March 24, 2023

தைவான் மீது அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளின் பயனாக போர் பதட்டம்!?

லக வரைப்படத்தில் சிறு வாழை இலை போல் இருக்கும் தைவான் சென்ற வாரத்தில் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நாடாக இருக்கிறது. அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அந்நாட்டுக்கு ராஜாங்க முறை பயணத்தை மேற்கொண்டார். அவர் போகப்போகிறார் என்ற அறிவிப்பை வெளியிட்ட உடனேயே சீனா அது கூடாது என்று கேட்டுக் கொண்டது. உலகின் முதல் பொருளாதாரமாக இருக்கும் அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளி விட்டு முதல் இடத்தை பிடிக்க முனைப்புடன் பணியாற்றி மெல்ல வெற்றி இலக்கை தொட இருக்கும் சீனாவும் ஏன் தைவானை பெரிய விவரமாக பார்க்கிறார்கள்? அதுமட்டுமா, கிட்டதட்ட 1999–க்குப் பிறகு சீனா முதல்முறையாக தைவான் கடல் பகுதியில் போர் பயிற்சிகளை நடத்தி ஏவுகனை சோதனைகளையும் நடத்தி அச்சுறுத்தியுள்ளது.

சீனா பல நாட்களுக்கு முன்பே எங்களைச் சீண்டிப் பார்க்காதே . தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதே என்று கூறிவிட்டது. சில நாட்களில் அமெரிக்கா அதிபர் பைடனே சீன அதிபருடன் தொலைப் பேசியில் நேரடியாக இச்சர்ச்சை பற்றி பேசியிருந்தார். உக்ரைன் ரஷியாவிற்கு தலைவலியாக மாறியது போன்றே எங்களுக்கு தைவானா? அப்படி ஒரு குழப்படியை ஏற்படுத்தினால் நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டு தள்ளி நிற்க மாட்டோம் என்று சீனா கூறிவிட்டது. ஆனாலும் அமெரிக்கா தைவானில் கால் தடம்பதிக்க உயர்மட்ட அதிகாரியை ராணுவ பாதுகாப்பு வளையத்துடன் அனுப்பியது ஏன்?

மெக்சிகோவிலோ, கியூபாவிலோ உலக நாடு இப்படிப்பட்ட ராணுவ வலிமையுடன் ஓர் அதிகாரியை அனுப்பி வைத்து இருந்தால் அமெரிக்கா என்ன செய்திருக்கும் என்று யோசித்தால் அமெரிக்கா அதை விரும்பி இருக்காது என்று நம்பிக்கையுடன் நமது பதில் வந்து இருக்கும்! ஒரு சிறு நாடான தைவான் மீது சீனாவும் அமெரிக்காவும் பகைமை பேச்சுக்களை வளர்த்துக் கொள்ள என்ன காரணம். கிட்டதட்ட சிறுஎறும்பு எப்படி யானையின் காதில் நுழைந்து குடைச்சல் கொடுக்கலாமோ? அது போன்றே தைவானில் இந்த இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கும் சவாலாக மாறும் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

தைவான் எங்கள் வரைப்படத்தில் உள்ள ஒரு நகரம் என்றே சீனா வர்ணிக்கிறது, ஆனால் தைவான் தங்களை சுதந்திர நாடு என்று அறிவித்து எல்லா நாடுகளையும் தங்களுக்கு அங்கீாரம் தர சொல்லுகிறது. இதை உறுதிப்படுத்தவே அமெரிக்கா ராஜாங்க வருகைகளை தடுத்து வருகிறது. அப்படியே தைவானில் தூதரக உறவுகளை அமைத்திட சீனாவிடம் தான் அனுமதி கோரவேண்டும் என்று கூறிவிட்டது.

உலகின் முன்னணி வர்த்தக நாடாகவே தைவான் வளர்ந்து விட்டது. நடப்பு ஆண்டின் முதல் 8 மாதத்திலேயே தைவானின் ஏற்றுமதி 247 பில்லியன் டாலர்களை தாண்டி விட்டது. மேலும் இறக்குமதிகளின் அளவோ டாலர் 220 பில்லியனாக இருக்கிறது. ஆக 27 பில்லியன் டாலர் வர்த்தக உபரியை பெற்றுள்ளது.

கொரோனா ஏற்படுத்திய பொருளாதார வீழ்ச்சி, உக்ரைனில் ரஷியாவின் சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகள் நடுங்கி இருக்க தைவான் மட்டும் தான் இப்படி ஒட்டுமொத்த லாபத்தையும் பெற்று வளமான நாடாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக இருப்பது தைவான் தான். சீனாவிற்கு கிட்டத்தட்ட மொத்த ஏற்றுமதியில் 40 சதவிகிதம் தைவான் அனுப்பிக் கொண்டிருக்கிறது. தைவானின் சேவை துறை ஏற்றுமதியில் உண்மையான ஜிடிபியில் தைவான் தான் 40 சதவிகித வர்த்தகத்தை சீனாவுடன் செய்து கொண்டிருக்கிறது. விவசாயமும் உற்பத்தித் துறையும் துடிதுடிப்புடன் இயங்கி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்கா தைவானில் குட்டையை குழப்பி அதில் மீன் பிடிக்க சதி வலையை பின்னியிருக்கிறது. தைவானின் செமி கண்டக்டர்கள் உலகெங்கும் தேவைப்படுகிறது. சீனாவின் மொத்த இறக்குமதியில் 20 சதவிகிதம் இந்த செமி கண்டக்டர்களாகும்! எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும் அதை இயக்குவது செமி கண்டக்டர்களாகும்! கார் உற்பத்தியில் இருந்து செல்போன்கள் வரை செமி கண்டக்டர்களின்றி தயாரிக்கவே முடியாது. ஆக தைவானை அமெரிக்கா வசப்படுத்தாமல் விட்டு விட்டால் அவர்களது தயாரிப்புத்துறை ஸ்தம்பித்துவிடும். சீனாவை பொருளாதார முற்றுகை போட்டு அச்சுறுத்தும் போதெல்லாம் தைவானின் செமி கண்டக்டர்களின் தயாரிப்பை வைத்து அமெரிக்காவை நிலைகுலைய வைத்துவிடும்!

இந்த சதுரங்க ஆட்டத்தில் ராஜாவாகவே தைவான் தற்போது வலுவான நிலையில் இருப்பதை பார்க்கும் போது இந்தியா அதன் பின்னணியை கூர்ந்து கவனித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

ரஷியாவை சீண்டிப் பார்த்து உக்ரைனில் பதட்டத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாகவே வளைகுடா பகுதிகளில் சச்சரவுகள் குறைந்த பாடாகவே இல்லை. இந்நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஆசிய அமைதியை பாதிக்கும் அபாயங்களை சுட்டிக் காட்டுகிறது.

தற்போது இந்தியா ஆசிய பசிபிக் கூட்டணியில் இருப்பதால் தைவான் மீது அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளின் பயனாக போர் பதட்டம் ஏற்படும் அபாயத்தை சுட்டிக் காட்டி தடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ‘குவாட்’ கூட்டணியின் இதர அங்கத்து நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானிடமும் இது பற்றிய கருத்துக்களை பரிமாறி இனியும் ஆசியப் பகுதியில் சீனாவும் அமெரிக்காவும் மறைமுக போர்களை நடத்திடாமல் இருக்க நல்ல முடிவுகளை எடுக்க விவாதிக்கத் தயாராக வேண்டும்.

நிலவளம் ரெங்கராஜன்