December 2, 2022

’வினோதய சித்தம்’ -பட விமர்சனம்!

நார்மன் வின்சென்ட் பீலே அமெரிக்க எழுத்தாளர் மற்றும் மத குருமார். நேர்மறை சிந்தனைகள் தொடர்பான தனது கோட்பாடுகளை புத்தகங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவரிவர். ஊக்கமளித்தல், சிந்தனைகள், நம்பிக்கை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பான இவரது படைப்புகள் உலகளவில் பெரும் புகழ்பெற்றவை. இவரது “தி பவர் ஆப் பாசிடிவ் திங்கிங்” என்ற புத்தகம், இருபதாம் நூற்றாண்டில் விற்பனையில் பெரும் சாதனை படைத்த புத்தகங்களுள் ஒன்று. மேலும், இது பல உலக மொழிகளில் மொழி பெயர்ப்பும் செய்யப்பட்டுள்ளது. அவரின் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்…!

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்ப மயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை…

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்…

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது…

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்…*

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்…

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா…? கொஞ்சம் பொறுங்க.. மேற்படி நிகழ்வுகளை வைத்து சமுத்திரக்கனி ஆழமான பார்வையோடு ஒரு படத்தை எடுத்து சகலரையும் கவர்ந்து இருக்கிறார்.. ப்சக்கென்று வாயில் அல்லது மனசில் ஒட்டாத தலைப்பான ‘வினோதய சித்தம்’ என்ற பெயர்தான்.. ஆனாலும் அபிராமி ராமநாதன் தயாரிப்பில்  உருவாக்கி ஜி 5 ஓடிடி ரிலீஸ் செய்திருக்கும் சினிமாவையும் ஒரு முறைப் பார்த்து விட்டால் உறுதியாக உங்கள் வாழ்க்கை போக்கில் கொஞ்சூண்டாவது மாற்றம் வருவது நிச்சயம்

இந்த படத்தின் கதை என்னவென்றால் தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையா தான் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார். தனக்கு பதவி கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் காரில் பயணம் செய்கிறார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். தம்பி ராமையாவின் ஆன்மா நேரம் என்று வர்ணித்துக் கொள்ளும் சமுத்திரக்கனியை சந்திக்கிறது. தனது இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். எனவே தன்னை விட்டுவிடுமாறு தம்பி ராமையா சமுத்திரக்கனியிடம் கெஞ்சுகிறார். அதற்கு சமுத்திரக்கனி 90 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருகிறார். அத்துடன் தம்பி ராமையாவுக்கு துணையாக சமுத்திரக்கனியும் செல்கிறார். அந்த 90 நாட்களில் தம்பி ராமையா சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? 90 நாட்களுக்கு பிறகு அவரது உயிர் பிரிந்ததா? இல்லையா? என்பதுதான் வினோதய சித்தம்..

கோலிவுட்டில் நடமாடும் நவீன ஓஷோ என்று பெயரெடுத்த தத்துவஞானி சமுத்திரகனியும், வாழும் செவாலியே என்று வர்ணிக்கப்படும் தம்பி இராமையாவும் திரையையும் மீறி நம்முள் ஆழமாக பாய்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் ஹைலைட்!சஞ்சிதா ஷெட்டி, தீபக், ஷெர்லினா, முனீஷ்காந்த், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இப்படத்திற்கு விழுதுகளே வசனம்தான். ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகிய மூவரும் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள். வாழ்வியல் போக்குடன் ஆங்காங்கே வெடிக்கும் நகைச்சுவைகள் ஒவ்வொன்றுமே வாய் விட்டு சிரிக்க வைக்கிறது. மியூசிக் டைரக்டர் சி.சத்யாவுக்கு பாடல்களுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் பின்னணியை இசையில் கவர்கிறார்.. !

மொத்தத்தில் நம் வாழ்க்கையை நமக்கே சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடி..

மார்க்  :உங்களுக்கு பிடிக்கும் அளவு