தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ; விஷால் & டீம் வின்!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ; விஷால் & டீம் வின்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 – 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரி யாகப் பொறுப்பேற்று தேர்தலை நடத்தினார். இதில் வாக்களிக்க 1211 உறுப்பினர்கள் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

vishal apr 3

கேயார், ஆர்.ராதாகிருஷ்ணன், விஷால் தலைமையிலான 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டி யிட்டன. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, கலைப்புலி எஸ்.தாணு, அமீர், சேரன், குஷ்பு, எஸ்பி.முத்துராமன், டி.ராஜேந்தர், சத்யராஜ், கே.பாக்யராஜ், ஆர்.பி.சவுத்ரி, சுஹாசினி மணிரத்னம், சசிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், பார்த்திபன், மோகன், நாசர், கார்த்திக் நரேன் உட்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.தேர்தல் நடைபெற்ற கல்லூரி வளாகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த தேர்தலில் மொத்தம் 1059 வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விஷால் – 476 வாக்குகளும், ஆர்.ராதாகிருஷ்ணன் – 332 வாக்குகளும், கேயார் – 224 வாக்குகளும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவர்கள் போட்டிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், கவுதம் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 373 வாக்குகளும், கதிரேசன் 415 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு விஷால் அணியில் இருந்து போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மிஷ்கின் தோல்வி:

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் விஷால் அணியே கைப்பற்றியது என்றாலும், கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் மிஷ்கின் தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் கேயார் அணியைச் சேர்ந்த கதிரேசன் வெற்றி பெற்றார்.

செயற்குழு உறுப்பினர்கள் விவரம்

செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் சுந்தர் .சி, பார்த்திபன், பாண்டிராஜ், ஆர்.வி. உதயகுமார், மன்சூர் அலிகான், எஸ்.எஸ். துரைராஜ், ஆர்.கே. சுரேஷ், ஆர்யா, எஸ். ராமச்சந்திரன், ஜெமினி ராகவா, அபினேஷ் இளங்கோவன், எ.எல். உதயா, எம். கஃபார், பிரவீன்காந்த், மனோஜ்குமார், பி.எல். தேனப்பன், எஸ்.வி. தங்கராஜ், கே. பாலு, எம்.எஸ். அன்பு, எஸ்.எஸ். குமரன் மற்றும் டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

error: Content is protected !!