March 22, 2023

பொதுவாக சினிமாக்களில் காதல்,அதிரடி, குடும்பம், நகைச்சுவை, திகில் என்று ஏகப்பட்ட வகைகள் உண்டு என்றாலும் இவைகளில் குடும்பம் என்ற சப்ஜெக்டில் மட்டும் இப்போதெல்லாம் தமிழ் சினிமா வரவே இல்லை என்ற குறையை போக்கி விட்டான் இந்த விருமன். ஒரு பக்கா கிராமத்துப் பின்னணியில் கொஞ்சம் சென்டிமென்ட், குடும்பம்னா,… என நெஞ்சை உருக்கும் வசனங்கள், குறிப்பிட்ட சாதிப் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக் காட்சிகள், வழக்கம் போல் காதல் என முத்தையா படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அது எல்லாமே தேவையான அளவு உண்டு.

கதை என்னவென்றால் கணவர் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) வேலைக்காரியோடு உறவில் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் மனைவி முத்துலட்சுமி (சரண்யா பொன்வண்ணன்). அம்மா மரணத்திற்கு அப்பாதான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுகிறார். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். முடிவில் தந்தையும் மகன்களும் சேர்ந்தார்களா என்பதுதான் இந்த விருமன்

படத்தில் நடித்திருக்கும் அனைவருமே தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கார்த்தி . சண்டியர் டெம்ப்ளேட்டில் கார்த்தி. தொடை தெரியும்படி லுங்கியைக்கட்டிக்கொண்டு, முறுக்கு மீசை, ஷேவ் செய்யாத தாடியுடன், ஹாம்ஸை காட்டுவதற்காகவே அளவெடுத்து செய்த சட்டையை மாட்டிக்கொண்டு ஆக்சன், காமெடி,, நடனம் , நக்கல், நையாண்டி என்று அனைத்திலும் புகுந்து நக்கலுடன் விருமனாக சீறி சபாஷ் சொல்ல வைக்கிறார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் ஷங்கரின் மகள் அதிதி முதல் படம் போல இல்லாமல் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடல்,, நடனம். சென்டிமென்ட் காட்சிகள் என்று அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே சமயம் உருக்கமான, உணர்ச்சிபூர்வமான, கோபப்படும் காட்சிகளில் நடிப்பில் பாஸாக அவர் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம்.

வில்லனாக நடிப்பதற்கென்றே பிறந்தவர் என்பதை இந்த படத்திலும் உறுதி செய்து இருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரைவிட ராஜ்கிரணின் கேரக்டர் அட்ராக்ட் செய்கிறது காமெடியனாக வந்திருக்கும் சூரி போதும்னான அளவு. சிரிக்க வைத்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை கிராமத்து படத்திற்கு ஏற்றார் போல மிக கச்சிதமாக புரிந்து இருக்கிறது
அதிலும் பிஜிஎம் அபாரம்.. செல்வகுமாரின் கேமரா, ஜாக்கியின் ஆர்ட் ஒர்க் விருமனுக்கு பல சேர்கிறது.

மொத்தத்தில் இந்த விருமன் – பாஸாயிட்டான்

மார்க் 3.5/5