல் முன்பதிவுக்கான பிரத்யேக இணைப்புக் கொடுக்கப்படும். விண்கலம் ஏவப்படுவதைப் பார்க்க ஏற்பாடு செய்திருக்கும் அரங்கில் 5000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் 5000 பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப் படுவார்கள். முதலில் வருவோருக்கு இந்த வாய்ப்பு கிட்டும்.

இந்த அரங்கு, விண்கலம் ஏவப்படும் ஏவுதளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும். இஸ்ரோ வின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.