September 18, 2021

வேலையில்லா பட்டதாரி 2’ – சினிமா விமர்சனம்

முன்னரே பலரும் குறிப்பிட்டது போல் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு எக்கச்சக்கமான் படித்த இளைஞர்களுக்கு தனி அடையாளம் கொடுத்தவர் தனுஷ். ஆம். வேலையில்லா இளைஞர்கள் தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ள கற்று கொடுத்தனால் ஹிட அடித்த படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கம்தானே? அந்த வகையில் தனுஷ் & கோ உருவாக்கி உள்ள வி.ஐ. பி. 2 நம்ம தமிழ் திரையுலக ஃபார்முலாவை கண்ணை மூடிக் கொண்டு காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணி அசத்த முயன்றிருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் வெட்டி ஆபீசராக இருந்த தனுஷ், அனிதா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனத்தில் இஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்தவர் இந்த இரண்டாம் பாகத்திலும் அங்கேயே வேலை செய்து கொண்டிருப்பதில் தொடங்கிறது ஸ்கிரீன் பிளே. அதிலும் பிரமாதமான கட்டிடங்கள் கட்டியதற்காக சிறந்த இஞ்சினியர் விருதெல்லாம் வாங்குகிறார். அந்த விருது வழங்கும் விழாவுக்கு வரும் வசுந்த்ரா கன்ஸ்டிரக்சன்ஸ் நிர்வாகி கஜோல் தனுஷை தன்னிடம் வேலைக்கு வரும்படி அழைக்கிறார். தனுஷ் அதை மறுக்க கஜோலுக்கு வன்மம் உருவாகிறது. இதனிடையே காதல் மனைவி அமலாபால் கடு கடுப்பை சமாளித்தப்படி , இடையிடையே (இறந்து போன) அம்மா சரண்யாவிடம் கண்ணீர் விட்டு கன்சல்ட் செய்து கொண்டு, அழகான எதிரி கஜோலை எப்படி தொழில் ரீதியாக எதிர்கொண்டு சவால்களைக் கடந்து வருகின்றார் தனுஷ் என்பது தான் இந்த‘விஐபி 2’ படத்தின் மீதி ஸ்கிரீன் பிளே..!

இந்த பார்ட் டூவில் முதல் பாகத்தில் விரும்பிய, ரசித்த பல அம்சங்களையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் திணிருப்பதாலோ என்னவோ அடுத்தடுத்து வசனம் மற்றும் மாடுலேசன் இப்படித்தான் இருக்கும் என்று பக்கத்து சீட் பெரிசு சொன்னதெல்லாம் அப்படியே திரையில் வந்தது மேஜிக்தான் என்றாலும் தனுஷ் டீமுக்கு சறுக்கல்தான். மேலும் தனுஷ் – கஜோல் எதிரிகளாக மாறும் தருணங்களும், அவர்கள் பகை பெரிதாக வெடிக்கும் சூழலும் வலுவாக இல்லை. சூழல் வலுவாக இல்லாததால் காட்சிகளும் எடுபடவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் வீட்டில் அமலாபால், சமுத்திரக்கனியுடன் பேசுவதெல்லாம் படு செயற்கையாகவும், மிகைத்தன்மையுடனும் உள்ளது. மேலும் தனுஷ் ரசிகர் ஒருவர் சொன்னது போல் கஜோல் கெட்டப்புலயெல்லாம் சிறப்பு. அவரோட கதாப்பாத்திர அமைப்பு அப்டியே மன்னன் விஜயசாந்தியத்தான் ஞாபகப்படுத்துது. ஒருவேளை மன்னன் படத்துல ரஜினி விஜய சாந்திய கல்யாணம் பன்னாம குஷ்பூவக் கல்யாணம் பண்ணிருந்தா இப்டித்தான் இருந்துருக்கும் போல. ரஜினி நடிச்ச மாப்பிள்ளைய தனுஷ் ரீமேக் பன்னிட்டாரு… அடுத்து மன்னன் படத்ததான் லைட்டா டிங்கரிங் பண்ணி இந்தப் படத்த எடுத்துருக்காங்க. அடுத்து என்ன படையப்பா தானே? ஏன் தனுஷ்சார்… நீங்க நம்ம மாப்பிள்ளைதான்… ரஜினியோட ரசிகர்தான். அவர ஃபாலோ பன்றதுல தப்பில்லை. அதுக்குன்னு இவ்ளோ க்ளோஸாவா ஃபாலோ பண்றது? எனபதை இங்கேயும் ரீ ட்விட் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நடிப்பைப் பொறுத்த வரை சூப்பர் ஸ்டாரின் ரியல் மருமகனான தனுஷைப் பொறுத்தவரை முன்னரே ரகுவரனாக்கும் என்று தன்னை நம்ப வைத்து விட்டாலும் அவரின் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு, ஸ்டைலிஷ் மேனரிசங்கள் என அனைத்திலும் மாமனார் ரஜினியை இமிடேட் செய்திருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக அவ்வப்போது அண்ணாந்து பார்த்து ஹ்ஹ்ஹாஹ்ஹா- என்று எழும் குரலில் கூட தலைவர்தான் எதிரிரொலிக்கிறார்.

