March 21, 2023

விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி – சென்னையில் அமைதியாக நடந்தது!

நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை முழுவதும் 2602 விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் கடலில் கரைக்கும் நிகழ்வு அமைதியாக நடந்தது.

சென்னையின் பல்வேறு இடங்களில் அத்திவரத விநாயகர், சங்கு விநாயகர், ராணுவ விநாயகர் என பல்வேறு வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. 3 நாட்கள் வழிபாட்டுக்குப் பின் கடந்த 5-ஆம் தேதியும் நேற்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் இன்று நடைபெறும் விநாயகர் ஊர்வலங்கள் மூலம் சுமார் 2300 சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு கடல் பகுதிகளில் கரைக்கப்படுகின்றன. சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடல் பகுதியில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை வடபழனி விஜயராகவபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையும் கொண்டு வரப்பட்டது

பட்டினப்பாக்கத்தில் 1600 சிலைகள் கரைக்கப்படுகின்றன. பெரிய சிலைகளை கரைக்க 2 கிரேன் களும் சிறிய சிலைகளை கரைக்க டிராலிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

சிலை கரைக்கும் இடத்தில் மட்டும் 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் கோபுரங்கள், சி.சி.டி.வி.க்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு உள்ளன. சிலையைக் கரைப்பதற்காக கடலுக்குள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உயிர்காக்கும் குழுவினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்புத்துறையினர், மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிலைகளுடன் ஊர்வலத்தில் வருபவர்கள் யாருக்கும் இடையூறு இன்றி விரைவாக வரவும், பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் அறிவுறுத்தினார்.

சென்னை காசிமேட்டில் 250 சிலைகள் கரைக்கப்படும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காசி மேட்டில் சிலைகளுடன் வருபவர்கள் மட்டும் கடற்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். சிலைகள் கரைக்கப்படுவதை காண மக்களுக்கு அனுமதி இல்லை

நீலாங்கரை, எண்ணூர் திருவொற்றியூர் ஆகிய இடங்களிலும் சிலைகள் கரைக்கப்படுகின்றன. சிலைகளை கரைப்பதற்கு ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். கமாண்டோ மற்றும் சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிலைகள் கரைக்கும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது. ரசாயனம் கலந்த சிலைகளை கரைக்கக் கூடாது, போலீசாரிடம் அனுமதி பெற்று டோக்கன் பெற்றுத் தான் சிலைகளை கரைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த வித பிரச்னையும் இல்லாமல் இந் நிகழ்வு நடந்தேறியது.