December 6, 2022

ர்வதேச அளவிலான வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு போதைப்பொருள் (கடத்தல்) வியாபாரம் நடக்கிறது. இதை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுத்தபடியே உள்ளது. ஆனால் போதை என்றாலே பெரும்பாலானோர் மது மற்றும் சிகரட்டை மட்டுமே நினைக்கின்றனர். இதையும் தாண்டி கஞ்சா, கொகைன், பிரவுன் சுகர், ஹெராயின், அபின் , புகையிலை, மது , ஊக்க மருந்து, ஒயிட்னர் மற்றும் சில மருந்துகள் என ஏகப்பட்டவைகளைக் கடத்த எல்லை விரிந்தபடி போய் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிய வழக்கமான கதைதான் இந்த விக்ரம்.

அதாவது போலீஸ் டிப்பார்ட்மெண்டில் ஒர்க் செய்யும் கமலின் வளர்ப்பு மகன் காளிதாஸ் ஜெயராம் கையில் போதைக் கடத்தல் கும்பல் ஒன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் பிடிபடுகிறது. இதையடுத்து அந்த கடத்தல் செய்யும் முகமுடி கும்பல் காளிதாஸையும் தொடர்ந்து சில போலீஸ்காரர்களையும் கும்பல் கொலை செய்கிறது. கமலையும் கூட அந்த கும்பல் கொலை செய்யப்படுவது போல் காட்டுகின்றனர். அந்த முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டான பகத் பாசிலை களமிறக்குகிறது போலீஸ். இந்த தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் பகத் பாசிலுக்கு கிடைக்கிறது. வரிசையாக போலீஸ்காரர்களை கொல்லும் அந்த முகமுடி கும்பல், போலீஸ் அல்லாத கமலை ஏன் கொலை செய்தார்கள் என விசாரிக்கும் போது தான் பகத் பாசிலுக்கு திடுக்கிடும் தகவல் தெரிய வருகிறது. அது என்ன? அந்த முகமுடி கும்பல் யார் என்பதை பகத் பாசில் எப்படி கண்டரிகிறார் என்பது போன்ற விபரங்களை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கும் படமே இது.

புரொடியூசர் & ஹீரோ கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் (1986 ஆண்டு) விக்ரமாகவும் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் எல்லா வேஷத்திலும் பார்த்து சலித்தாலும் இப்போதும் குடிகாரன், பாசமான தந்தை. தாத்தா என சகல வயசு நடிப்பிலும் வழக்கம் போல் பளிச்சிடுகிறார். கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்ப்பவர் பகத் பாசில். சீக்ரெட் ஏஜெண்ட்டாக வந்து முதல் பாதி முழுவதும் தன் கை வித்தையைக் காட்டி ஒப்பேற்றி இருக்கிறார். அதே சமயம் தானாக யோசித்து சின்ன சின்ன அசைவுகளை கூட ரசிக்க வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

விஜய் சேதுபதி மட்டும் ஏனோ ஏமாற்றி விட்டார். போதைப் பொருள் வியாபாரியான இவர் புதுசாகத் தங்கப் பற்கள், போதை மருந்து வழக்கங்கள், ஹெர்ஸ்டைலில் மாற்றம் மற்றும் அரை நிர்வாண நடை  என்பதுடன் மகேஸ்வரி, மைனா நந்தினி, சிவானி என 3 பொண்டாட்டிகளுடன் மஜாவாக வாழ்ந்து வரும் சந்தானம் என்ற ரோலில் ரொம்ப சொதப்பலாக தன் பங்களிப்பை வழங்கி பெயில் மார்க் வாங்கி விட்டார்.. நரேன் வழக்கம் போல் என்றாலும் சூர்யாவின் கேரக்டர் அவ்வளவாக ஜீரணிக்கவில்லை

பின்னணி இசையில் அனிருத்தின் அபாரமான உழைப்பால் துப்பாக்கி ட்ரிக்கர் ஒலிக் கூட தெறிக்கிறது. கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவை குறை ஏதும் சொல்ல முடியாது

லோகேஷ் கனகராஜ் என்னும் டைரக்டர் கமலின் ரசிகனாக தன் முந்தைய ஹிட் படமான கைதியுடன் கோர்த்துப் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு அரத பழசான போதை பொருளை மையமாகக் கொண்ட ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து கமல் விரும்பும் அளவில் அவர் ரசிகர்களுக்கு என்றே ஒரு பொழுது போக்கு படமொன்றை வழங்கி உள்ளார்.

மொத்தத்தில் விக்ரம் – டமால், டுமீல்., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

மார்க் 2.75/5