வனமகன் – திரை விமர்சனம்!

வனமகன் – திரை விமர்சனம்!

மனிதனின் நாகரிக வளர்ச்சியானது காடுகளில் துவங்கி நீண்ட வரலாறு உடையது. பேராசையால் காட்டு வளங்கள் முழுமையாக அழிக்கப்படுவதால், வெப்பமயமாதல் உட்பட பல்வேறு ஆபத்துக்கள் உருவாகியுள்ளன. இயற்கையை சார்ந்தே மனித வாழ்வு உள்ளது. இயற்கை தன்னால் முடிந்தளவு மனிதனுக்கு வளங்களை அளிக்கிறது. பிராணவாயு மட்டுமின்றி, விறகு, உணவு, உரங்கள், மரங்கள் உட்பட பல்வேறு வளங்கள் வனத்தில் கிடைக்கின்றன. சூழ்நிலை மண்டலத்தை சமநிலையில் பராமரிக்க காடு முக்கிய பங்காற்றுகிறது. மனிதனின் பேராசை, நாகரிகம் இயற்கையின் தன்மையை மாற்றியுள்ளது. வருங்கால சந்ததியினர் எவ்வித பாதிப்புமின்றி வாழ, சூழ்நிலை மண்டலத்தை பாதுகாப்பது கட்டாயம். அழிவு வேலைகளை நிறுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மனிதன் தன் சுயநலத்தால் அழித்த அனைத்து வளங்களையும் மீட்டெடுக்க வேண்டும். காட்டு வளங்களை மேம்படுத்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம் என்பது போன்ற சமூக பிரஞ்ஜையை ஏற்படுத்தும் முயற்சிகாக பலஃ கோடி செலவு செய்து ஒரு முழு திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் விஜய்.

கதை என்னவோ – டார்ஜான், ஜார்ஜ் இன் த ஜங்கிள், கிங் காங் டைப்பிலான ஆங்கிலப் பட தழுவல்தான். ஆனால் இயக்குநர் விஜய் கை வண்ணத்தில் ஜெயம் ரவியின் அசாத்தியாமான நடிப்பில் காவ்யா என்ற நாமகரணம் கொண்ட சாயிஷா-வுடன் அழகான காட்சி அமைப்பில் அசத்தி இருக்கிறார்கள். கதை என்னவென்றால் ஹீரோயினான (கோடீஸ்வர வீட்டுப் பெண்ணான) சாயீஷா சைகல் தனது ஃப்ரண்ட்ஸூகளுடன் அந்தமான் தீவுக்கு ஒரு ஜாலி ட்ரிப் செல்கிறார். அங்கு ஆர்வக் கோளாறால் அத்து மீறும் அவர்கள் காரால் ஏற்படும் எதிர்பாராத விபத்து ஒன்றில் காட்டுக்குள் வாழும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஹீரோ ஜெயம் ரவிக்கு அடிபட்டு விடுகிறது. முன் பின் தெரியாதவராக இருந்தாலும் அவரும் ஒரு உயிர் தானே என்று பச்சாதப்படும் சாயீஸா ஜெயம்ரவியைக் காப்பாற்றுவதற்காக அவரை தன் காரிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு சென்னையில் ஹைடெக்கான ஹாஸ்பிட்டல் ஒன்றில் சேர்க்கிறார். ஆனால் காட்டிலிருந்து நகரத்துக்கு வந்த ஜெயம்ரவிக்கு அந்த வாழ்க்கை முறையே முற்றிலும் புதியதாகத் தெரிகிறது. அதனால் கண்ணில் படுபர்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து பொருட்களை எல்லாம் தூள் தூளாக்குகிறார். அதிலும் டிவியில் புலி உருவம் தெரிந்தால் கூட நிஜப்புலி தான் என்று நினைத்து கையில் வைத்திருக்கும் வில் அம்பால் டிவியை சேதப்படுத்துகிறார். வீட்டில் தூங்குவதற்குப் பதிலாக பெரிய மரத்தில் தான் குரங்கு போல உட்கார்ந்து கொண்டே படுத்துத் தூங்குகிறார்.

vanamagan jun 24a

அவரின் இந்த செயல்களைக் கண்டு ஆரம்பத்தில் மிரண்டு போகும் சாயீஷா பின்னர் அவரின் செய்கைகளை ரசித்து விலங்குகளின் குணங்களைக் கொண்டவர்களை எப்படி கையாள்வது என்கிற விபரத்தை இணையதளத்தில் படித்து அதன்படி ஜெயம் ரவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அதோடு ஜெயம் ரவி செய்யும் சேஷ்டைகளால் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எப்படி சுயநலம் கொண்டவர்களாகவும், பணத்தாசை பிடித்தவர்களாகவும், மனிதாபிமானம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்? என்பதையும் உணர்கிறார்.

