March 27, 2023

மைசூர் புலி திப்புசுல்தானும் மதச்சார்பற்ற மாமன்னர்- தான்!

மைசூர் புலி திப்புசுல்தான் என்றுமே மத வேறுபாடு பார்த்ததில்லை. அவரது ஆட்சியில் இந்துக்கள் பலர் உயர்பதவிகளை அலங்கரித்தனர். பூரணய்யா பிறப்பால் பிராமணர். அவர் நிதி மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக, மிகமிக முதன்மையான பதவியை வகித்தார். கிருஷ்ணராவ் கருவூலப் பொறுப்பாளராக இருந்தார். ஷாமா அய்யங்கார் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நரசிங்க ராவ், ரங்கா அய்யங்கார் ஆகியோர் ஸ்ரீரங்கப் பட்டணத்தில் மிகமுக்கிய பொறுப்புகளில் இருந்தனர். மைசூர் அரசின் சார்பாக வெளிசக்திகளுடன் போர் மற்றும் அமைதி குறித்து பேசும் தூதர்களாக ஸ்ரீநிவாச ராவும், அப்பாஜி ராமும் இருந்தனர்.

தில்லி முகலாய அரசின் தர்பாரில், மைசூர் திப்புசுல்தான் அரசின் பிரதிநிதிகளாக இருந்த மூல் சந்த்தும், சஜன் ராயும் கூட இந்துக்களே. குடகு (கூர்க்) பகுதியின் பௌஜ்தாராக இருந்த நாகப் பைய்யா ஒரு பிராமணர். திப்புசுல்தான் அரசில் பெரும்பொறுப்பு வகித்த குடிமை அலுவலர்களின் பட்டியலைப் பார்த்தால் பெரும்பாலும் அதில் இந்துக்களின் பெயர்களே இடம்பெற்றிருக்கும்.

திப்பு சுல்தானின் படையில் கூட இந்துக்கள் முதன்மை பொறுப்புகளில் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஹரிசிங். எதிரிகளுடன் கைகலந்து போராடும் முன்னரங்க படையின் தளபதியாக ஹரிசிங் இருந்தார். மலபாரில் நாயர்களின் கலகத்தை அடக்க இரண்டு தளபதிகள் திப்புசுல்தானால் அனுப்பப்பட்டனர். ஒருவர் ரோஷன்கான். மற்றவர் ஸ்ரீபாத்ராவ்.

மூன்றாம் மைசூர் போரில் கார்ன்வாலிஸ் பிரபு தலைமையிலான ஆங்கிலேயப் படை பெங்களூரைக் கைப்பற்ற முனைந்தபோது, அதற்கு எதிராக, மூவாயிரம் குதிரைப்படை வீரர்களுக்குத் தலைமை தாங்கி பெங்களூரைக் காத்தவரின் பெயர் சிவாஜி. அவர் ஒரு மராத்தியர். திப்பு சுல்தானின் தளபதி.கொசுறுத் தகவல்: மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் பீரங்கிப்படை தளபதியாக இருந்தவர் ஓர் இஸ்லாமியர். சத்ரபதி சிவாஜியும், மைசூர் புலி திப்புசுல்தானும் மதச்சார்பற்ற மாமன்னர்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். இங்கு சரியாக இல்லாதவர்கள் நாம்தான்.

மோகன ரூபன்