September 23, 2021

தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன்! – காலமான ஏ. சி. திருலோகசந்தர் பேட்டி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்,’ ‘பாபு,’ ‘பாரதவிலாஸ்,’ ‘அவன்தான் மனிதன்,’ சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வணக்கத்துக்குரிய காதலியே’ மற்றும் ‘ராமு,’ ‘பத்ரகாளி,’ ‘வீரத்திருமகன்’ உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 70 படங்களை இயக்கியவர், ஏ.சி.திருலோகசந்தர். நடிகர் சிவக்குமாரை ‘காக்கும் கரங்கள்’ படத்திலும், நடிகை சச்சுவை கதாநாயகியாக ‘வீரத்திருமகன்’ படத்திலும் அறிமுக செய்தவர் ஏ.சி.திருலோகசந்தர் தான்.

a c chandra june 15

சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய 2 கால்களிலும் திடீரென்று நோய் தொற்று ஏற்பட்டது. அது உடலில் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அவருடைய உடல்நலம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை.சிகிச்சைக்காக சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களுக்கு முன்பு அவர் உடல்நிலை மோசமானது. உணர்வுகளை இழந்தார்.

அவருடைய மகன் பிரேம் திருலோக் கடந்த 5ஆம் தேதி, அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். அந்த தகவல்கூட தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஏ.சி.திருலோகசந்தர் மயங்கிய நிலையில் இருந்தார். இன்று பிற்பகல் 2-45 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையிலேயே மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை கானத்தூரில் உள்ள மகன் ராஜ் திருலோகசந்தர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பட அதிபர் ஏவி.எம்.சரவணன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும், ஏராளமான பொதுமக்களும் ஏ.சி.திருலோகசந்தர் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

ஏ.சி.திருலோகசந்தரின் இறுதிச்சடங்கு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. மரணம் அடைந்த ஏ.சி.திருலோகசந்தருக்கு வயது 86. அவருடைய மனைவி பாரதி, 7 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுக்கு ராஜ்சந்தர், பிரேம் திருலோக் என்ற 2 மகன்கள். அவர்களில் பிரேம் திருலோக் புற்றுநோயினால் மரணம் அடைந்து விட்டார். மல்லி சீனிவாசன் என்ற ஒரே ஒரு மகளும் இருக்கிறார்.

முன்னதாக சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வந்த ‘எப்படி இருக்கீங்க?’ பகுதிக்காக சமீபத்தில் திருலோகசந்தரை சந்தித்த போது தமது மலரும் நினைவுகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

“கதாசிரியர்… இயக்குநர் … என்று ஒரு படைப்பாளியாக நான் உருவாகக் காரணமான வித்து என் சிறு வயதிலே ஊன்றப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என் தாயார் நாகபூஷணம் ஒரு புத்தகப் புழு. அவர் எல்லாவிதமான கதைகளையும் படிப்பதுடன், எனக்கும் பல கதைகளைச் சுவைபட விளக்குவார். என் தந்தையார் செங்கல்வராயனும் அரசியல், ஆன்மிகம் என எதையாவது படித்துக் கொண்டே இருப்பார். அப்பா, அம்மா இருவரும் அப்படி இருந்ததால் சிறு வயது முதலே எனக்கும் படிக்கும் பழக்கம் அதிகமாகவே இருந்தது.

பன்னிரெண்டு வயதில் ஆங்கில மீடியம் பள்ளியில் சேர்ந்த பிறகு ஆங்கில நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். மூன்று வயதிலேயே என்னை பள்ளியில் சேர்த்து விட்டதால், ஒவ்வொரு வகுப்பையும், அதற்குரிய வயது நிரம்பாமலேயே தேர்ச்சி பெற்று வந்தேன். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு சமயத்தில் அதற்குரிய வயது இல்லாத காரணத்தால் அரசின் விஷேச அனுமதி பெற்று தேர்வு எழுதினேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்து பத்திரிகை ஒன்றையும் நடத்தினேன். அதில் நிறைய கதைகள் எழுதுவேன். நாடகங்களை எழுதுவதுடன் அதில் நடிக்கவும் செய்தவன்.