அந்த ஈர்ப்போ ஜெயம் ரவி மீது சாயீஸாவுக்கு ஒருவித காதலை ஏற்படுத்துகிறது. இந்த விஷயம் தெரிந்தவுடன் தனது மகன் வருணுக்கு சாயீஸாவை திருமணம் செய்து வைக்க திட்டமிடும் பிரகாஷ்ராஜ் ஜெயம் ரவியிடமிருந்து சாயீஸாவை பிரிக்க திட்டமிடுகிறார். அதே சமயம் ஜெயம் ரவி உள்ளிட்ட பழங்குடியினர் வாழும் காட்டுப்பகுதியை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அபகரிக்க திட்டமிடுகிறது? இது போன்ற பிரச்சனைகளிலிருந்தும் எப்படி இருவரும் விடுபடுகிறார்கள்? என்பதே கிளைமாக்ஸ்.

தன் கேரக்ட்ருக்கு ஏற்ற உழைப்பை முழுசாக கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. அவருக்கே உரித்தான ஆக்ரோஷ வசனங்களெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் அவர் பேசும் வார்த்தைகளே ஆறோ ஏழுதான் என்றால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், கண் பார்வையாலும், உடம் மொழியாலும் தன் ஒட்டு மொத்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அதிலும் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம், மரம் விட்டு மரம் தாவும் லாவகம், பிரச்சினை கண்டு பொங்கும் குணம் போன்றவற்றை செய்ய பெரிது பிராக்டிஸ் செய்திருப்பதை உணர முடிகிறது.

அறிமுக நாயகி சயிஷா முன்னாள் ஹீரோயின் ஜெயபிரதா சாயல். நல்ல அழகு. பிரமாதமாக டேன்ஸ் ஆடுகிறார். கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை குறையில்லாமல் வழங்கியிருக்கிறார். ஜெயம் ரவிக்கு பயிற்சி தரும் சில தருணங்களிலும், அன்பை உணரும் சமயங்களிலும், குறிப்பாக புலி மீதான பதற்றத்தையும், பயத்தையும் பொருத்தமான அளவான நடிப்பின் மூல வெளிப்படுத்தி இருக்கிறார் கவர்கிறார். தம்பி ராமையா தனி ஸ்கோர் செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் நல்லவரா? கெட்டவரா? என்று தெரியாமலே போனதும் சித்தப்பா கேரகட்ரில் வருவரின் நோக்கமும் கடைசி வரை தெரியாமல் போய் விட்டது.

அத்துடன் ஆதிவாசிகள் கதை என்றும் காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அழிக்கிறது என்பதையெல்லாம் அழுத்தமாக சொல்ல திட்டமிட்டு அதை கோட்டை விட்டு காதல், கத்திரிக்கா, கோபம், குரோதம், பழி வாங்கல் என்ற ரீதியில் பயணிக்கும் கதை போக்கில் அவ்வப்போது சலிப்பு வந்தாலும் நாயகி சயீஷாவுடன் காட்டின் அழகைக் காண்பித்து மெய் மறக்க வைத்து விட்டார் இயக்குநர்.

கேமராமேன் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் மற்றுமொரு பலம். நகரம், காடு என வெவ்வேறு விதமான நிலப்பரப்பை, ரசிக்கும்படி வண்ணமயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மனிதர். அதிலும் காடுகளின் மீதான ”ட்ரோன் ஷாட்கள்” வாவ் சொல்ல வைக்கிறது. மொத்ததில் டயலாக் எழுதி வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாத காட்சிகளை வைத்து ஒட்ட விடாமல் செய்து விட்டார். ஆனாலும் ஃபேமிலியோடு ஒரு ரவுண்ட் போய் பார்க்கும் விதத்தில்தான் இருக்கிறான் – வனமகன்!

error: Content is protected !!