June 28, 2022

புலி, வில், மீன் சின்ன கொடியுடன் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம்!

“கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்டு கிளம்பியதுபோல், நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம் தொடங்கியுள்ளார்”என்று வைகோ நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்த ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இன்று காலை தனது நடைபயணத்தை தொடங்கினார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் வழியாகச் சென்று வருகிற 9 ந் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் முடிவடைகிறது.


திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த நடைபயண துவக்க விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்   மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வைகோ பேசுகையில், “ 1982 ம் வருடம் இதே மதுரையில் தான் திமுக தலைவர் கருணாநிதி திருச்செந்தூர்க்கு நீதி கேட்டு நெடும் பயணம் சென்றார். இன்று அவரது மகன் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். இன்று காலை கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மு சாண்டி, கேரள எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இந்த நடைப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.  இந்த நியூட்ரினோ ஆய்வு மையத்தை மகாராஷ்டிராவிலோ குஜராத்தி லோ போய் மோடி அமைக்க வேண்டியது தானே.

தமிழகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்து விடும் என அதீத நம்பிக்கையுடன் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசு துடிக்கிறது.  மக்கள் கருத்துக் கணிப்புத் தேவையில்லை என மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. நீதிமன்றத்தின் மூலமும், மக்களை திரட்டியும் இத்திட்டத்தை எதிர்ப்போம்.  11 லட்சம் டன் பாறையை உடைத்து 12 லட்சம் லிட்டர் நீர் உதவியோடு 50 ஆயிரம் டன் செயற்கை நியூட்ரின் காந்தக் கல்லை வைக்க முயற்சிக்கிறார்கள்.

இங்கே அமைக்கின்ற உலகின் மிகப் பெரிய ஆய்வுக் கூடத்திற்கு அமெரிக்காவின் பெர்மி ஆய்வுக் கூடத்திலிருந்து செயற்கை நியூட்ரினோக்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிடுகிறது. அதற்கு மோடி அரசு துணைப் போகத் துடிக்கிறது. இங்கு இருந்து உலகில் உள்ள எந்த அணு ஆயுதங்களையும் வெடிக்கவோ செயல் இழக்கச் செய்யவோ முடியும். இதனால் உலகில் அனுப்போர் தொடங்கினால் இந்த ஆய்வு மையத்தின் மேல் குண்டு வீசினால், தமிழகமும் கேரளாவும் அழியும். திட்டம் செயல்படுத்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு, கேரளத்தின் இடுக்கி அணை ஆகியவை இடிந்துவிடக் கூடிய ஆபத்து உள்ளது.”என்றார்

இதில் கலந்து கொண்டு நடை பயணத்தை சேர சோழ பாண்டிய சின்னங்களான புலி, வில், மீன் சின்னங்கள் பொறித்த கொடியை அசைத்து துவக்கி வைத்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, “இந்த வரலாற்று நடை பயணத்தை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வைகோ கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் போராடுபவர்.  கற்புக்கரசி கண்ணகி நீதிகேட்டு கிளம்பியதுபோல், நியூட்ரினோவை எதிர்த்து வைகோ பயணம் தொடங்கியுள்ளார். இந்த நடைபயணம் மிகப் பெரிய தன்னெழுச்சிப் பயணமாக மாறும். மக்கள் பாதுகாப்பிற்காக ‘ குடிநீர்ப் பிரச்சினையை மையமாக இந்தப் போராட்டத்தை வைகோ நடத்துகிறார்.

மத்திய அரசு மக்கள் பாதுகாப்பை பற்றிக் கவலைப் படாமல் தமிழகத்தை சுடுகாட்டாக ஆக மத்திய மோடி அரசு முயற்சிக்கிறது.  தமிழகத்தில் நச்சுத் திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்த மத்திய மோடி அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது.  தேனியில் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடியில் ஸ்டைர்லைட் திட்டம், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலூரில் பெட்ரோல் குழாய்க் கிணறுகள் திட்டம், கோவையில் கெயில் திட்டம் என நச்சுத் திட்டங்கள்.

மாநில சுயாட்சியை வற்புறுத்தும் தமிழகத்தையும், தமிழக மக்களையும் பிடிக்காமல் தான் மோடி இவ்வாறு நடந்து கொள்கிறார். ஆறு வாரக் காலத்திற்குள் கால நீட்டிப்பு இல்லாமல் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், கடைசி நேரத்தில் ஸ்கீம் குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்துகிறது. உச்ச நீதிமன்றத்தின் சுதந்தரம் கேள்விக்குறியாகி விட்டது.

அதிமுக எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்தால், திமுக அனைத்து சட்டமன்ற உறுப்பினர் களும் ராஜினாமா செய்கிறோம் என்று அதிமுகவிடம் சொன்னோம். தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிராக நடந்து கொள்கிறது.  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் நேரத்தில் ராமர் பாலம் என சதித் திட்டம் தீட்டி நிறுத்தினீர்கள். தற்போது யுனெஸ்கோ புராதனச் சின்னமாக மேற்குத் தொடர்ச்சி மலையை அறிவித்தும் இப்போது மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை அமைக்க முயற்சிப்பது ஏன்? “ என்று  மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.