October 17, 2021

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெட்டிவேர் செருப்பு வேண்டுமா?

தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத் தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி என்று வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். குரு வேர், விழல் வேர், விரணம், இரு வேலி… என இதற்குப் பல பெயர்கள் உண்டு. புற்கள் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்கள் மட்டுமே மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.

chappal niv 2

மேல் பகுதியில் உள்ள புற்களையும் அடிப் பகுதியில் உள்ள வேர்களையும் வெட்டிய பின்,நடுப்பகுதியான தண்டை மட்டும் மண்ணில் ஊன்றினாலே போதும்; மீண்டும் வெட்டிவேர் செடி தானாக வளர ஆரம்பித்துவிடும். இப்படி வெட்டி எடுத்து விளைவிப்பதாலும் ‘வெட்டி வேர்’ எனப் பெயர் வந்தது.புற்களை வெட்டி எடுத்து விட்டு, வேரை மட்டும் மண் போக நன்கு நீரில் அலசி சுத்தம் செய்து உலர்ந்த பின், மருத்துவத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

வெட்டி வேரை சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டுவைத்து, தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், தலைமுடி வாசமும் வளமும் பெறுவதோடு உடல் வெப்பமும் தணியும்; முடி உதிர்தலும் நிற்கும். தலைமுடித் தைலங்களோடும் இதனைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

சுத்தம் செய்த உலர்ந்த வெட்டி வேரையும் பெருஞ்சீரகத்தையும் சம அளவு எடுத்து சூரணமாக்கி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால், வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு போன்றவை தணியும். 195 மி.கி முதல் 600 மி.கி வரையிலான வெட்டி வேரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு நீரில் ஊறவிட்டு, அந்த ஊறல் நீரை உட்கொண்டால், சுரம், நாவறட்சி, உடல் எரிச்சல் நீங்கும். கோடைக் காலத்தில் அறைகளின் ஜன்னல்களில் வெட்டி வேர் தட்டியைப் பயன்படுத்துவதால், அறையின் வெப்பம் தணிவதோடு நறுமணமும் குளிர்ச்சியும் புத்துணர்வைத் தரும்.

இதனிடையே இந்த வெட்டிவேர் கொண்டு செருப்புக் கூட தயாரித்து ஜரூராக விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டர்கள். இது குறித்து அந்த வெட்டிவேர் செருப்பு தயாரிக்கும் ஆனந்திடம் பேசிய போது, “ வெட்டிவேரில் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். அதை பயன்படுத்தி பலவிதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பொம்மைகள், செருப்புகள், மாலைகள், கால்மிதிகள், படுக்கை விரிப்புகள், வாசனை திரவியங்கள், சோப்புகள் என்று 60-க்கும் மேற்பட்ட பல பொருட்கள் தயாரிக்கிறோம். அதுமட்டுமில்லாமல் கழிவுநீரில் உள்ள நச்சு உலோகங்களை நீக்கி நல்ல நீராக மாற்றும் தன்மையும் இந்த வெட்டிவேருக்கு உண்டு.

IMG_3202_11498

இதற்கிடையில் வெட்டிவேரில் செருப்பு தயாரிக்கும்போது வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கும். ஏனெனில் கைத்தறி மூலம் நெசவு செய்யும்போது தினசரி 3 மீ அளவுக்கே வெட்டிவேரை நெய்ய முடியும். இதில் முதலில் வெட்டிவேரை வாங்கிக்கொண்டு இருக்கும்போது உயரத்துக்கு ஏற்ப பிரிக்க வேண்டும். இதனை நெசவு செய்ய மூன்று நபர்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் கொடுத்து வெட்டிவேர் செருப்பினை தயார்செய்து சரியாக 400 ரூபாய் என்ற அளவில் கொடுக்கிறோம். மேலும் இந்த செருப்பானது, உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதனை பெண்கள் மணத்துக்காக தலையிலும் அணிவதுண்டு.

சாதாரண செருப்புக்கும் இதற்கும் தரத்தில் எந்தவித்தியாசமும் இல்லை. கடலூரில் வெட்டிவேர் அதிகம் கிடைக்கிறது. இதனை வாங்கி அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். பொதுவா இந்த செருப்பை உபயோகப்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது” என்றார்.

தொடர்புக்கு:

ஆனந்த் – 98439 51618.