அமெரிக்காவில் காற்றாடித் திருவிழா கோலாகலம்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலரும் விரும்பும்  பட்டம் விடுதல் விளையாட்டினை அழிந்து வரும் விளையாட்டாக கணக்கில் கொள்ளலாம். என்னதான் செல்பேசி பப்ஜிக்கள் வந்தாலும் இன்றும் ஆங்காங்கே பட்டங்கள் பறப்பதை நம்மால் பார்க்க முடியும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் பட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. பட்டம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. சீன விவசாயிகள் தொப்பி போடும் பழக்கம் உடையவர்கள், ஒரு சீன விவசாயி தொப்பி பறக்காமல் இருக்க நூலினை தொப்பியில் கட்டி வைத்து கையில் நூலைப் பிடித்திருந்தார். காற்று அடித்தவுடன் காற்றில் தொப்பி பறக்க, அவர் நூலை இழுத்து தொப்பியை பிடித்துள்ளார். அதுதான் பட்டத்தின் முதல் தொடக்கம் என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன.

பட்டம் விடுதல் உலகளாவிய விளையாட்டாகும். சீனாவில் தோன்றி ஆசியாவில் பரவி, ஐரோப்பாவில் தடம் பதித்து, திரைகடலோடி ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பட்டம் விடுதல் விரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு பாணியையும், மரபையும் வரித்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஜனவரி 14ம் நாள் உலக பட்ட திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. பட்டங்களுக்கான அருங்காட்சியகம் டோக்கியோவிலும், அகமதாபாத்திலும் உள்ளன. ஜப்பானில் சுமார் 2500 கிலோ எடையுள்ள பட்டம் பறக்கவிடப்பட்டு சாதனை நூல்களில் இடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் 5400 மீட்டர் உயரத்துக்கு பட்டம் விடப்பட்டதாக சாதனை நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  இதே அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் காற்றாடித் திருவிழாவைக் கொண்டாட நினைவுச் சின்னம் அமைந்துள்ள மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்தினருடன் திரண்டனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வானம் முழுவதும் எங்கு நோக்கினும் காற்றாடிகள் பறப்பது போல் காட்சியளித்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக காற்றாடிகளைப் பறக்க விட்டனர்.

இந்த முறை செர்ரி மலர்கள் பூக்கும் காலத்தில் காற்றாடி விழா நடைபெறுகிறது. ஜப்பானால் அமெரிக்காவுக்கு நட்பின் அடிப்படையில் வழங்கப்பட்டவை செர்ரி மரங்கள். இவை இருநாடுகளின் நட்பை போல் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. செர்ரி மலர்வதை அமெரிக்க மக்கள் வசந்தகாலத்தின் வரவேற்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள. இதற்காக 40 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றாக இந்த காற்றாடித் திருவிழாவும் கோலாகலமாகத் தொடங்கிவிட்டது.