“தியாக பூமி’ திரைப்படத்தின் கதை பத்திரிகையில் வருவதை பார்த்து விட்டு, அதை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்று நானே கற்பனை செய்து பார்ப்பேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சினிமா பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். வீட்டுக்குத் தெரியாமல் வானொலி நாடகத்தில் நடிக்க விண்ணப்பம் போட்டேன். நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிப்புக்கு சன்மானமாக பத்து ரூபாய் கிடைத்தது. நான் பெற்ற முதல் ஊதியம் அதுதான்.

பச்சையப்பன் கல்லூரியில் நான் படித்தபோது ராஜகோபால் என்றொரு நண்பன் இருந்தான். அவனது தந்தை பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்த பத்மநாபன். ஊமைப்பட காலத்தில் இருந்து திரைப்படத் துறையில் இருந்தவர்களான இயக்குநர்கள் ராஜா சாண்டோ, கே.சுப்பிரமணியம் போன்ற பிரபலங்களை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். ராஜகோபால் என்னைப் பற்றி தன் தந்தையிடம் கூற, அவர் தான் தயாரிக்கும் படங்களின் கதை விவாதத்தில் பங்கு கொள்ள என்னையும் அழைத்தார். இப்படித்தான் நான் சினிமாவில் நுழைந்தேன்.

எம்.ஜி.ஆர். நடித்து 1952-ஆம் ஆண்டு வெளியான “குமாரி’ படத்தில்தான் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அப்போது அவர் அரசியலில் இல்லையென்றாலும் அரசியலைப்பற்றி பேசுவதிலும், விவாதிப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். நான் அரசியலை பிரதான பாடமாக எடுத்து எம்.ஏ. படித்திருந்ததால், படப்பிடிப்பின் இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் என்னுடன் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருப்பார்.

அடுத்ததாக எனது கதை ஒன்றை திரைப்படமாக்க இயக்குநர் ஜோசப் தளியத் தேர்வு செய்தார். ஆனந்தன் நடித்த அந்தப் படம்தான் “விஜயபுரிவீரன்’. அதைத் தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கம்பெனி உதவி இயக்குநராக சேர்ந்து அந்த நிறுவனப் படங்களை இயக்கிய வீணை எஸ்.பாலசந்தர், ரகுநாத் போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றினேன்.

a c chandra june 15 a

நடிகர் அசோகனுக்கு சண்டைக் காட்சியை விளக்கும் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்.

ஒரு நாள் நடிகர் அசோகன் என்னை ஒருவரிடம் அறிமுகப்படுத்துவதாகச் சொல்லி ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றார். அப்போதெல்லாம் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு செல்வதென்றால் கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இருந்து ஜட்கா வண்டியில்தான் செல்ல வேண்டும். நாங்களும் அப்படித்தான் சென்றோம். அன்றுதான் முதன் முதலாக ஏவி.எம் ஸ்டுடியோவுக்குள் நுழைகிறேன். ஒர் அறையில் இருந்த அழகான இளைஞர் ஒருவரை இவர்தான் சரவணன் என்று எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் அசோகன். அவர்தான் ஏவி.எம்.சரவணன்.

“”கதை ஒன்று சொல்ல முடியுமா?” என்று சரவணன் கேட்க நானும் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தேன். சரவணன் கதையை கேட்டுக் கொண்டே டேபிள் மீது இருந்த பென்சில் ஒன்றை எடுத்து சீவ ஆரம்பித்தார். சற்று நேரத்துக்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், “கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடுங்கள். தேவையில்லாமல் உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை’ என்றேன். உடனே சரவணன் “நான் தீவிர யோசனையில் இருக்கும் போது, இப்படி பென்சில் சீவுவது என் பழக்கம். பாருங்கள் என் மேஜை மீது எவ்வளவு பென்சில்கள் இருக்கின்றன’ என்றார். தொடர்ந்து நான் கதையை சொல்லி முடித்தேன். உடனே அசோகன் என்னிடம் நாம் வரும் போது நீங்கள் சொன்ன கதை வேறு. இப்போது இங்கு நீங்கள் சொல்லியிருக்கும் கதை வேறாக இருக்கிறதே என்றார்.

இதை கேட்ட சரவணன் “வேறு கதையும் இருக்கிறதா? அதையும் சொல்லுங்களேன்’ என்றார்.. சரியென்று நான் மற்றொரு கதையை சொன்னேன்.

