March 25, 2023

3000 கோடி செலவில் உருவான வல்லபாய் பட்டேல் சிலை! – பிரதமர் திறந்து வைத்தார்!

குஜராத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான் தற்போது உலகின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது. அதற்கு முன்பு வரை சீனாவில் நிறுவப்பட்டிருக்கும் 420 அடி உயர ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை தான் உலகின் உயர்ந்த சிலையாக இருந்தது. இந்நிலையில், உலகின் அனைத்து சிலைகளையும் பின்னுக்குத் தள்ளி கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் செலவில் 600 அடிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் நர்மதை நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

இந்த சிலையின் உட்புற தயாரிப்பு பணிக்காக 70,000 டன் சிமெண்ட், 18,500 டன் உருக்கு, 6000 டன் உருக்கு கம்பிகள் ஆகியவையும், வெளிப்பூச்சுக்காக 1,700 மெட்ரிக் டன் வெண்கலமும் பயன் படுத்தப் பட்டுள்ளது. அதேபோல், சிலையின் உள்பகுதியில் படேலின் சிறப்புகளை விளக்கும் கண்காட்சியாகம், 135வது மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம், அதற்கு மேலே சிலை பராமரிப்பு அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலையின் மார்பகம் வரை சென்று பார்வையாளர்கள் செல்வதற்காக பிரத்யேக லிஃப்ட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இயற்கை பேரிடர் சமயங்களில் மணிக்கு 180 கி.மீ. வரையில் காற்று வீசினாலும்கூட கம்பீரமாக நிற்கும் வகையில் சிலை வடிமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனிடையே இந்தச் சிலை செய்வதற்கு போட்ட முதலீட்டைக் கொண்டு இரண்டு புதிய ஐஐடிக்களை கட்டியிருக்க முடியும். (ஒரு ஐஐடிக்கு 1,167 கோடி ரூபாய்) இரண்டு எம்ய்ஸ் வளாகங்களைக் (ஒரு எய்ம்ஸ்க்கு 1,103 கோடி ரூபாய்) கட்டியிருக்க முடியும். 5 புதிய ஐஐஎம் வளாகங்கள் (ஒன்றுக்கு 539 கோடி ரூபாய்),5 சோலார் மின்சக்தி திட்டங்கள்(ஒரு மின்உலைக்கு 528 கோடி ரூபாய் ) உருவாக்கியிருக்க முடியும்.மார்ஸ் கிரகத்திற்கு 6 முறை சென்றிருக்கலாம் (ஒரு முறை செல்வதற்கு 800 கோடி ரூபாய் செலவாகும்).இப்படி ஆக்கப்பூர்வமான செலவுகள் எதுவும் செய்யாமல் மக்களின் வரித்தொகையானது மிகப் பெரிய அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது என்று சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது