August 2, 2021

நம் நாட்டின் முதல் சத்தியாக்கிரகி வினோபா பாவே!

வினோபா பாவே, மகாராஷ்டிரத்தின் கொலாபா மாவட்டத்து ககோடா கிராமத்தில் 11.9.1895-ல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விநாயக். இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் பிடிக்கும். ஆனால், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார். காசியிலேயே இருந்து சாமியாராவதா, கல்கத்தா சென்று புரட்சி வீரனாகிவிடுவதா என்று 20 வயது விநாயக்கின் மனதில் போராட்டம்.

vinoba nov 15

ஒரு நாள், செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால், காசி இந்து சர்வகலாசாலையில் காந்தி ஆற்றிய உரை கண்ணில் படுகிறது. வாசிக்க வாசிக்க அவருக்கு வழி புரிந்துவிட்டது. காசியும் இல்லை, கல்கத்தாவும் இல்லை. இனி நாம் போக வேண்டிய இடம் அண்ணலின் திருவடி நோக்கி என்று அவரிடமே 7.6.1916-ல் அடைக்கலம் புகுந்தார். காந்தி ஆசிரமத்தில் தங்கி சேவை செய்தார். காந்தியின் கட்டளையை ஏற்று வார்தா ஆசிரமப் பொறுப்பை 8.4.1921-ல் ஏற்றார். கதர் தயாரிப்பு, கிராமத் தொழில்வளர்ச்சி, புதிய கல்வி, கிராம சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். 1938-ல் பௌனார் என்ற இடத்தில் பரந்தாம ஆசிரமத்தை நிறுவினார். 1925-ல் வைக்கம் ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க காந்தியால் கேரளத்துக்கு அனுப்பப்பட்டார்.1940-ல் தனிநபர் சத்தியாகிரகத்துக்கு வினோபாவைத்தான் காந்தி முதலில் தேர்வுசெய்து அனுப்பினார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கும் லட்சக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை ஓரளவு சீரடைந்திருப்பதற்கு வினோபாவும் ஒரு காரணம்.“விமானங்களும் மற்றைய போக்குவரத்துச் சாதனங்களும் தேவைதான். ஆனால், மனிதனுக்குக் கால்கள்தான் முக்கியம்.” இதைச் சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை, 14 ஆண்டுகளில் 70,000 கிலோ மீட்டர் நடந்தார். நடந்ததோடு நின்றுவிடவில்லை. இந்தியாவின் கிராமங்கள்தோறும் சென்று, 42 லட்சம் ஏக்கர் நிலத்தை நிலவுடைமையாளர்களிடமிருந்து பெற்று, நிலம் இல்லாதவர்களுக்கு வாங்கித் தந்தார்.

இன்று இணையத்தில் நிலங்களை விற்கும் எந்த வலைத்தளத்தையும் பாருங்கள். இந்தியாவின் ஏதோ ஒரு கோடியில், தண்ணீருக்கும் சாலைகளுக்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் இடங்களில்கூட நிலத்தின் விலை குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாயாவது இருக்கும். இவர் ஏழைகளுக்குப் பெற்றுத்தந்த நிலங்களின் மதிப்பு இன்று 42,000 கோடி ரூபாய். இது 2014-15-ல் தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு. ஆனால், இவர் நாள் ஒன்றுக்கு இரண்டு அணாக்கள் (பன்னிரண்டு பைசா) மாத்திரம் உணவுக்காகச் செலவிட்டு, ஒரு வருடம் கழித்தவர். பணம், பதவி, புகழ் போன்றவற்றைத் துச்சமாக மதித்தவர். உயிர்கூட இவருக்குப் பெரிதல்ல. இறுதி நாட்களில் பட்டினி கிடந்து நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டவர். இவர் இருந்த இந்தியா வேறு. இன்று நாம் கனவில்கூட இவர் சாதித்தது நடக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. இவர் பெற்றுத்தந்த நிலங்களின் பரப்பளவைவிடக் குறைவான பரப்பளவைக் கொண்ட நாடுகள் உலகில் தொண்ணூறுக்கும் மேல் இருக்கின்றன.

1940-ம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தி அறிவித்தபோது, முதல் சத்தியாக்கிரகியாக வினோபா பாவே சிறை செல்வார் என்று சொன்னபோது, நாட்டில் மிகச் சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு வினோபா பாவே என்றால் யார் என்றுகூடத் தெரியாது. ஆனால், காந்தி அவரைச் சரியாக அறிந்து வைத்திருந்தார். 1895-ம் ஆண்டு பிறந்த வினோபா, காந்தி மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு இயங்கத் தொடங்கியது 1916-ம் ஆண்டு. துறவியாக வேண்டும் என்று நினைத்த அவர், காசி ஹிந்துப் பல்கலைக்கழகத்தில் அதே வருடம் காந்தி நிகழ்த்திய உரையைப் படித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையில் காந்தி, “பயமின்மை இல்லாவிட்டால், அகிம்சை இருக்க முடியாது” என்று கூறியது அவரைச் சிந்திக்க வைத்தது. காந்தியின் சீடராக இருப்பதுதான் தனது வாழ்க்கையின் மையப்புள்ளி என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

எந்தத் தொழிலையும் செய்யலாம்

வார்தா ஆசிரமத்தின் பொறுப்பை 1921-ம் ஆண்டு ஏற்றுக்கொண்ட அவர், அதற்கு முன்னால் சபர்மதி ஆசிரமத்தில் இருந்தார். அங்கு நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றி அவர் தனது வாழ்க்கைக் குறிப்பில் எழுதுகிறார்: “எங்களது ஆசிரமத்தில் மலம் அள்ளும் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் உடல்நலக் குறை வால் வேலைக்கு வர முடியவில்லை. அவர் தனது மகனை – அவன் சிறுவன் – தனக்குப் பதிலாக அனுப் பினார். சிறுவனால் மலவாளியைத் தூக்க முடிய வில்லை. அவன் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்த எனது சகோதரர் ‘நான் உதவி செய்கிறேன்’ என்றார். என்னையும் கூட அழைத்தார். இவ்வாறாக மலம் அள்ளும் தொழிலை ஆரம்பித்தோம். அன்னை கஸ்தூரி பாவுக்கு ஒரே வருத்தம், பிராமண இளைஞர்கள் மலம் அள்ளுவதா என்று. ஆனால் காந்தி, ‘பிராமணர்கள் மலம் அள்ளுவதைவிடச் சிறந்தது எதுவாக இருக்க முடியும்?’ என்றார்.”

1949-ம் ஆண்டு தெலங்கானாவில் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அவர் பொச்சம்பள்ளி கிராமத்தில் இருந்தபோது, நிலம் இல்லா விவசாயிகள் அவரைச் சந்திக்க வந்தார்கள். எங்களுக்குச் சிறிதளவு நிலம் இருந்தால் போதும், நாங்கள் உழைத்துப் பாடுபட்டு எங்கள் வாழ்க்கையைக் கழித்துக்கொள்வோம் என்றார்கள். எவ்வளவு நிலம் வேண்டும் என்று வினோபா கேட்டார். 80 ஏக்கர் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அப்போது அங்கிருந்த நிலவுடைமையாளர் ஒருவர் நான் 100 ஏக்கர் இலவசமாகத் தருகிறேன் என்றார். இந்தச் சம்பவம்தான் அவரை கிராமம் கிராமமாக நடந்து பூமியைத் தானம் செய்யுங்கள் என்று, பூமி தங்களுக்குச் சொந்தம் கொண்டாடியவர்களைக் கேட்க வைத்தது. கம்யூனிஸ்டுகள் அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தாலும், இவர் புதிதாக ஏதோ செய்கிறார் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. வினோபா பாவேயின் சர்வோதய இயக்கத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தியவர்கள் கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினர். இவர்களது முயற்சியால்தான் கீழவெண்மணியின் 74 தலித் குடும்பங்களுக்கு 74 ஏக்கர் விளைச்சல் நிலம் கிடைத்தது. தொடர்ந்து பல நூறு விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க அவர்கள் உதவினார்கள்.

வினோபா தன்னை வானத்து அமரர் என்று நினைத்ததில்லை. கொள்கைப் பிடிப்போடு கட்சி அரசியல் செய்யும் அரசியல்வாதியும் இல்லை. அவசர நிலையின்போது இந்திரா காந்தியை ஆதரித்து அவர் ஏன் அறிக்கை விட்டார் என்பது இன்று வரை புரியாத புதிர். ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் காந்தி காட்டிய பாதையே சரி என்று நினைத்து அந்தப் பாதையிலிருந்து கூடிய மட்டும் விலகாமல் தன் வாழ்நாளைக் கழித்தவர் அவர். இவரைப் போன்ற தனிமனிதரால், கருத்தியல் வாதியால், மொத்த சமுதாயமும் மாறச் சாத்தியம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், மாற வேண்டும் என்ற முனைப்போடு அவர் உழைத்தது அப்பழுக்கற்றது. அவரது உழைப்பினால் பல கிராமங்கள் உயர்ந்திருக்கின்றன. பல லட்சக் கணக்கான எளிய மக்களின் வாழ்க்கை ஓரளவு சீரடைந்திருக்கிறது. புரட்சியின் வாள் இவரால் மழுங்கியது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், இவர் வாழ்ந்த வாழ்க்கை எந்தப் புரட்சி வாழ்வுக்கும் குறைவில்லாதது.இந்தியாவாலும் காந்தியாலும் மட்டுமே வினோ பாக்களை உருவாக்க முடியும்.

– பி.ஏ. கிருஷ்ணன்,