மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ முதல் நாளிலேயே பிரேக் டவுன்!
நம்ம சென்னை ஐ சி எஃப்-பில் தயாரிக்கப்பட்டு பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப் பட்ட நாட்டின் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ முதல் நாளிலேயே பாதி வழியில் மக்கராகி நின்று விட்டது.
பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தயாரித்தது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயரிபட்டது. சதாப்தி எக்ஸ்பிரசுக்கு இணையான வசதி கொண்ட இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடையது. இந்த ரயில் டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த
ரயில் பெட்டிகள் அனைத்திலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களின் வருகை குறித்து தகவல் தெரிவிக்கும் வசதியும், வை-பை வசதியும் இந்த ரயிலில் உள்ளன. நவீன தொழில்நுட்பத்திலான கழிப்பறை, ஒவ்வொரு இருக்கைக்குக்கும் தனித்தனி மின் விளக்கு வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் குளிர்பான வசதிகள் என ரயில் முழுவதும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டு 16 பெட்டிகளைக் கொண்டு இந்த வந்தே பாரத் ரயில் அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு கிளம்பியது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200கிமீ தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரயில் திடீரென பழுதடைந்து நின்று விட்டது. காலை 5 மணி அளவில் பழுதாகி நின்ற அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டது.
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போது அதீத சத்தம் எழுந்ததாகவும், புகை வெளியானதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரி ஒருவர், தண்டவாளத்தில் ஆடோ, மாடோ ரயில் மீது மோதி இருக்கலாம். அவற்றிம் மாமிசம், எலும்புகள் ரயில் வண்டியின் பல் பாகங்களில் சிக்கியதால் ரயிலில் பழுது ஏற்பட்டிருக்கலாம்.. ரயிலில் சிக்கிய பாகங்கள் அனைத்தும் அகற்றிய பின் ரயில் இயக்கம் தொடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பழுது சரி செய்யப்பட்டு காலை 8:15க்கு மீண்டும் புறப்பட்டது. 40 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரேக்டவுன் ஆனது, அது மீண்டும் சரி பார்க்கப்பட்டு, 10:20 மணிக்கு ரயில் மீண்டும் தன் பயணத்தை தொடங்கி 50 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது.
ஆனாலும் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான அனைத்து டிக்கெட்டுகளின் முன்பதிவு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் கோளாறால், நாளை ரயில் இயக்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்பதுதான் அடிசினல் தகவல்.