October 27, 2021

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி !- மத்திய அரசு அனுமதி!

கொரோனா சூழல் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற் கொண்டார். அதைத் தொடர்ந்து மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 50 விழுக்காடு மருந்தை மாநில அரசுகளுக்கு வழங்கவும். வெளிச் சந்தைகளில் கொரோனா தடுப்பூசியை விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், மாநில அரசுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 3வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், தடுப்பூசி செலுத்துவதற்கான வயதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை கவனத்தில் கொண்டு மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருந்து கடைகளிலும் தடுப்பூசி:

மேலும் இந்த கொரோனா மருந்தை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் 50% மருந்துகளை மத்திய அரசிற்கும், எஞ்சிய மருந்துகளை மாநில அரசிடமும், திறந்த வெளி சந்தையிலும் விற்கலாம் மருந்து கடைகளிலும் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது என – மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.