March 22, 2023

தமிழ் சினிமாவுக்கு கதை யோசிக்க இப்போதெல்லாம் யாரும் அதிகம் மெனக்கெடுவதில்லை. ஹீரோ கேரக்டர் என்ன? என்று மட்டும் யோசித்து முடிவெடுத்து விட்டால் போதும்.. அதைச் சுற்றி திரைக் கதை என்னும் மாயவலையை பின்னி இரண்டரை மணி நேரத்தை விழுங்கி விடுவது வாடிக்கை. அந்த வகையில் சிபிராஜ் என்னும் நடிகரை போலீஸ் ஆபீசராக்கி, முன்னரே சொன்னது போல் மாயவலை பின்ன மும்பை பிளட் என்றொரு சமாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி வந்துள்ள படம்தான் – வால்டர்! ஆனால் இந்த வால்டர் கண்டுபிடிக்கும் மெடி க்ரைம் சப்ஜெக்ட் நம்ம தமிழ் ரசிகர்களுக்கு புதுசு என்பதுதான் ஹைலைட்!

அதாவது அசிஸ்டெண்ட் எஸ்.பியான சிபிராஜ் டூட்டியுடன் போலீஸ் ஜீப்பில் நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலாவை அடிக்கடி சந்தித்து காதலித்து வருகிறார். அதே ஊரில் டாப் அரசியல்வாதியாக இருக்கும் பாபா செல்லதுரைக்கு இடைஞ்சலாக வளரும் சமுத்திரகனியை சிபிராஜ் என்கவுன்டர் செய்கிறார். இதனிடையே அதே ஊரில் பிறந்த குழந்தைகள் ஓரிரண்டு காணாமல் போய் மறு நாள் கிடைத்து இறந்தும் போய் விடுகிறது. இதை டீப்பாக விசாரிக்கும் சிபிராஜ் மீது சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி. அந்த விபத்தில் உயிர் பிழைக்கும் சிபிராஜ், தன் மீது விபத்தை ஏற்படுத்திய நட்டி யார் என்பதை விசாரிக்க ஆரம்பித்து குழந்தைகளை யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே கண்டறிந்து முடிவை சொல்வதே வால்டர் படக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அதிலும் தன் அப்பா மாதிரி நடிக்க முயன்றிருக்கிறார். அதற்காக தளர்ந்து போன உடலை அவ்வப்போது விறைப்பாகக் காட்டுவதெல்லாம் ஓவர். ஆனால் சண்டைக் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக வரும் ஷ்ரின் கான்ஞ்வாலா-வுக்கு போலீஸ் டூட்டியைக் கெடுத்து லவ்வுவது மட்டும்தான்.. அதுவும் இடைவேளை வரைதான் என்பதால் மனதில் நிற்காமல் போய் விடுகிறார். பாபா செல்லதுரை பாவம் போல் வருகிறார். போகிறார்..ஹூம்!

நட்டி வில்லனா? நடிக்கணுமா? நல்லவனா ஆக்ட் கொடுக்கணுமா? என்று இயக்குநர் தெளிவுப் படுத்தாதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். சமுத்திரகனி கெஸ்ட் ரோல் என்பதாலும் ரித்விகா, சனம் ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்வர்கள் என்பதாலும் அடிசினலாக சொல்ல ஒன்றுமில்லை.

குழந்தைக் கடத்தலுடன் கூடிய மெடிக்கல் க்ரைம் கதைக்கு ஆதாரமாக பலரின் கவனத்துக்கு வராத பாம்பே பிளட் என்னும் சமாச்சாரத்தை கையில் எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பு. ஆனால் அதற்க்காக பிறந்தக் குழந்தையைக் கடத்தி அதன் முழு இரத்தத்தையும் எடுத்து சக்கையை வீசுவது போல் ட்ரீட்மென்ட் செய்திருப்பதெல்லாம் ரசிகன் மனதில் மட்டுமின்றி பார்வையில் கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதுதான் சோகம்.

ஆனாலும் தமிழ் சினிமாவுக்கே உரிய முழுமையான பொழுது போக்கு இன்றும் ஆராய்ச்சியாளர் களுக்கு சவாலாக இருக்கும் ஒரே ரத்த வகையான ‘பாம்பே குரூப்.’-பை மையமாக கொண்டு ஒரு விழிப்புணர்வை அளித்திருக்கும் இந்த வால்டர் டீம்-முக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.

மொத்தத்தில் இந்த வால்டர் – மிடுக்கு குறைவுதான் ஆனாலும் சல்யூட் அடிக்கலாம்!

மார்க் 2.75 / 5