April 13, 2021

விநாயகர் சதுர்த்தி பூஜை – சில குறிப்புகள்

முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்தது ஆவணி மாத வளர் பிறை சதுர்த்தி திதியில். இந்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். இந்த ஜய வருடத்தில் வரும் ஆகஸ்ட் 29 (ஆவணி-13) ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறையில் சதுர்த்தி வரும். அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி திதி வளர்பிறை சதுர்த்தி. பெளர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தி திதி தேய்பிறை சதுர்த்தி ஆகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தியாக வணங்கப்படுகிறது.


பூஜைக்குத் தேவையான பொருட்கள்:மஞ்சள் தூள், குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், பூணூல், உதிரிப்பூக்கள், பூச்சரம் அல்லது பூமாலை, மணி, பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம், அர்க்ய பாத்திரம், பஞ்சுத்திரி, நெய் அல்லது நல்லெண்ணெய், கற்பூரம், தூபக்கால், தீப விளக்கு, கற்பூரத்தட்டு, ஊதுபத்தி, அரிசி, மஞ்சத்தூள் கலந்த அக்ஷதை, மனைப்பலகை, மாவிலை, தோரணங்கள் ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜைக்கு தேவையான பூக்கள், பத்ரங்கள்: விநாயகரை பத்ரதளங்களால் அன்றைய தினம் பூஜிப்பது சிறப்பு. அவை, மாசீபத்ரம், கண்டங்கத்திரி, பில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, மாவிலை, அரளி, நெல்லி, மருக்கொழுந்து, வெள்ளெருக்கு, வன்னி, கரிசிராங்கண்ணி, வெண்மருதை, எருக்கு, மாதுளை, புன்னை, மகிழன், வெட்டிவேர், தும்பை, பாதிரி, தாழை, முல்லை, கொன்றை, செங்கழுநீர், ஜவந்தி, பவழமல்லிகை.

பூஜைக்கு உரிய பழங்கள்: பழங்களில் மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை, விளாம்பழம், பிரப்பம் பழம், நாவல், பேரிக்காய், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி, கரும்பு ஆகியவற்றை பூஜைக்கு வைக்கலாம்.

பூஜைக்கு உரிய நிவேதனங்கள்: சர்க்கரைப் பொங்கல், அன்னம், கொழுக்கட்டை, சுண்டல், வடை, பால்பாயசம், தேன், அவல், பொரி, கடலை, வெல்லம் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம்.

பூஜையை மிக விரிவாக செய்ய முடியாவிட்டாலும், விநாயகர் பூஜையுடன், கணபதி அஷ்டோத்திரம் படித்து அருகம்புல்லால், பூக்களால் அர்ச்சிப்பது சிறப்பானதாகும். பூஜையின்போது ஒளவையார் அருளிய விநாயகர் அகவல், ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீ கணேச பஞ்சரத்னம், ஏகதந்த ஸ்தோத்திரம், விநாயகர் கவசம், விநாயகர் காரிய ஸித்தி மாலை ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம்.

ஶ்ரீ கணேச காயத்ரி: ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரச்சோதயாத் இந்த விநாயக காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும்.

தகவல் நன்றி : வெங்கட் கிரி