நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன்.! – வைகோ ஓப்பன் லட்டர்!

நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன்.! – வைகோ ஓப்பன் லட்டர்!

இயக்குநர் சீனு ராமசாமி டைரக்‌ஷனில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து நல்ல வரவேற்பையும், வெற்றியையும், வசூலையும் பெற்ற படம் ‘தர்மதுரை’. இப்படம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,மெய் சிலிர்ப்புடன்  ‘சீனு ராமசாமிக்கு எழுதிய ஓர் கடிதத்தில், ‘ உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அந்த விருதுக்குத்தான் பெருமை,” எனப் பாராட்டியுள்ளார்.

அவருடைய நீளமான பாராட்டு மடல்….உங்கள் பார்வைக்கு..!

“மாணவப் பருவத்தில் இருந்தே திரைப்படங்களைப் பார்ப்பது, என் மனதிற்கு மகிழ்வூட்டுகின்ற செயல் ஆகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். எட்டு வயதில், எங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள திருவேங்கடம் டூரிங் கொட்டகையில் நான் பார்த்த, ஜெமினியின் ‘சந்திரலேகா’, எம்.கே. ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகியவை என் நெஞ்சை விட்டு நீங்காத திரைப்படங்கள் ஆகும்.

நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, வீட்டுக்குத் தெரியாமல் காம்பவுண்டுக் கேட்டைத் தாண்டிக் குதித்து, சைக்கிளில் சென்று இரண்டாம் ஆட்டத்தில் பார்த்த ‘மனோகரா’, ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படங்கள் என் மனதைக் கொள்ளை கொண்டவை ஆகும்.

பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது, ‘நாடோடி மன்னன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சிவகங்கைச் சீமை’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கல்யாணப் பரிசு’ ஆகியவை என் உணர்வுகளைக் கூர்படுத்திய காவியங்கள் ஆகும்.

பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த, ‘படிக்காத மேதை’, ‘அரசிளங்குமரி’, 61 இல் ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, 62 இல் ‘மன்னாதி மன்னன்’, 63 இல் ‘ஆலய மணி’, 64 இல் ‘கர்ணன்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘பணம் பந்தியிலே’ ஆகியவை என் இதயச் சுவரில் பதிந்த திரைக்காவியங்கள் ஆகும்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘பாகப்பிரிவினை’, ‘ஆலயமணி’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘அவளுக்கு என்று ஓர் மனம்’, ‘சுமைதாங்கி’, ‘தீபம்’, ‘ஞான ஒளி’, ‘அவன்தான் மனிதன்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘வசந்த மாளிகை’ இப்படி எத்தனையோ காவியங்கள் என் நெஞ்சில் நிறைந்தவை.

சிசில் பி டிமெல்லியின் ‘பத்துக் கட்டளைகள்’ (Ten Commandmentds), அதன் கதாநாயகனான சார்ல்டன் ஹெஸ்டனின் ‘பென்ஹர்’ (Ben Hur) ஆண்டனி குயின் நடித்த ‘உமர் முக்தார்’, யூல் பிரன்னர் நடித்த ‘Taras Bulba, Kings of the Sun’ ஆகிய படங்களை இதுவரை நூற்றுக்கணக்கான தடவை பார்த்து இருக்கின்றேன். தமிழ்ப்படங்களில் நான் திரும்பத் திரும்பப் பார்ப்பது ‘பாசமலர்’, ‘நாடோடி மன்னன்’ ஆகும்.

1964 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்க வந்தபோது, சாந்தி தியேட்டரில் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘ட்ரோஜன் வார்’ (Trojan War).

ஆனந்த் திரையரங்கில் பார்த்த படம் ‘ELCID’, சபையர் திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் ‘கிளியோபாட்ரா’, ‘சவுண்ட் ஆப் மியூசிக்’, ‘Battle of the Bulge; Lawrence of Arabia’ கேசினோ திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் ‘From Russia with Love, Goldfinger’.

