யோவ்.. வாங்கய்யா! – தயாரிப்பாளர்களை அழைக்கும் விஷால்

யோவ்.. வாங்கய்யா! – தயாரிப்பாளர்களை அழைக்கும் விஷால்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கதிரேசன், தேனப்பன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மற்றும் டி.ராஜேந்தர், ஞானவேல்ராஜா, நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் ரவி கொட்டாறக்கரா, சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

vishal

‘உத்தா பஞ்சாப்’ இந்தி படம் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியான விவகாரம், ‘பெப்சி’ தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை, திருட்டு வி.சி.டி. உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் விஷால், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “திரை உலகில் திருட்டு வி.சி.டி.க்கள் பெரிய பிரச்சினையாக உள்ளது. ‘உத்தா பஞ்சாப்’ படம் திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து திரை உலகினர் ஒன்றுகூடி விவாதித்தோம். எந்த திரையரங்கில் திருட்டு வி.சி.டி. எடுக்கப்படுகிறதோ? அந்த திரையரங்குகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு நடந்தது நாளை யாருடைய படத்துக்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

வாரத்துக்கு 4, 5 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள் திருட்டு வி.சி.டி.யாகவும் வெளிவந்துவிடுகிறது. ஒவ்வொரு திரையரங்கிற்கும் படங்களை அனுப்புவதற்கும் ஒரு குறியீடு பதிவு செய்யப்படுகிறது. அந்த குறியீடு மூலம் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு வி.சி.டி. எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். நடிகர்களும் இதில் இணைந்து செயல்பட வேண்டும். பல கோடி ரூபாய் செலவு செய்து படங்களை தயாரிக்கிறோம். அவை திருட்டு வி.சி.டி.யாக வெளிவருவதால் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்

error: Content is protected !!