September 18, 2021

விஷ்ணு விஷாலின் ‘கதாநாயகன்’ பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

மெல்ல மெல்ல வளந்து வரும் நாயகனான விஷ்ணு விஷால் ’மாவீரன் கிட்டு’ படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ பல மாதங்களாக வெளியீட்டிற்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. தற்போது, விஷ்ணு கைவசம் முருகானந்தமின் ‘கதாநாயகன்’, ராமின் ‘ராட்ச்சசன்’, செல்லா அய்யாவுவின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, செந்தில் வீராசாமியின் ‘பொன் ஒன்று கண்டேன்’ஆகிய 4 படங்கள் உள்ளது. இதில் ‘கதாநாயகன்’ படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் திரசா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், கலகல காமெடியில் அசத்த சூரி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இதற்கு ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இதனை ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் வெளியிடவுள்ளது. சமீபத்தில் படத்தின் கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை நடிகர் தனுஷும், ‘ஓன் நினைப்பு’ எனும் சிங்கிள் ட்ராக்கை நடிகை தமன்னாவும் வெளியிட்டனர். இப்போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இவர் கதா நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சீனியர் நடிகையான சரண்யா பொன்வண்ணன், “விஷ்ணுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், முயற்சியும் உள்ளது. இது அவரை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். படத்தின் இயக்குனர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தை பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு பேமிலி எண்டர்டெய்னராக இருக்கும்.”என்று குறிப்பிட்டார்.

நடிகர் ஆனந்த் ராஜ், “இப்படத்தில் முதன் முறையாக ஷேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குனர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார். கதாநாய கன் படம் வெற்றிபெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

இயக்குனர் முருகானந்தம், “விஷ்ணு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமால், ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழு எப்போதும் நகைச்சுவையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். எனக்கு உறுதுணையாக இருந்த அணைவருக்கும் நன்றி. பத்திரிக்கை நண்பர்களும் இப்படத்திற்கு நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன. எனினும் முயற்சியை கைவிட வில்லை. கடைசியாக என்னுடைய தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. தற்போது அதே மாதிரியான ஒரு தரமான படமாக கதாநாயகன் படம் வந்துள்ளது. இந்த படத்திற்கு தங்கள் நல்லாதரவினை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.