அறிஞர் அண்ணா விரும்பிப் பார்க்கும் ‘மினர்வா’ திரையரங்கில் என்னை ஈர்த்த திரைப்படம் ‘பெக்கெட்’; பயமுறுத்திய படம் ‘சைக்கோ’ (Psycho); விறுவிறுப்பூட்டிய படம் ‘The day of the Jackal’; மறக்க முடியாத படங்கள் ‘Guns of Navarone’, ‘Where Eagles Dare, Titanic’; நான் இன்றைக்கும் திரும்பத் திரும்பப் பார்க்கும் படங்கள் மெல்கிப்சனின் ‘Brave Heart’, ‘Passion of the Christ’.

கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’, ‘சாரதா’, ‘கை கொடுத்த தெய்வம்’, தோல்விப் படம் என்று சொல்லப்பட்டாலும் என் நெஞ்சை அள்ளிய ‘என்னதான் முடிவு?’; மல்லியம் ராஜகோபாலின் ‘சவாலே சமாளி’;

மிசா கொட்டடியில் இருந்து வெளியே வந்தபின், கிராமிய மணத்தை இதயத்தில் பரப்பிய பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, காதல் காவியமாம் ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘புதுமைப்பெண்’, ‘கடலோரக் கவிதைகள்’, சிவாஜியை இமயமாய் நிமிர்த்திய ‘முதல் மரியாதை’, பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நீர்க்குமிழி’, ‘தாமரை நெஞ்சம்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘வானமே எல்லை’, ‘சிந்து பைரவி’.

ரஜினியின் ‘ஆறில் இருந்து அறுபது வரை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘அண்ணாமலை’, ‘தளபதி’, ‘முத்து’, ‘பாட்சா’, கமல்ஹாசனின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சலங்கை ஒலி’, ‘நினைவை விட்டு அகலாத நாயகன்’, ‘தேவர் மகன்’, பாலு மகேந்திராவின் ‘முள்ளும் மலரும்’, ‘மூன்றாம் பிறை’, ‘மூடுபனி’, ‘தங்கர் பச்சானின் அழகி’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, வசந்த பாலனின் ‘வெயில்’, வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’, ‘விசாரணை’, ராஜ்கிரணின் ‘அரண்மனைக் கிளி’, மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், இயக்குநர் புகழேந்தி தங்கராஜின் ‘உச்சிதனை முகர்ந்தால்’, மணிவண்ணனின் ‘அமைதிப்படை’, சேரனின் ‘பாண்டவர் பூமி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராப்’, பாலாவின் ‘சேது’, அமீரின் ‘பருத்தி வீரன்’ ஜனநாதனின் ‘பேராண்மை’, ஜெயம் ராஜாவின் ‘தனி ஒருவன்’, ராஜமௌலியின் ‘நான் ஈ’.

அண்மையில் ஆஸ்கர் விருது வென்ற படங்களில் என் மனதில் பதிந்தது ‘The Revenent’; தோல்வியில் கலங்காதே என்று எனக்கு ஊக்கம் அளித்த படம் ‘Pursuit of Happines’.

என் இதயச் சுவற்றில் கல்வெட்டாய் அண்மையில் பதிந்த படங்கள், மணிகண்டனின் ‘காக்கா முட்டை’, சுசீந்தரனின் ‘அழகர்சாமியின் குதிரை’ பாண்டியராஜனின் ‘பசங்க’, சகோதரர் சமுத்திரக்கனியின் ‘அப்பா’ ஆகும்.

இப்படி எத்தனை எத்தனையோ படங்கள் உள்ளன. நினைவில் வந்ததை எழுதியுள்ளேன்.

இயக்குநர் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, கள்ளிக் காட்டுச் சீமையின் வாழ்க்கையை ஒரு தாயின் உழைப்பைப் பற்றிப் பேசிய நேர்த்தியான படைப்பு. இந்தப் படத்தில் வரும் கிராமிய வாழ்க்கையைப் பார்த்து என் இளமை நாட்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.