மூன்று வருஷத்துக்கு முன்னார் காதலியாக வந்த அமலா பால் இப்போது குடும்ப பெண்ணாக வந்து சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். தனுஷ் – அமலா பால் இடையேயான காதலும், பந்தமும் படத்தில் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. அதிலும் எப்போதும் கணவனை கடுவன் பூனையாட்டம் கடித்தபடி இருந்தாலும் பிரச்னை வரும் போது வேலைக்கு போவது டச்ச்சிங்.,

வசுந்தரா ரோலில் வரும் கஜோல் நன்றாக நடிக்க ட்ரை பண்ணி இருக்கிறார்தான் என்றாலும் வில்லித்தனமாக நடந்து செல்லும் போது தோன்றும் ஆணவம், அகங்காரம் எதுவும் ஏனைய சீன்களில் மிஸ்ஸிங். கூடவே வரும் விவேக் தனக்கே உரிய ‘மைன்ட் வாய்ஸ்’ டிரென்டில் சிரிக்க வைக்க முயல்கிறார். சமுத்திரக்கனி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ரிஷிகேஷ், மீரா கிருஷ்ணன் நாட் பேட். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்பதுடன் டைட்டில் தீம் மியூசிக்கில் அனிருத்-தான் வெளிப்பட்டு கைதட்டல் வாங்கிறார்.

இரண்டாம் பாதியில் தனுஷுக்கு ஒரு பிரச்சினை வந்து ‘விஜபி கன்ஸ்டிரக்சன்ஸ்’ உருவான பின்னர் தான் நிமிர்ந்து உட்காரத் தொடங்கி  படம் உச்சத்தைத் தொடப் போவதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது படம் முடிந்துவிடுவதாகக் காட்டுவது பெரிய ஏமாற்றம் தான். அதே சமயம் ’பிரிட்ஜ் தண்ணிய குடிச்சாலும் பானைத் தண்ணிய குடிச்சாலும் யூரின் வந்தா போய்த்தானே ஆகணும்!’ _ என்பது போன்ற கேஷூவலான வசனங்களும், மழை என்னு இயற்கை நினைத்தால் மனுசங்க எல்லம் ஒன்றுதான் என்ற உணரை வைக்கும் வசனகர்த்தா தனுஷ் மற்றும் இயக்குநர் செளந்தர்யா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று  முணு முணுக்க வைத்தாலும் முந்தைய படத்தை கம்பேர் பண்ணாமல் போனால் முழுமையாக ரசித்து விட்டு வரலாம் !

மார்க் 5 / 2.75