’இனிமே கோலிவுட் பயணமே தனி வழி’-! – விஷால் பேட்டி முழு விபரம்!
கோலிவுட் தரப்பு எதிர்ப்பார்த்தது போலவே தமிழக அரசின் தலையிட்டு நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையால் 47 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்து உள்ளது. இது குறித்து செய்தியாளர்களை இன்றிரவு சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், “திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது. மேலும் தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே வரும் வெள்ளி(ஏப்., 20) முதல் புதிய படங்கள் வெளியாகும். முதல் படமாக மெர்க்குரி வெளியாகும். அன்றைய தினமே படங்களின் படப்பிடிப்பு மற்றும் மற்ற பணிகளும் துவங்கும். அதே சமயம் இனி வாரத்திற்கு மூன்று படங்கள் மட்டுமே வெளியிடுவது என்றும் அதை கண்காணிக்க ஒரு புது குழு உருவாக்கப்படும் என்றும் தற்போது தயாரிக்கப்பட்டு ரிலீஸூக்கு தயாராக உள்ள படங்கள் வரிசைப் படி வெளியிடப்படும். ஜூன் முதல் தியேட்டர் டிக்கெட் முழுவதும் கணினிமயமாக்கப் படும். ரூ.150 மேல் இனி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் இருக்காது. தயாரிப்பாளர் சங்கம் சார்பிலேயே விரைவில் புதிய ஆன்லைன் இணையதளம் துவக்கப்படும்” என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.
சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் நேரில் சந்திக்கிறோம். அவர்களிடம் பேசி இந்த சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப் படும்.முக்கியமாக காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. இதற்கு ஒத்துழைத்த தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஓத்துழைப்பு மிகப்பெரியது. காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்
அது மட்டுமின்றி மார்ச் 16ல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திரைப்பட படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் புதிய விதியை உருவாக்கியுள்ளனர். “அதாவது ஒரு புதிய தொடங்குவதற்கு முன் அந்த படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியை பெற வேண்டும். அதற்கு அந்த படக்குழு முழு கதையையும் தயாராக வைத்திருக்க வேண்டும், எந்த நாட்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்ற விவரத்தை கொடுக்க வேண்டும், படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும், தொழில் நுட்ப கலைஞர்களிம் ஒப்பந்த பட்டியலை கொடுக்க வேண்டும் இந்த விபரங்களை கொடுத்தால் மட்டுமே தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கடிதம் கொடுக்கும்.
அந்த கடிதத்தை பெப்சி அமைப்பில் படக்குழுவினர் கொடுத்தால் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் அந்த படத்தில் பணியாற்றுவார்கள். இந்த புதிய விதியை கடைபிடிக்க வேண்டியிருப்பதால் வரும் வெள்ளிக் கிழமையே படங்களின் படப்பிடிப்பு தொடங்கும்” என்றும் விஷால் கூறினார்.
இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சாதனைகளை திரையுலகம் கொண்டாடுகிறது, இந்திய திரையுலககே கோலிவுட்டை வியந்து பார்க்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆம்..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 47 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையன்று முடிந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது. இப்போது விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டு மல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது. இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார்.
திரைப்படங்களின் படப்பிடிப்பு, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகள் (போஸ்ட் ப்ரொடக்ஷன்), வெளியீடு ஆகியவற்றை தடுத்து நிறுத்தினார் என்று அவரைக் குற்றம் சாட்டியவர்கள்கூட இப்போது இந்தப் போராட்டம், திரையுலகுக்குப் பெற்றுத் தந்துள்ள நன்மைகளுக்காக அவரைப் புகழ்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழ்சினிமாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த சலுகைகள் இவைதான் என்று பலர் பாராட்டுகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால், FEFSI ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்ததுதான் இதன் தொடக்கப்புள்ளி. ஒரு முக்கியமான தருணத்தில், படத் தயாரிப்புகளை நிறுத்தி FEFSI உடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். பல விஷயங்களை நெறிப் படுத்தினார். அதுவரை அவை யோசித்த பார்க்க முடியாத விஷயங்களாக இருந்தன. இந்தச் செயலே, அவருக்கு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. இதனால்தான் அவர் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு எதிராகாவும், திரை யரங்கு உரிமையாளர்கள், மாநில அரசு உள்ளிட்ட பல தரப்பினரிடம் தயாரிப்பாளர் களின் கோரிக்கைகளுக்காகவும் விஷால் போராட்டத்தைத் தொடங்கியபோது சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவருக்குத் துணையாக நின்றனர்.
இன்று தமிழ்த் திரையுலகமே மகிழ்ச்சியிலும் கொண்டாட்ட உணர்விலும் திளைக்கிறது. அவர்கள் அனைவரும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்துக்கு நன்றி சொல்கின்றனர். நல்ல மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் தொடங்கியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 100% கணினி மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முறை மற்றும் வெளிப்படைத்தன்மை. பார்வையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு அனுமதித்த கட்டணங்களுக்குட்பட்டு படத்துக்கேற்றபடி டிக்கெட் விலை வைத்துக்கொள்வதற்கான வசதியுடன் (ஃப்ளெக்ஸிபில் டிக்கெட்டிங்) 3 அடுக்குகளில் டிக்கெட் கட்டணங்கள், தமிழ கத்தில் பாதிக்கு மேற்பட்ட திரையரங்குகளில் இருக்கும் ஈ.சினிமாவில் 50% விலை குறைப்பு, (டி-சினிமாவுக்கான விலை அதற்காக அமைக்கப்பட்டுள்ள தென்னிந்திய கூட்டு செயல் பாட்டுக் குழுவால் நிர்ணயிக்கப்படும்) உள்ளிட்டவை திரையுலகினருக்கு வெற்றியை உறுதிசெய்யும் விளைவுகள்.
ஒரு வாரத்துக்கு ரூ.5000/-, படத்தின் முழு ஓட்டத்துக்கு ரூ.10,000 மற்றும் ஒரு காட்சிக்கு ரூ.250 என்ற கட்டண முறையை க்யூப் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த கட்டண முறை ஆறு மாதங்களுக்கு சோதிக்கப்படும். அதற்குள் இதை நிரந்தரமாக்கிவிடுவோம் அல்லது இது சரியாகப் பயனளிக்கவில்லை என்று கட்டணங்களை மாற்றச் சொல்வோம் என்று அரசு மற்றும் திரையுலக அமைப்புகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சொன்னார் விஷால். அதன் தொடர்ச்சியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது ,”திரையரங்குகளில் இனி 150 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விலை இருக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார். திரையுலகில் வரும் ஜூன் மாதம் முதல் புதிய நடைமுறைகளை அமல்படுத்தவுள்ளனர். அதில் முதல்கட்டமாக வெளிப்படைத்தன்மையோடு கூடிய கணினி முறை டிக்கெட் விற்பனையை அறிமுகப்படுத்துகின்றனர். அதற்காக தயாரிப்பாளர் சங்கம் பிரத்யேகமாக இரு இணையதளங்களை விரைவில் தொடங்கவுள்ளது என்று விஷால் தெரிவித்தார்.
ஆக, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் சாதனைகள் இந்திய திரையுலகில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டன. விஷாலின் நோக்கமும் மன உறுதியும் அனைவருக்கும் நன்மைகளைப் பெற்றுத் தந்துள்ளன என்று அண்மைக் காலங்களில் அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.