October 22, 2021

வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் தோன்றிய நாளிது!

உலகிலேயே அதிகமான கார்ட்டூன் படங்களைத் தயாரித்த நிறுவனம் எது? உடனே வால்ட் டிஸ்னி என்று சொல்லிவிடுவீர்கள். ஆனால், டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் அதிகமாகத் தோன்றியது, அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தந்தது மிக்கி மௌஸ் கிடையாது. சூப்பர் ஹீரோக்களைத் தவிர்த்து உலகிலேயே அதிகமான காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பிடித்த டொனால்ட் டக் தான் அது. டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்களிலும் இதுதான் அதிகமாகத் தோன்றியிருக்கிறது. அதிலும் இதே  ஜூன்9ம் தேதி  உருவானதுக்குக் காரணம் யார் தெரியுமா? இன்னொரு சாதனை நாயகன். அவர்தான் உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் பேட்ஸ்மேன் பிராட்மேன்.

உருவான கதை:

வால்ட் டிஸ்னியின் உன்னதமான படைப்பு மிக்கி மௌஸ். உலகெங்கும் உள்ள குழந்தைகளின் ஆதர்ச நாயகனாக மாறியதில் இருந்து, அந்தக் கதைகளை மிகுந்த கவனத்துடன் கையாள ஆரம்பித்தார் அவர். அந்தக் கதை வரிசையில் எதிர்மறைக் கருத்துகளோ, எதிர்மறை எண்ணங்களோ தோன்றாமல் பார்த்துக்கொண்டார். அதனால் தன்னுடைய வழக்கமான பாணியில் (கோபம் கொள்வது, சரமாரியாகத் திட்டுவது, முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட்டு ‘பல்ப்’ வாங்குவது) இருந்து ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை உருவாக்க நினைத்தார்.

இந்த எண்ணத்துடன் அன்றைய நாளிதழைப் புரட்டிக்கொண்டிருந்தார் வால்ட் டிஸ்னி. 1932-ம் ஆண்டில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அப்போது, நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு காட்சிப் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்’ அவுட் ஆனார். நாளிதழில் டொனால்ட் ‘டக்’ அவுட் என்று தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. உடனே தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ‘டொனால்ட் டக்’ என்ற பெயரைச் சூட்டினார் வால்ட் டிஸ்னி.

டொனால்ட் டக்கின் கதை:

முதலில் மிக்கி மௌஸின் நண்பனாக உலகுக்கு அறிமுகமானது டொனால்ட் டக். இது ஒரு முழு காமெடியன். அதிர்ஷ்டத்துக்கும் டொனால்டுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லலாம். கற்பனையில்கூட யோசிக்கவே முடியாத விபத்துகள், துர்சம்பவங்கள் டொனால்டுக்குத் தினசரி நடக்கும். அதற்கு ஏற்படும் விபத்துகளும், சம்பவங்களும்தான் இத்தொடரின் சிரிப்பு வெடிகள்.

டொனால்ட் டக்கின் முன்கோபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியே தொடர் அமைந்திருந்தது. உலகமே டொனால்ட் டக்கை விரும்புவதற்கு ஒரே காரணம், அதன் நேர்மறையான எண்ணங்களே. எதையும் செய்ய முடியும், முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு அற்புதமான உதாரணம்தான் டொனால்ட் டக். நம்மால் எதிர்கொள்ள முடியாத சக்திகளை, இயற்கைச் சீற்றங்களை, சினம் கொண்ட சிங்கம்போல டொனால்ட் டக் எதிர்கொள்ளும்.

டொனால்ட் டக்கின் முன்கோபத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியே தொடர் அமைந்திருந்தது. உலகமே டொனால்ட் டக்கை விரும்புவதற்கு ஒரே காரணம், அதன் நேர்மறையான எண்ணங்களே. எதையும் செய்ய முடியும், முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு அற்புதமான உதாரணம்தான் டொனால்ட் டக். நம்மால் எதிர்கொள்ள முடியாத சக்திகளை, இயற்கைச் சீற்றங்களை, சினம் கொண்ட சிங்கம்போல டொனால்ட் டக் எதிர்கொள்ளும்.

நண்பர்கள்

டெய்சி டக்:

டொனால்டின் தோழியாக வந்து, பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டார் டெய்சி. டொனால்டின் பல சாகசங்களுக்கு ஊக்கமளிப்பவர். பெரும்பாலான கதைகளில் டொனால்ட் ஆரோக்கியமில்லாமல் இருப்பதாகவும், உடனே ஏதாவது உடற்பயிற்சி வேண்டுமென்றும் டெய்சி டக் சொல்லும். அது ஏடாகூடமாகக் கதையை நகர்த்தும்.

