இந்து பெண்களை விபச்சாரி எனக்கூறிய திருமாவளவன் மீது வழக்குப் பதிவு!

பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மனுதர்மமானது இந்து பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்றே குறிப்பிட்டிருக்கிறது என பெரியார் யூடியூப் சேனலுக்கு திருமாவளவன் பேட்டியளித்திருந்தார். சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் பல பகுதிகளில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகவும், சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி, மதம், இன மொழி தொடர்பாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.