October 5, 2022

வெனிசுலாவில் அவசரநிலை பிரகடனம்: நாடு முழுவதும் மின்வெட்டு!

முன்னொருக் காலத்தில் செல்வ செழிப்பு முகுந்த நாடாக இருந்த வெனிசுலா வாழத் தகுதி இல்லாத நாடாக மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. அந்நாட்டிலிருந்து கிட்டதட்ட 50 லட்சத்துக்கும் மேலானோர் வெளியேறிவிட்டனர். இவையனைத்தும் வெனிசுலா அரசின் மிகத் தவறான கொள்கைகளாலும், போட்டி நாடுகளின் சூழ்ச்சியினாலும் நடந்தது. வெனிசுலாவின் இன்றைய நிலை, இந்தியா உட்பட பல உலக நாடுகளின் எதிர்கால நெருக்கடிக்கான நிகழ்கால உதாரணம் என்றெல்லாம் ஏற்கெனவே செய்திகள் வெளியான நிலையில் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக 15 சிறுநீரக நோயாளிகள் டையாலிசிஸ் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து நாட்டில் எச்சரிக்கை நிலை பிரகடனப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ திட்டமிட்டுள்ளார்.

ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு. ஆனால், இன்று நாட்டில் 90 சதவீத மக்கள் உணவு கூட கிடைக்காத நிலையில் வறுமையில் இருக்கிறார்கள். எப்படி இந்த நிலைக்கு வெனிசுலா ஆளானது? 2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது. எண்ணெய் வளத்தைப் பெரிதும் நம்பியிருந்தது வெனிசுலா பொருளாதாரம். எண்ணெய் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து மக்களுக்கான கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை அரசே வழங்கும்படியான கொள்கை அது. ஆரம்பத்தில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த கொள்கை அவர்களுக்குப் பாதகமாகும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை.

உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ்  திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. மாறாக ஆட்சி அதிகாரத்தின் எல்லா நிலைகளிலும் ஊழலும், சர்வாதிகாரமும் அதிகரித்தது. ஆட்சியைச் சேர்ந் தவர்கள் அனைத்து துறைகளையும் சுரண்டி சொந்த வீட்டில் அடுக்கினர். எந்தத் துறை யையும் அவர்கள் வளர்க்க முற்படவில்லை. இதனால் நாட்டின் உற்பத்தி துறை முற்றிலுமாக பாதித்தது. பெரும் பற்றாக்குறை உருவானது. உணவுப் பொருள்களுக்கான தட்டுப்பாடு தாண்டவ மாடியது. அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

2010-ல் ஆரம்பித்த இந்தப் போக்கு 2014-ல் மிகக் கடுமையான திருப்பத்தைச் சந்தித்தது. எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த வெனிசுலா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலரிலிருந்து 50 டாலராக பாதியாகக் குறைந்தது. வெனிசுலாவின் 96 சதவீத வருமானம் எண்ணெய் ஏற்றுமதியில்தான் கிடைத்துவந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தவுடன், மாற்று பொருளாதாரமாக எந்தத் துறையும் இல்லாத தால் நாட்டின் பணவீக்கத்தையும், விலைவாசியையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெனிசுலாவின் பொருளாதாரமே சுக்குநூறானது. எங்கும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வெனிசுலாவிலிருந்து வெளியேறிவிட்டன. விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

இதனால் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்தால் சிக்கி தவித்து வரும் வெனிசுலா வில் மார்ச் 7ம் தேதி முதல் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதுவரை மின் விநியோகம் சீர்செய்யப்படவில்லை.இந்த மின்வெட்டு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் போதிய மின்சாரம் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகிறார்கள்.ஏற்கெனவே உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் வெனிசுலா மக்களின் நிலை இந்த மின்வெட்டால் மேலும் மோசமடைந்துள்ளது. நீடித்த மின்வெட்டை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார் கள்.இந்த மின்வெட்டுக்கு அமெரிக்கா தான் காரணம் என்று அதிபர் நிக்கோலஸ் மாதுரோ குற்றம்சாட்டி வருகிறார். இந்த சூழ்நிலையில் மின்வெட்டு காரணமாக மருத்துவ மனையில் டையாலிசிஸ் கருவிகள் வேலை செய்யாத காரணத்தால் 15 சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோடெவிடா சுகாதார உரிமைகள் குழுவின் தலைவர் பிரான்சிஸ்கோ வாலென்சியா கூறுகையில், ‘‘கடந்த இரு தினங்களில் டையாலிசிஸ் சிகிச்சை கிடைக்காமல் 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாட்டின் 95 சதவீதக்கும் மேலான டையாலிசிஸ் மையங்கள் செயல்படாமல் உள்ளதால் தீவிர சிறுநீரக பாதிப்புகள் கொண்ட நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது’’ என்று பிரான்சிஸ்கோ வாலென்சியா தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு பிரச்சனையால் 15 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ, திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டி நாட்டில் எச்சரிக்கை நிலை பிரகடப்படுத்தவுள்ளதாக நேற்று அறிவித்தார். அவசரநிலை பிரகடனப்படுத்துவதன் மூலம் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு நிவாரண பொருட்களை வெனிசுலாவிற்குள் கொண்டு வர அதிகாரம் கிடைக்கும்.இந்த பேரிடரை முடிவுக்கு கொண்டு வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் இருந்து நாம் பின்வாங்க முடியாது என்று ஜுவான் குவைடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அதிபர் நிக்கோலஸ் மாதுரோவை எதிர்த்து போராட்டத்தை தீவிரப்படுத்தும்படி வெனிசுலா மக்களை ஜுவான் குவைடோ கேட்டுக்கொண்டுள்ளார்.