அங்கிள் ஸ்குரூஜ்:

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான ஸ்குரூஜ், கஞ்சத்தனமான கதாபாத்திரம். டொனால்டின் மாமாவான இவருக்கு உருவம் கொடுத்தவர் டிஸ்னி கதை இலாகாவில் இருந்த கார்ல் பார்க்ஸ்தான். டொனால்டுக்கு நேர் எதிராக, உலகிலேயே அனைத்து அதிர்ஷ்டமும் இவருக்குதான் கிடைக்கிறது என்று பலரும் நம்புவார்கள்.

அதற்குக் காரணம், இவரிடம் இருக்கும் நம்பர் ஒன் அதிர்ஷ்ட நாணயம். அது இருக்கும்வரை இவருக்கு எந்தச் சம்பவம் நடந்தாலும், அது இவருக்குச் சாதகமாகவே முடியும். உதாரணமாக, ஒரு விண்கல் இவருடைய வீட்டின் மீது மோதும், அதில் தங்கக் குழம்பு இருக்கும். இப்படியாக எது நடந்தாலும், கடின உழைப்பாளிகளுக்கு அது சாதகமாகவே முடியும் என்பதை உணர்த்துபவர்தான் ஸ்குரூஜ்.

ஹூயி, டூயி, லூயி:

டொனால்டின் தங்கை டெல்லாவின் மகன்களான இவர்கள்தான் இந்தத் தொடரின் தற்போதைய சூப்பர் ஸ்டார்கள். அச்சு அசப்பில் ஒரே மாதிரியாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்திருக்கும் தொப்பியின் நிறத்தை வைத்தே யாரென்று அடையாளம் காண முடியும்.

அமெரிக்காவின் இரண்டு பிரபலமான அரசியல்வாதிகளையும், ஒரு முன்னாள் டிஸ்னி ஓவியரையும் மனதில்கொண்டு உருவாக்கப்பட்ட இவர்கள்தான், டொனால்டுக்கு அடுத்தபடியாகக் காமிக்ஸ் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் அதிகம் தோன்றியவர்கள்.

கிளாட்ஸ்டோன் கான்டர்:

டொனால்டின் உறவினரான இவருக்கு, டொனால்டுக்கு நேர் எதிரான கதாபாத்திரம். வாழ்க்கையின் அனைத்து வழிகளிலும் அதிர்ஷ்டம் இவருடைய வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும். ஆனால், கடின உழைப்பும், திட்டமிடும் சாமர்த்தியமும் இல்லை என்றால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், தொடர்ந்து ஜெயிக்க முடியாது என்பதற்கு இவர் உதாரணம்.

எதிரிகள்

சூனியக்காரி மேஜிகா:

அங்கிள் ஸ்குரூஜ் வசம் இருக்கும் அதிர்ஷ்ட நாணயத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதையே தன்னுடைய வாழ்நாள் லட்சியமாகக் கொண்டது மேஜிகா. அதற்காகப் பல முயற்சிகளில் ஈடுபடுவதும், அவற்றில் தொடர்ந்து தோற்பதும் தொடரில் வழக்கமான விஷயம். பல்வேறு மந்திர, தந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த மேஜிகா, அந்த நாணயத்தைக் கைப்பற்ற விடாமல் தடுப்பது ஸ்குரூஜின் அதிர்ஷ்டமும், டொனால்ட் டக் மற்றும் அவரது மூன்று குட்டி ஹீரோக்களுமே.

பீகிள் பாய்ஸ்:

அங்கிள் ஸ்குரூஜின் பொக்கிஷங்களைக் கொள்ளையடிப்பதையே முழு நேரப் பணியாகக் கொண்டவர்கள்தான் இந்தப் பீகிள் பாய்ஸ். இவர்கள் ஏழு பேரும் ஒரே மாதிரி உடை அணிந்திருப்பார்கள். அதில் சிறைச்சாலை எண்கள் எழுதப்பட்டு இருக்கும். இந்தக் குழு, பலவிதமான மோசடி வேலைகளில் ஈடுபட்டு, திருட முயலும்.

உண்மையில் டொனால்ட் ட தொடர் 80 வருடங்களைக் கடந்து தொடர்ந்து வெற்றிபெற்று வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், இத்தொடர் மூலம் அவர்கள் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவமே. என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், கடின உழைப்பும், சரியான திட்டமிடலும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தைப் பெற முடியும் என்பதே அது.

உருவாக்கியவர் : வால்ட் டிஸ்னி

முழு பெயர் : டொனால்ட் ஃபான்டில்ராய் டக்

பிறந்த நாள் : மார்ச், 13, வெள்ளிக்கிழமை.

முதலில் தோன்றியத் தேதி: ஜூன் 9, 1934. (The Wise Little Hen கார்ட்டூன் படம்)

கதாபாத்திரம் : மனிதர்களைப்போலக் குணாதிசயம் கொண்ட கோபக்கார வாத்து. எப்போதும் கப்பல் மாலுமி போல உடை அணிந்திருக்கும். இது பேசுவது பாதி நேரம் புரியாது. ஆத்திரத்தில் பேசும்போது, எதுவுமே புரியாது.

தகவல் ::கிங் விஸ்வா