June 25, 2021

வேலைக்காரன் விமர்சனம் = இன்னொரு தனி ஒருவன்?!

டெய்லி நம்ம வீட்டு குழந்தைக்கு, ”தட்டுலே வைச்சிருக்கற வெஜிடபிள்ஸ் அம்புட்டையும் மிச்சம் வைக்காம சாப்புடணும்”, என்று கண்டிப்புடன் சொல்கிறோம். ஆனால், நம்ம குழந்தைக்கு எதெல்லாம் சத்து, நல்லதுனு நாம நெனச்சிக் கொடுக்குறோமோ? என்று கேட்டால் யாரெல்லாம் பதில் சொல்வீர்கள்? உண்மையில்  நாம் சாப்பிடும் பாதிக்கும் மேலான காய்கள் மற்றும் பழங்களில் இருக்குறது பூச்சிக்கொல்லியும், விஷமும்தான் என்ற குழந்தைங்கோ அல்லது உங்களுக்கோ தெரியுமா? அது மாதிரி நம்மில் பலரும் இப்போது  பசும் பால், எருமைப் பால் வாங்கி டீ, காபி குடிக்க முடியாமல் போய் விட்டதை அறிவீர்களா?.ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் பாக்கெட் பால்தான் குழந்தைகளுக்கே தாய்ப் பால் என்ற நிலை வந்து விட்டதும் இந்த பாக்கெட் பாலில் தண்ணீர், உருளை அல்லது சோயா மாவு, காஸ்டிக் சோடா, பார்லி கஞ்சி, மைதா மாவு மாதிரியான உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலப்படம் செய்வதாக மத்திய அரசு. மாநில அரசும் கூட உறுதி பட கூறியதை எத்தனை பேர் நம்பினீர்கள். அட.. தற்போதைய காலக்கட்டத்தில்  தாகத்துக்கு குடிக்கும் நீரில் சாக்கடைக் கழிவு நீர் கலப்பும், தரமற்ற தண்ணீரைக் கொடுக்கும் மினரல் வாட்டரும் ஒன்றுதான் என தெரிந்தவர்கள் எத்தனை பேர்? இது மாதிரியான ஹெல்த் ஃபுட் ஆபத்துகள் குறித்து நம் ஆந்தை ரிப்போர்ட்டர் உள்பட எத்தனையோ ஊடகங்கள் விழிப்பு கட்டுரைகள் வெளியிட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஜஸ்ட் லைக் தட் காமெடி, கலாட்டா, ரொமான்ஸ் என்று கேஷூவலாக  தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது தனிப் பெரும் கல்லா ஈட்டும் பெருமாளாக இருக்கும் சிவகார்த்திகேயனை வைத்து உணவில் விஷம், அதற்கான மார்க்கெட்டிங் யுக்தி, கார்ப்பரேட் நிறுவனங்களின் தகிடுத்ததம் போன்றைவைகளை பல கோடி செலவு செய்து  நெத்தி பொட்டில் அடித்தாற் போல் சொன்னதற்காகவே டைரக்டர் மோகன்ராஜா-வுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாப்ஸ்.!

அதாவது.நம்ம சிங்கார சென்னையில் கூலிக்கார குப்பமாக இருந்து பின்னாளில் கொலைகாரக் குப்பம் என்ற நாமகரணமாகி போன லோக்கல் ஏரியாவில் பிறந்து அங்கேயே வசிக்கிறார் நாயகன் அறிவு (சிவகார்த்திகேயன்). அந்த ஏரியாவில் பெரிய ரவுடியாக வலம் வரும் காசியின் (பிரகாஷ்ராஜ்) தயவை பெற்று ஒரு சமூக வானொலியைத் தொடங்குகிறார். அதே ரேடியோ மூலம் காசியின் வன்முறை போக்கை எக்ஸ்போஸ் பண்ணி அடியாள் புழைப்பு நடத்தும் தன் சக குடிசைப் பகுதி இளைஞர்களை மாற்று வழிகளில் போக வைக்க முயல்கிறார். இதனிடையே அந்த கம்யூனிட்டி ரேடியோவால் கொஞ்சம் பிரச்சனை வந்து , தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் விற்பனைப் பிரிவில் பணிபுரிய வேலைக்குப் போகிறார். அங்கு மார்க்கெட்டிங்கின் சகல நுணுக்கமும் அறிந்த படே கில்லாடி ஃப்ஹத் ஃபாசிலிடம் நெருங்கி பல விஷயங்களை அறிந்து கொள்கிறார். இதனிடையே தன் குப்பத் தாதாவான காசியால் தன் நெருங்கிய நண்பன் பாக்கியம் (விஜய் வசந்த்) கத்தியால் குத்தப்பட்ட நிலையில், காசியை கொல்ல முயல்கிறான் அறிவு. இதனால் மனமுடைந்த காசி , அவர் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி தான் விஜய் வசந்தை கொலை செய்ய சொன்னதாக கூறுகிறார். அத்துடன் தான் கூலிக்கு கொலை செய்பவன் தான். அதேபோல் நீங்களும் அவர்களிடம் கூலிக்கு கொலை செய்யும் கொலைகாரர்கள் தான் என்று பிரகாஷ் ராஜ் கூற, அதற்கான அர்த்தம் புரியாமல் இருக்கும் சிவாவிடம் பிரகாஷ்ராஜ் அவர்கள் செய்யும் வேலையையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் விளக்கி உலகத்தின் பெரிய முட்டாள் நீதான் என்று சொல்லிக் காட்டுகிறார். இதையடுத்து காசி சொன்னதன் முழு பின்னணி, அதை அறிவு எதிர் கொள்ளும் விதம் என்ற மீதிக் கதை தொழிலாளர்கள், முதலாளி மற்றும் நுகர்வோர்களை நோக்கி மாறி மாறி பயணம் செய்கிறது .