இரண்டு கதைகளும் நன்றாக இருப்பதாக கூறிய சரவணன், தன் தந்தையை கலந்து ஆலோசித்து விட்டு அடுத்த நாள், எனக்குத் தகவல் சொல்லுவதாக கூறினார். என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கடையின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டு திரும்பினேன்.சொன்னபடியே அடுத்த நாள் போன் செய்த சரவணன், “கார் அனுப்புகிறேன், வர முடியுமா?’ என்று கேட்டார். சரியென்று சொல்லி விட்டு எந்தக் கதை தேர்வாகியிருக்கும் என்ற குழப்பத்துடனே சென்று சரவணனைச் சந்தித்த போது, இரண்டு கதைகளையுமே தன் தந்தை வாங்க சொல்லி விட்டதாக எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஏவி.எம். நிறுவனத்துடன் அன்று ஏற்பட்ட தொழில் ரீதியான உறவும், சரவணனுடன் ஏற்பட்ட நட்பும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

என்னிடம் வாங்கிய இரண்டு கதைகளில் முதல் கதை சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி, தங்கவேலு என்று அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற “பார்த்தால் பசி தீரும்’.

இரண்டாவது கதையை அப்பா உங்களையே இயக்கும் படி சொன்னார் என்றார் சரவணன். அது ராஜா ராணி கதையை அடிப்படையாக கொண்டது. ஏற்கெனவே விஜயபூரி வீரனில் ஆனந்தன் நடித்திருந்ததால், இந்த கதையிலும் அவரையே நாயகனாக்கி “வீரத்திருமகன்’ என்ற பெயரில் இயக்கினேன். எனது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமும் வெற்றிகரமாக ஓடியது.

தொடர்ந்து “காக்கும் கரங்கள்’, “நானும் ஒரு பெண்’, “ராமு’ என்று பல படங்களை ஏவி.எம் நிறுவனத்துக்காக இயக்கினேன். “நானும் ஒரு பெண்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரானதுடன் தமிழ்ப் படத்துக்கு மத்திய அரசின் வெள்ளிப் பதக்கமும் பரிசாக கிடைத்தது.

ஏவி.எம். நிறுவனத்துக்காக “அன்பே வா’ படத்தை இயக்கியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கென்று ஒரு பார்முலா உண்டு. அவர் ஏழையாக இருப்பார். ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வார். நிறைய சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பார்முலாவுக்குள் அடங்காத படம் “அன்பே வா’. அப்படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் கூறிய போது, இந்தப் படத்தில் நடிக்கும் எல்லோருமே பொம்மைகள், நீங்கள்தான் அவர்களை ஆட்டுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். “அன்பே வா’ வெற்றிவிழாவின் போது ரசிகர்களின் முன்னிலையிலேயே இந்த விஷயத்தைச் சொன்னார்.”அன்பே வா’ படப்பிடிப்பு நடக்கும் போது சென்னையில் கிங்காங், தாராசிங் போன்ற புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகள் நடந்து வந்தன. அதில் பங்கு பெற வந்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவரை எம்.ஜி.ஆருடன் மோத வைத்து படமாக்கிய சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை விட முக்கியமான விஷயம் “அன்பே வா’ படம் முடிந்த பிறகு ஒரு முழுப் பாடலும் நடனக் காட்சியும் வரும். அதையும் முழுமையாக பார்த்து ரசித்தார்கள். “அன்பே வா’ படத்துக்கு முன்பும், பின்பும் இப்படி படம் முடிவடைந்து ஒரு பாடல் மற்றும் நடன காட்சி எந்த படத்திலும் இடம் பெற்றதேயில்லை.

நான் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நன்கு பழக்கமானவர் எம்.ஜி.ஆர். அவர் உடல் நலமின்றி சரியாக பேச முடியாமல் இருந்த நிலையிலும் கூட, தன் மனைவியுடன் வந்திருந்து என் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார். அதைப் போல் சிவாஜி கணேசனும் மனைவியுடன் வாழ்த்தினார்.

புரசைவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் பாலாஜி எனக்குப் பழக்கம். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிவாஜியை வைத்து “தங்கை’ படத்தை இயக்கினேன். தொடர்ந்து “திருடன்’ “என் தம்பி’, “எங்கிருந்தோ வந்தாள்’ போன்ற பல படங்களை அவருக்காக இயக்கினேன்.

இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருக்கின்ற நிலையில், தந்திரக் காட்சிகள் மிக எளிதாக படமாக்கப்படுகின்றன. ஆனால், இத்தகைய வசதிகள் இல்லாத காலத்தில் சிவாஜியை மூன்று வேடங்களில் நடிக்க வைத்து “தெய்வமகன்’ படத்தை இயக்கியது என்னால் மறக்க முடியாத அனுபவம். விகாரமாகத் தோற்றமளிக்கும் முகத் தோற்றத்துக்கு சிவாஜி தன்னை வருத்திக் கொண்டு மேக்கப் போட்டதை இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு “தெய்வமகன்’ அனுப்பப்பட்டதும் பெருமைக்குரிய விஷயம்தான்.

என் மனைவி பெயர் பாரதி. எனவே “சினி பாரத்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரிக்க திட்டமிட்டேன். நானே கதாசிரியர் என்றாலும், வேறு ஒருவரின் நல்ல கதையைப் படமாக்கத் தயங்கியதில்லை. சத்யன் நடித்த “ஓடையில் நின்னு’ என்ற மலையாளப் படம் என்னை மிகவும் பாதித்தது. “சினிபாரத்’ சார்பில் அதையே என் முதல் தயாரிப்பாக்க திட்டமிட்ட போது, அப்படத்தின் கதை உரிமையை ஏவி.எம். வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது. ஏவி.எம்.மில் பேசி இரு நிறுவனங்களின் இணைத் தயாரிப்பில் “பாபு’ என்ற பெயரில் அப்படத்தை உருவாக்கினோம். இயக்கும் பொறுப்பை நான் ஏற்க, விநியோகத்தை ஏவி.எம். கவனிக்க, சிவாஜி, சௌகார் ஜானகி நடித்த அந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அதிகமான பாராட்டுகளையும் பெற்றது.

இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் “சினி பாரத்’ சார்பில் இயக்கிய “பாரத விலாஸ்’ படமும் வெற்றிகளையும், பல விருதுகளையும் ஒரு சேர எனக்குப் பெற்றுத் தந்தது.

தொழு நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக சிவாஜி நடித்த “டாக்டர் சிவா’ படத்துக்காக காவேரி பிறக்கும் இடமாக தலைக்காவேரிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.

சிவகுமாரை நாயகனாகவும், ராணி சந்திரா என்ற புதுமுக நடிகையை நாயகியாகவும் வைத்து “பத்ரகாளி’ என்ற படத்தைத் தொடங்குவதாக அறிவித்ததும், அனைத்து விநியோகஸ்தர்கள் வந்து பணத்தைக் கொடுத்து விட்டு சென்றார்கள். படம் வளர்ந்து வரும் நிலையில் படத்தின் நாயகி ராணி சந்திரா ஒரு விமான விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். அவரது காட்சிகள் சுமார் அறுபது சதவீதம்தான் படமாக்கப்பட்டிருந்தது. கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருந்தது. மேற்கொண்டு படத்தை எப்படி எடுத்து முடிப்பது என்று புரியாத குழப்பமான சூழ்நிலையில், பணம் கொடுத்த விநியோகஸ்தர்களை அழைத்து விஷயத்தை விளக்கி பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடவா என்று கேட்டேன். அவர்கள் அனைவரும் ஒட்டு மொத்த குரலில் பணத்தை வாங்க மறுப்பு தெரிவித்து, யாராவது ஒரு டூப் நடிகையை வைத்து படத்தை முடியுங்கள். உங்களால் நிச்சயம் முடியும் என்று சொல்லி விட்டனர். பின்னர் ராணி சந்திரா போல் தோற்றம் கொண்ட ஒரு நடிகையைத் தேடிப் பிடித்து மீதிக் காட்சிகளைப் படமாக்கினேன். படம் வெளிவந்து வெள்ளி விழா கண்டது.

தற்போது எனக்கு 81 வயதாகிறது. இரண்டு மகன்கள். ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி விட்டது. எனது மனைவி கடந்து ஆண்டு இறந்து விட்டார். கடைசியாக சிவாஜி, நதியாவை வைத்து “அன்புள்ள அப்பா’ படத்தை இயக்கினேன். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் நான்கைந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கினேன். தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன்” என்கிறார் ஏ.சி.திருலோகசந்தர்