மாண்டி இல்லை என்றால் இதே சாயலில் ஆயிரம் ஆப்ஸ் வரபோகின்றது!

விஜய் சேதுபதி மான்டி எனப்படும் பலசரக்கு மளிகைக்கான ஆப்ஸ் விளம்பரத்துக்கு வந்ததை கண்டிக்கின்றார்கள், இதெல்லாம் வியாபாரிகளை ஒழித்துவிடும் இவர் படத்தை ஆண்லைனில் ஓடவிடுவாரா என ஏக இம்சைகள்.. இவர்கள் எந்த காலத்தில் இருக்கின்றார்கள் என்பதே தெரிய வில்லை, காலத்தோடு ஓடாத எதுவும் நிலைக்காது, மாட்டு உழவுகள் டிராக்டர் முன் நிற்காது.

பழைய பாகவதர் கால படங்களை இனி எடுக்க முடியாது

ஏன் பிலிம் கம்பெனியே மூடபட்டு டிஜிட்டல் உலகமாகிவிட்டது அந்த பிலிம் கம்பெனி தொழிலாளர் கதி என்ன?

இந்த ஆப்ஸ் வந்திருப்பது கால மாற்றம், சரி இதனால் தொழில் பாதிக்கபடும் என்பவர்கள் இந்த ஓலா போன்றவற்றால் எவ்வளவு பேர் பாதிக்கபட்டான் அப்பொழுது எங்கே சென்றார்கள்?

டிஜிட்டல் மீடியாவால் மூடபட்ட புத்தக பதிப்பாளர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு என்ன பதில் உண்டு?

மின் மோட்டார், டிராக்டர் வருகையால் ஏர்கலப்பை, சாட்டை, மரகலப்பை, கமலை , மாட்டுக்கு லாடம் கட்டுதல் என எத்தனை ஆயிரம் தொழில்கள் அழிந்தது, யார் கவலைபட்டார்?

அட மிக்ஸி வந்து ஆட்டுக்கல் அம்மி அம்மி கொத்துதல் என எவ்வளவு தொழில் அழிவு? கண்டுகொண்டவர் யார்?

காலம் மாற மாற எல்லாம் மாறும், எல்லா தொழிலிலும் மாற்றம் வரும் அதற்கு தக்க மாறாவிட்டால் நிலைக்கமுடியாது

இந்த மாண்டி நிச்சயம் எளிதானது, விலை குறைவும் சவுரியமும் இருந்தால் மக்கள் அங்குதான் படை எடுப்பார்கள்

மாண்டி இல்லை என்றால் இதே சாயலில் ஆயிரம் ஆப்ஸ் வரபோகின்றது, நாம் முன்பே சொன்னதுதான்

உபர் நிறுவணத்திடம் சொந்த கார் கிடையாது ஆனால் அது பெரும் சாம்ராஜ்யம் வைத்திருக்கின்றது

ஸ்விக்கி போன்றவற்றிடம் ஒரு முறுக்கு கூட கிடையாது ஆனால் உணவு உலகை ஆள்கின்றது

எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்

பல நாடுகளை பார்த்ததால் சொல்கின்றோம், அங்கெல்லாம் முன்பு இப்படி பல சிறுதொழில்கள் இருந்து பின் ஓய்ந்தன‌

ஆளாளுக்கு எங்கோ இருப்பதைவிடுத்து சந்தை அமைப்பில் கூடி ஒன்றாகி நிற்கின்றார்கள்

ஆம் இம்மாதிரி தொழில்நுட்பத்தை எதிர்க்க கூட்டு முயற்சி அவசியம்

ஜவுளி, மளிகை, காய்கறி முதல் கட்டைபீடி வரை ஒரே இடத்தில் கிடைக்கும் பெரும் சந்தைகளை அமைத்தால் மக்கள் உற்சாகமாக வருவார்கள்

ஒன்று முக்கியமானது, மானிட மனம் கொண்டாட்டத்துக்கும் ஊர் சுற்றலுக்கும் ஏங்க கூடியது, மனம் ஒரு குரங்கு என அதைத்தான் சொன்னார்கள்

ஆம் இம்மாதிரி ஆப்ஸ்கள் எல்லாம் அவசரத்துக்கு உதவுமே அன்றி மனிதனை வீட்டை விட்டே வரமுடியாத அளவு முடக்காது அப்படி ஒரு சமூகம் முடங்கவும் முடங்காது

ஷாப்பிங் என்பது ஒரு கொண்டாட்டம்

எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு ஓரளவு செய்தால் இதனை தடுக்கலாம்

மற்றபடி மளிகை கடைக்காரன் கொள்ளை லாபநோக்கில் விலை வைத்தால் இம்மாதிரி மலிவு விலையில் தரமான பொருள்கிடைத்தால் மக்கள் பள்ளம் நோக்கிய வெள்ளமென பாயத்தான் செய்வார்கள்

ஆக விஜய்சேதுபதியினை திட்டி ஒன்றும் ஆகாது. அவர் விளம்பரத்துக்கு வரவில்லை என்றாலும் இவை எல்லாம் மக்களை சென்று அடைந்தே தீரும்

தொழில்நுட்ப சுனாமியினை துடுப்பால் அடக்க முடியாது, மாற்றுவழி தேடுவதே தீர்வு

பம்பு செட் வேண்டாம் அது கமலை இறைப்பதை அழித்துவிடும் என்பதும், டிராக்டர் வேண்டாம் அது ஏர்கலப்பையினை ஒழிக்கும் என்பதெல்லாம் அறிவுடமை ஆகாது

இதில் ஒருவிஷயம் சரியாக இறுக்குதல் வேண்டும்

இம்மாதிரி கம்பெனிகள் நன்றாக சம்பாதித்துவிட்டு வரிகட்டாமல் டபாய்க்கும் உதாரணம் அமெரிக்காவில் இருந்து கூட ஆண்டிபட்டிக்கு ஆர்டர் செய்துவிட்டு கம்மென்று இருக்கலாம் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி வரிகட்டமாட்டார்கள்

அந்த வரியினை சரியாக அரசு பிடித்தால் சிக்கல் இல்லை, எவன் எத்தொழில் செய்தால் என்ன மக்கள் நலமும் அரசுக்கு வரியும் மகா முக்கியம்

ஓம் பிரகாஷ்