October 4, 2022

உடலை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டாம் – உரமாக மாற்ற சட்ட அனுமதி!

மனிதர்களில் ஒரு பிரிவினர் தஙளின் புத்திசாலித்தனம் மற்றும் புதிய புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் மூலம் இயற்கையை வென்று விட துடித்தப்படி இயங்கி வருகிறார்கள். இறைவனின் படைப்புகளில் உள்ள இயற்கை ரகசியங்களை அறிந்து கொள்ள கடும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறான். அந்த ஆராய்ச்சிகளின் பலனாக பல உயிர்காக்கும் மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளன. மனித இனத்தை நோய்த் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தனை இருந்தாலும் ஆசை யாரைத்தான் விட்டது. மரணம் இல்லா பெருவாழ்வு காண மனிதன் ஆசைப்படுகிறான். இந்த உலக வாழ்க்கையிலும் அதன் சுகங்களிலும் நவீனங்களிலும் முழ்கித் திளைத்துப்போன அவன் நீண்ட காலம் வாழ விரும்புகிறான்.அதன் விளைவாக இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதே சமயம் இறந்தவர்களின் உடலை உரமாக மாற்றி தர ரிகம்போஸ் (Recompose) என்ற நிறுவனம் உரிய ஏற்பாடு செய்து வருகிறது. ரிகம்போஸ் நிறுவனத்தின் நிறுவுனர் கட்ரினா ஸ்பேட் தான் இந்த திட்டத்தை உருவாக்கியவர். இதுகுறித்து காட்ரினா ஸ்பேட் கூறுகையில்;‘‘இறந்தபின் மீண்டும் நேரடியாக இயற்கைக்கு திரும்பும் இந்த திட்டம் மிகவும் அழகானது. இந்த செயல்பாடு இயற்கை யானது, பாதுகாப்பானது, நீடித்து நிலைக்க கூடியது. இதன் மூலம் நில பயன்பாடு மற்றும் கார்பன் வெளியீடு குறைக்கப்படும்’’ என்று கட்ரினா ஸ்பேட் தெரிவித்துள்ளார். இதை வரவேற்று அமெரிக்கா வின் தலைநகர் வாஷிங்டனில் மக்கள் தாங்கள் இறந்தபின் தங்கள் உடலை எரிக்காமல் புதைக்காமல் உரமாக பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டத்திற்கு வாஷிங்டன் ஆளுநர் ஜே இன்ஸ்லீ ஒப்புதல் அளித்து மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் என்பதுதான் ஹைலைட்.

மனித வரலாற்றில் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தாலும் சில காலகட்டங்களில் பிறப்பை விட இறப்பு மிகுந்து விடுகின்றது. உதாரணமாகப் போர்கள், விபத்துகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றைச் சொல்லலாம். இயற்கையாக நிகழும் இறப்பாக இருந்தாலும் எதிர்பாராத பேரழிவுகளாக இருந்தாலும் உலகம் தோன்றியது முதல் இதுநாள் வரை இறந்த சடலங்களைப் புதைக்க இடமில்லை என்ற இடநெருக்கடி எந்த நாட்டிலும் இருந்ததாகத் தெரியவில்லை. சுற்றுச் சூழல், சிக்கனம், நடைமுறைச் சாத்தியம் ஆகியக் காரணிகளைக் கொண்டு ஒப்பீடு செய்யும் போதும் எரிப்பதைவிடப் புதைப்பதே சிறந்ததாகும். எப்படியெனில், மனித உடலை எரிக்க நவீன எரிகலன்களும் மின் மயானங்களும் தற்காலத்தில் வந்து விட்டன. இதற்கு முன் இறந்த உடலை எரிக்கும் போது நரம்புகள் முறுக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் சவம் எழுந்து நிற்கும்போது, தடியால் அடித்து மீண்டும் சிதையில் தள்ளுவர். இருக்கும்வரை மதிப்புடன் இருந்த ஒருவரின் சடலம் இறந்தபின் சிதைக்கப்படுவதைக் கண்ணால் காணும் நெருங்கியவர் களின் மனவேதனை இறந்த துக்கத்தை விட அதிகமானதாகும். இதை ஒட்டி எரிப்பதா? புதைப்பதா? எது சிறந்தது என்ற விவாவதம் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் இறந்தவர்களின் உடலை உரமாக மாற்றி தர ரிகம்போஸ் (Recompose) என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. ரிகம்போஸ் நிறுவனத்தின் நிறுவுனர் கட்ரினா ஸ்பேட் தான் இந்த திட்டத்தை உருவாக்கியவர். இதுகுறித்து காட்ரினா ஸ்பேட்டிடம் விசாரித்த போது, பத்து ஆண்டுகளுக்கு முன் கட்ரினா ஸ்பேட் 30 வயதை கடந்த போது அவருக்கு தன் மரணம் பற்றிய சிந்தனை தோன்றியுள்ளது. அப்போது தன் உடலை எரிக்காமல், புதைக்காமல் அல்லது பதப்படுத்தாமல் சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் ஒரு மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனை பிறந்தது. இது தொடர்பாக வாஷிங்டன் பல்கலைகழகத்துடன் இணைந்து கட்ரினா ஸ்பேட் ஆய்வில் ஈடுபட்டார். தானமாக வழங்கப்பட்ட உடல்கள் மூலம் அவர்களது ஆராய்ச்சி நடைபெற்றது.

இறந்தவரின் உடலை ஒரு பெட்டியில் வைத்து அதில் மரக்கட்டைகள், வைக்கோல் மற்றும் ஆல்ஃபா ஆல்ஃபா (alfalfa) என்ற பாசி ஆகியவற்றை அதில் போட்டு இறுக்கமாக அடைக்கப் பட்டது.உடலுடன் போடப்பட்ட பொருட்களில் இருந்த நுண்கிருமிகள் 30 நாட்களில் அந்த உடலை எலும்பு உட்பட முழுவதுமாக சிதைத்து உரமாக மாற்றியது. பண்ணைகளில் இறந்த விலங்குகளை இதே முறையில் தான் உரமாக மாற்றுவார்கள். இதே நடைமுறையை மனித உடல்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதை கட்ரினா ஸ்பேட் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அந்த மனித உரத்தின் தோற்றம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கடையில் வாங்கும் சராசரி இயற்கை உரத்துடன் ஒத்துபோனது. காய்கறி தோட்டம் உருவாக்க இந்த உரம் பயன்படும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அமெரிக்காவில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 2000 கோடி டாலர் வரை சம்பாதிப்பது குறிப்பிடத் தக்கது.