August 8, 2022

விஜயகாந்த் ஹீரோவா அறிமுகமான ‘அகல் விளக்கு’ ரிலீஸ் டே!

விஜயகாந்த் ஹீரோவா நடிச்ச அகல் விளக்கு படம் இதே டிசம்பர் 4ல்-தான் ரிலீஸாச்சு

அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ:

விஜயகாந்த் நடிச்ச இரண்டாம் படத்தில்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் ‘அன்னக்கிளி’ ஆர் செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’ (1979 டிசம்பர் 4). (‘மாந்தோப்புக் கிளியே’ படத்தை இயக்கிய எம்.ஏ.காஜாவின் ‘இனிக்கும் இளமை’ என்னும் படத்தில் வில்லனாகத்தான் அறிமுகமானார் விஜயகாந்த். அந்தப் படத்தின் நாயகன் சுதாகர்)

அந்த அகல விளக்கு படத்துலே அவரோட கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி.

படத்தின் கதைப்படி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞரான அவர், தேர்தலில் நின்று வெல்வார். மதுரை நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அக்காலக் கட்டத்தில் அவரோட குடும்பத்தினர் அவர் பெயரைப் பயன்படுத்தி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டு அதிகமாகச் சொத்து சேர்த்து புடுவாய்ங்க.

இதை அறிஞ்ச ஹீரோ விஜயகாந்த் தனது நேர்மையை நிரூபிக்கச் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பார். திரைப்படம் என்பதால் அவருடைய குடும்பத்தினர் தங்கள் தவற்றை உணர்ந்து திருந்திவிடுவார்கள். விஜயகாந்த் மீதான கறை துடைக்கப்பட்டுவிடும். ‘பணக்காரனைப் புறக்கணிக்க முடியுது. ஆனா பணத்தைத்தான் புறக்கணிக்கமுடியல’ என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஆனாலும் ‘அகல்விளக்கு’ ஜொலிக்கவில்லை. ஆனால் பாடல்கள் கொண்டாடப்பட்டன.

இந்தப் படத்தின் ‘ஏதோ நினைவுகள்…’ பாடல் இன்றளவும் பலரது விருப்பத் தேர்வில் ஒன்று. இந்தப் படத்தைப் பார்க்கும்போது வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது என்று தோன்றுது இல்லே. (கட்டிங் கண்ணையா)

இந்த பட அனுபவம் குறித்து ஆர். செல்வராஜிடம் பேச்சுக் கொடுத்த போது, “விஜயகாந்தின் முதல் படம் ‘தூரத்து இடி முழக்கம்’ என்றாலும், நான் எடுத்த ‘அகல்விளக்கு’ என்ற படம்தான் அவர் நடித்து முதலில் வெளியானது. விஜயகாந்தின் இயற்பெயர் விஜய்ராஜ். அவருடைய அண்ணன் செல்வராஜ். அவர் என்னுடன் படித்தவர். சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த விஜியை ஏதாவது படத்தில் பயன்படுத்திக்கொள்ளுமாறு சொல்லியிருந்தார். ‘அகல்விளக்கு’ படத்தில் விஜிதான் ஹீரோ என முடிவுசெய்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளருக்கோ, அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ‘ரயில் பயணங்களில்’ படத்தில் நடித்த ரவீந்திரனை கதாநாயகனாகப் போட வேண்டும் என்று விருப்பம்.

மதுரையில் முதல்நாள் படப்பிடிப்பு. நல்ல நேரம் என்று மத்தியானம் 12.30 மணியைக் குறித்துக்கொடுத்திருந்தார்கள். காலையிலேயே வந்துவிடுவதாகச் சொன்ன ஷோபா, 12 மணி ஆகியும் வரவே இல்லை. தயாரிப்பாளர் உற்சாகமாகிவிட்டார். அப்படியே ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, இன்னொரு நாள் ரவீந்திரனை வைத்துப் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவதாகத் திட்டம் போட்டிருந்தார் அவர்.

நான், ‘‘ஷோபா வரட்டும். அதற்குள் எல்லோரும் மதிய சாப்பாட்டை முடித்துவிடுங்கள்’’ என அனுப்பி வைத்தேன். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஷோபா வந்துவிட்டார். சென்னையில் இருந்து காரில் பயணம். ‘‘சாரி சார். திருச்சியில பெரிய ட்ராஃபிக் ஜாம்’’ என்றார்.

தயாரிப்பாளர், ‘‘நல்ல நேரம் முடிவதற்குள் ஷோபாவை வைத்து ஒரே ஒரு ஷாட் எடுத்து விடுங்கள்’’ என்றார். அப்போதும் அவருக்கு ஷோபா காட்சியை மட்டும் எடுத்துவிட்டு, விஜியை கழற்றி விடுவதுதான் திட்டம். நான் விடுவதாக இல்லை. சாப்பிட்டுக்கொண்டிருந்த விஜியை உடனே அழைத்துவரச் சொன்னேன். அவரும் பாதி சாப்பாட்டில் எழுந்து, அப்படியே கையைக் கழுவிக்கொண்டு ஓடிவந்தார். அதில் விஜயகாந்த்துக்கு ஒரு நல்ல அரசியல் தலைவரின் வேடம். அந்தப் படம் ஓடவில்லை என்றாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ‘அகல்விளக்கு’ படம்தான் காரணம்.

 

அந்த நேரத்தில் விஜயகாந்தின் நண்பர், இப்ராகிம் ராவுத்தர் ஒரு பத்திரிகையில் இப்படிச் சொல்லியிருந்தார். ‘‘விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் மிகவும் சிரமப்பட்டார். பாதி சாப்பாட்டில் எல்லாம் எழுப்பி நடிக்கக் கூப்பிடுவார்கள்.’’ எனக்கு அதிர்ச்சி. விஜிக்கு போன் போட்டு, ‘‘என்ன இப்படி சொல்லியிருக்கிறார்’’ என்றேன். ‘‘அண்ணே, அவனை உடனே உங்ககிட்ட பேசச் சொல்றேன்’’ என்றார். சில மணி நேரத்திலேயே இப்ராகிம் ராவுத்தர் லைனில் வந்தார். ‘‘அன்று என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?’’ என விளக்கினேன். ‘‘இவ்வளவு நடந்திருக்கு… எனக்குத் தெரியாமப் போச்சுண்ணே… சாரிண்ணே… தெரியாம சொல்லிட்டேன்’’ என்றார்.” அப்படீன்னார்

அது போகட்டும் விஜயகாந்துக்குக் கிடைத்த முதல் ஹிட் பாடலை இப்போது ஒருமுறை கேட்டுப் பாருங்கள். பெல்பாட்டமும் பட்டைபட்டனுமாக, அடர்த்தி முடியும் கிருதாவுமாக எண்பதுகளின் வித்தியாச விஜயகாந்தையும் ரசிக்க முடியுதா? இல்லையா?.