நீர்ப்பறவை’. கடற்கரை ஓர மீனவர் வாழ்க்கையை, ‘படகோட்டியிலும்’, ‘கடலோரக் கவிதைகளிலும்’ நான் கண்டிருந்தாலும், ‘நீர்ப்பறவை’ ஆஸ்கர் விருதுபெற வேண்டிய படம் ஆகும். ‘நீர்ப்பறவை’ உயிர்க் காவியத்தை நான் பார்த்தபோது, ஐந்து இடங்களில் கண் கலங்கி அழுதேன். மொழி அறியாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்தால், பிற நாட்டினர் கண்டால் அவர்கள் நெஞ்சத்தை உலுக்கும். தென்கொரிய மக்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கினார்களாம். இந்தக் காவியத்தைத் தந்தவன் ஒரு தமிழன் என்பதால்தானோ இதற்குத் தேசிய விருது கிடைக்கவில்லை போலும்.

பாச மலரைப் போல், ஞான ஒளியைப் போல், நெஞ்சில் ஓர் ஆலயத்தைப் போல், தொடங்கிய நிமிடத்தில் இருந்து முடியும் வரை என்னை முழுமையாக உலுக்கிய படம் ‘தர்மதுரை’ எனும் வெள்ளித்திரை உயிர் ஓவியம் ஆகும்.

நடிகர் திலகத்திற்குப் பின்னர், திரைப்படத்தைப் பார்க்கும்போதே கதாபாத்திரம் என் இருதயத்திற்குள் ஊடுருவி அசைத்த நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான்.

 மொட்டை மாடியில் முன்னிரவில் மது அருந்திய மயக்கத் தூக்கத்தில் இருந்து அக்காளின் சின்னமகளான சின்னஞ்சிறுமி, காப்பி கொடுத்து எழுப்பும் காட்சி, மது போதையில் சவ ஊர்வலத்தில் ஆட்டக்காரர்களுடன் சேர்ந்து ஆடும் தோற்றம், தம்பிகளோடும், மாமனோடும் மல்லுக்கட்டும் வேளை, உலக வாழ்க்கையில் தாயை விட உன்னதமான ஓர் உயிர் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் ராதிகாவின் இயல்பான நடிப்பு, குடிபோதையில் இருந்தவனை வீட்டு அறையில் பூட்டி வைத்தபின், ஜன்னல் வழியாகக் கொடுக்கும் சாப்பாட்டுத் தட்டிலேயே கதவைத் திறக்க சிறிய ரம்பத்தை வைக்கிறாள் தாய். தான் தூக்கிச் செல்லும் பையில், வீட்டுப் பணம் ஐந்து இலட்சம் இருப்பது தர்மதுரைக்குத் தெரியாது. பின்னர்தான் தொடங்குகிறது பிளாஷ்பேக்.மதுரை மருத்துவக் கல்லூரியில் அந்தக் கிராமத்தின் முதல் மாணவன். பேராசிரியர் காமராஜ் அவர்களை, அவரது இயற்பெயரான முனியாண்டி என்று சொல்லி நையாண்டி செய்த மாணவர்களைச் சக்கையாகப் போட்டுப் புரட்டி எடுத்துச் சீறும் கோபம், உடன் பயிலும் மாணவி ஸ்டெல்லாவின் மீது படிகின்ற முதல் காதல், அது ஊமைக்கனவாகவே முடிந்தது.

ஊருக்கு வருகிறான். மருத்துவச் சேவை செய்கிறான். அங்குதான் காமக்காபட்டி அன்புச்செல்வி எனும் ஏழை மகள், பிணியுற்றோருக்குத் தொண்டு செய்வதைக் காண்கிறான். அவன் நெஞ்சில் அவள் மயில் இறகால் தடவுகிறாள். தாயோடு, தம்பிமார், மாமனோடு சென்று பெண் கேட்டு நிச்சயிக்கிறான்.

தர்மதுரைக்குத் தெரியாமல் அவன் சகோதரர்கள், அந்த ஏழைப்பெண்ணின் தகப்பனிடம் ஐம்பது பவுன் நகையும், ஐந்து இலட்சம் பணமும் கேட்டு அவமானப்படுத்தியதால் அன்புச்செல்வி தற்கொலை செய்து கொள்கின்றாள்.

