January 28, 2023

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தொடரும் வன்முறை – ஐ.நா. கண்டனம்! .

லங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.அதிபருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளது. அவற்றை விரைவில் விவாதத்துக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் அக்கட்சி வற்புறுத்தி வருகிறது.

கடந்த 6-ந் தேதி நடந்த இலங்கை மந்திரிசபை கூட்டத்தை தொடர்ந்து, இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினருக்கு நெருக்கடி நிலை அதிக அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகு புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று இலங்கை பார் அசோசியேசனும், செல்வாக்கு மிக்க புத்தமத துறவியும், ஆளுங்கட்சி அதிருப்தியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

அதிபர் நேற்று முன்தினம் சமாகி ஜன பலவேகயா தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு கேட்டுக்கொண்டார். அதுபோல், முன்னாள் அதிபர் சிறிசேனா, சஜித் பிரேமதாசாவை நேரில் சந்தித்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந் நிலையில், கோத்தபய ராஜபக்சே அழைப்பை சஜித் பிரேமதாசா நிராகரித்தார். “எங்கள் தலைவர், அதிபரின் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்” என்று சமாகி ஜன பலவேகயாவின் தேசிய அமைப்பாளர் திஸ்சா அட்டநாயகே தெரிவித்தார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பநிலை நீடிக்கிறது. இதற்கிடையே, நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதால், பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக இலங்கை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு படையினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.மேலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதே சமயம் இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது வீசியெறியப்படும் கண்ணீர்புகைக்குண்டுகளை சாலை பாதுகாப்பு கூம்புகளை வைத்து செயலிழக்க செய்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் உணவகம் ஒன்றிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்துச் சென்றனர். அரசியல்வாதிகள் 35-க்கும் மேற்பட்டோர் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனாவின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் குமார் வெல்காமா பயணம் செய்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.டாம்புலாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரா டென்னகூனில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜான்சன் பெர்னாண்டோ என்பவருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் பார் ஒன்றை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அலுவலகங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ரமேஷ் பதிரானேவின் வீடு, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்கா ஃபெர்ணாண்டோ உள்ளிட்டோரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சூழலில் இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம். தெரிவித்துள்ளார்