March 21, 2023

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் கட்டமைப்பாக மாற்றோணும்- குடி நீர் வாரியம் உத்தரவு!

2009ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளின் சுஜித்தையும் சேர்த்து 13 குழந்தைகள் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்திருக்கின்றன. இவர்களில் 2 பேர் தவிர மற்ற குழந்தைகள் பரிதாபமாக உயிழந்தன. தமிழகத்தைப் போலவே அதிக ஆழ்துளை கிணறு விபத்துகளை சந்திக்கும் மாநிலம் பஞ்சாப்.. இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்று தமிழக குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுர்ஜித். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது. சுர்ஜித்தின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மக்கள் பலரும் திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பயன்படாத அழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் தொகுப்புகளாக மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம் :

குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் மழைநீர் சேகரிப்புக்கான வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் பொதுமக்கள் 24 மணி நேரம் செயல்படும் 94458 02145 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள், பாழுங்கிணறுகள் உங்கள் ஊரில் இருந்தால் முதல்வ ரின் பிரத்யேக குறைதீர் பெட்டிக்கு இந்தத் தகவலை அனுப்ப முடியும். cmcell@tn.gov.in என்ற முகவரிக்கு மூடப்பாடாத அல்லது ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை/ கிணறுகள் குறித்த முழு விபரங்களை மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://cmcell.tn.gov.in இணைய தளத்திலும் இதுகுறித்த முழுமையான விவரங்களுடன் புகாரினைப் பதிவு செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.