பிக்பாஸுக்கு போட்டியாக மக்கள் டிவியில் விளையும்பூமி |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக மக்கள் டிவியில் விவசாய சம்பந்தட்ட ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் தமிழ் சேனல்களில் இப்போதைக்கு நம்பர் ஒன் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சியை 2 கோடி பேர் தினமும், கமல் தோன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 4 கோடி பேரும் பார்ப்பதாக கூறப்படுகிறது. 15 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து தங்களுடைய விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இப்போது நாடு இருக்கும் நிலைமைக்கு இதுமாதிரி நிகழ்ச்சி தேவையா என்றும் இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழித்து வருகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதே கான்செப்ட்டில் ஒரு விவசாய நிகழ்ச்சியை தயாரிக்க இருக்கிறார்கள். 5 ஏக்கர் நிலத்தை சுற்றி உயரமாக தடுப்பு அமைக்கிறார்கள். அதற்குள் சில குடிசைகள் ஒரு பம்பு செட்டு, கயிற்று கட்டில் போடுகிறார்கள். படித்த இளைஞர்கள், பெண்கள் 14 பேர் சீர்படுத்தப்பட்ட இந்த வயலில் நாற்று நடுவதில் தொடங்கி கதிர் அறுவடை செய்யும்வரை அங்கு தங்கிருக்க வேண்டும். அவர்களே நாற்று நடுவது, களைபறிப்பது, உரமிடுவது, நீர் பாய்ச்சுவது என்று அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். யார் கடைசி வரை தாக்குபிடித்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட்.

இதற்காக காஞ்சிபுரம் அருகே 5 ஏக்கர் விவசாய நிலத்தில் தடுப்பு மற்றும் குடிசைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 5 கேமராக்கள் கொண்டு இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிறார்கள். விவசாயம் பற்றி நன்கு அறிந்த ஒரு திரைப்படக் கலைஞர் நிகழ்ச்சியை நடத்துகிறார். தற்போது இதற்கான ஆட்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

ஒரு சில நடிகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். நம்ம மூவீஸ் சார்பில் ஆர்.கே. தயாரிக்கிறார். இந்த நிகழ்ச்சியை திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்குகிறார். இந்த நிகழ்ச்சி மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகவுள்ளது