செய்தி அறிந்து புயலாக ஓடி வருகிறான் தர்மதுரை. அந்தக் காட்சியில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அங்கு பார்த்த தர்மதுரைதான், என் நெஞ்சில் பதிந்து விட்டான்.

பெண்ணின் உறவினர்கள் அவனை அடித்து நொறுக்குகிறார்கள். நெஞ்சம் எரிமலையாக வீட்டுக்கு வருகிறான். வீச்சரிவாளை எடுக்கிறான். தம்பிமாரை வெட்டத் துடிக்கிறான். தன் தாயிடம் தர்மதுரை கேவிக்கேவி அழுதுகொண்டே வார்த்தைகள் தடுமாற உடைந்த தன் நெஞ்சத்தின் இரத்தக்கண்ணீரை வெளிப்படுத்துகிறானே, அங்குதான் விஜய் சேதுபதி என்னை முழுமையாக ஆக்கிரமித்தார். மதுவின் போதைக்கு ஆளாகிறான்.

படித்த கல்லூரிக்கே செல்லுகிறான். அங்கே அவனை உயிராக நேசித்த தோழிகள் ஸ்டெல்லா, சுபாஷினி. ஸ்டெல்லாவின் வீட்டுக்குப் போகிறான். ‘நீ பெண் கேட்டு வருவாய் என்று என் மகள் சொன்னாள். மறுநாள் என் மகள் கார் விபத்தில் இறந்து போனாள். நீ எனக்கு மருமகன்’ என்கிறார் கிறித்துவத் தந்தை.

அங்கிருந்து சுபாஷினி வீட்டுக்கு வருகிறான். அவள் திருமணம் ஆனவள். கணவரும் டாக்டர். ஹைதராபாத்தில் இருக்கின்றாள். அவளிடம்தான் தனது வாழ்க்கையின் ஓடி மறைந்த சோகச் சூறாவளியைச் சித்தரிக்கிறான்.

சுபாஷினி, தாய்மைப்பேறு அடைந்தபோது, அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பிய கணவன், அவளுக்குத் தெரியாமலேயே பாலில் மருந்தைக் கொடுத்துக் கருவைக் கலைத்து விட்டதால், கணவனைக் கொலைகாரன் என்கிறாள் சுபாஷினி. விவாகரத்து பெறுகிறாள்.

வீட்டை விட்டுப் புறப்பட்டு வருகையில் பையில் இருந்த ஐந்து இலட்ச ரூபாய் தர்மதுரைக்குத் தெரியாது. ஆனால், சீட்டுக்குப் பணம் கொடுத்தவர்கள் நெருக்கியதால், வீடு போலீஸ் வசம் செல்கிறது. அவன் தாயும் தம்பிமார்களும் கூலி வேலை செய்கிறார்கள். ஐந்து இலட்ச ரூபாய் அந்தப் பையில் இருந்ததை சுபாஷினி காட்டியபிறகுதான், ஊருக்குத் திரும்புகிறான்.

விவரம் அறியாத தம்பி இரும்புக் கம்பியால் தலையில் தாக்குகிறான். ஆண்டிபட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். பக்கத்துப் படுக்கையில் இருந்து சிறுமிக்கு ஜன்னி வருகிறது. தாய் பதறுகிறாள். மயக்கத்தில் இருந்த தர்மதுரை எழுந்து மெடிக்கல் சார்டைப் பார்த்து, ஊசி போடுகிறான். அப்போது அவன் தாய், ‘என் மகனும் ஒரு டாக்டர்தான்’ என்கிறாள்.

சுபாஷினியிடம் இருந்து ஒரு அலைபேசி வருகின்றது. உனக்காக இங்கே இரண்டு உயிர்கள் காத்திருக்கின்றன. நானும், என் வயிற்றில் வளரும் குழந்தையும்….படம் நிறைவு பெறுகின்றது.

இந்தப் படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும்.

இதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான். அவர்தான் சகோதரன் விஜய் சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளைக் குவிக்கும்.

சீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அந்த விருதுக்குத்தான் பெருமை

வைகோ
error: Content is protected !!