ஆரம்பத்தில் சொன்னது போல் புரட்சி நாயகனாக வரும் சிவகார்த்திகேயனிடம்.வழக்கமான ஏட்டிப் போட்டி டயலாக்குகள், இப்போதைய யங்கஸ்டர்களுக்கே உரித்தான ஸ்டைலான கேரக்டராக வலம் வந்தவரை இந்தப் படத்தில் அவருக்கு பத்து பராசக்தி அளவுக்கு வசனங்கள் கொடுத்து பேச மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாஸ் ரோல் அவருக்கு பொருத்தமில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் குழந்தையும் விரும்பும் ‘அந்த சிவா’ காணாமல் போய் விட்டது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. அதிலும் இறுக்கமான முகத்திலேயே வெரைட்டியாக கோபம்,

வியப்பு, வெறுப்பு, சிரிப்பு, கடுப்பு என்று காட்டும் ஃபஹத் கூடவே ட்ராவல் செய்யும் சிவாவுக்கான ஸ்கோப் இந்த படத்தில்  கொஞ்சம் டல்தான். நாயகி நயன்தாரா வருகிறார். சிவா பேசுவதை கேட்கிறார். இடையிடையே கொஞ்சம் பாடல் காட்சியில் தோன்றி விட்டு காணாமல் போய் விடுகிறார். அறம் நாயகிக்கு இப்படியோர் அவலம். எக்கச்சக்கமான அடிசினல் கேர்கடர்கள் வந்தாலும் குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவில் யாருமில்லை என்பது சோகம்தான்.

படத்தின் மிகப் பெரிய பலம் கதைதான் இதில்  ஹீரோ என்றால் மிகையல்ல. இப்படியொரு கதைக்காகவே மோகன் ராஜாவை சிவகார்த்திகேயன் தேடி போனதும், இயக்குநர் மோகன்ராஜாவும் ஹீரோவுக்காக கதையை சிதைக்காமல் தான் சொல்ல நினைத்ததை வெளிப்படுத்தி விட்டதிலும் ஜெயித்து விட்டார்கள் என்று சொல்லலாம். அதே சமயம் சொல்ல வேண்டியதை வசனங்கள் மூலம் மட்டுமே சொல்ல நினைத்து சோர்வையடைய செய்து விட்டார்கள். திரும்பினால் வசனம், நின்றால் வசனம், நடந்தால் வசனம் என்று பேசி பேசி படம் பார்ப்பவர்களை கேட்க வைத்து நொந்து போக வைத்து விட்டார்கள். விருந்துக்கு அழைத்து விட்டு இலை முழுக்க ஊறுகாய் மட்டுமே வைத்தது போல் ஆகி விட்டது. இத்தனைக்கும் ‘நாம பார்க்குற வேலைக்குதான் விஸ்வாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல’, `நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்’, `தீவுன்னு நினைச்சு திமிங்கலம் முதுகுல நின்னுட்டுருக்கோம்’ ”பொருளை விக்கிறோம்னு சொல்லி இவ்வளவு நாளா பொய்யைத்தானே வித்துக்கிட்டு இருக்கோம்”, ”உலகின் தலைசிறந்த சொல் செயல்”, ”சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாம மாறுனதெல்லாம் போதும், இப்போ நமக்கேத்த மாதிரி சூழ்நிலையை மாத்துவோம்” ‘8 மணி நேரம்தான் வேலைக்காரன்…. மீதி நேரமெல்லாம் நுகர்வோர்’, ‘மாசக் கடைசில அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க மாட்டான்… ஆனா, மாச ஆரம்பத்துல தேவையில்லாத பொருளைக் கூட வாங்கிடுவாங்க மிடில் கிளாஸ்’, ‘அத்தியாவசிய பொருளை எவனும் விக்க மாட்டான்…. ஆனா, ஆடம்பர பொருளைத் தேடித் தேடி வந்து விப்பாங்க!’ என்றெல்லாம் பொளேர், பொளேர் என்ற வசனங்களைத்தான் அள்ளி தெளித்திருக்கிறார்கள். ஆனால் .. ஆனால்.. போங்கப்ப்பா என்று ஆடியன்ஸை மொபைல் நோண்ட வைத்து விடுகிறார்கள்.

அத்துடன் ஒரு குப்பத்து இளைஞன் சிங்கிள் மேன் ஆர்மியாகி ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்ஜி யத்தையே சரிய வைப்பதும், கார்ப்ரேட்டின் செகண்ட் லெவல் ஓனரின் வாரிசிவர் என்றே தெரியாமலே அவரை வேலைக்கு வைத்திருக்கும் ஃபர்ஸ்ட் லெவல் கார்ப்பரேட் அதிபரையும், மூலப் பொருளை மாற்றி புராடக்ட் தயார் செய்வதையும் நமபவே முடியவைல்லை என்பதுடன் ரசிக்கவும் இயலவில்லை என்றாலும் வேலைக்காரன் இன்னொரு தனி(த்த) ஒருவன் என்பதால் குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம்

மார்க் 5 / 2.25