January 31, 2023

வானம் கொட்டட்டும் – விமர்சனம்

நம் தமிழ் சினிமா எத்தனையோ கிராமக் கதைகளையும், அதே கிராமத்தில் கோபத்தில் கொலை செய்ய ஒரு குடும்பத்தையும், அப்படி கொலை செய்ய பட்ட குடும்ப அடுத்த தலைமுறை பழி வாங்க காத்திருக்கும் கதைகளையும் கண்டு, கண்டு கண்ணீர் வடிக்காத ரசிகன் கிடையாது,, அந்த லிஸ்ட் நம்பரில் ஒன்றை அதிகரிக்க வந்திருக்கும் படம்தான் ‘வானம் கொட்டட்டும்’..!

வீட்டுக்கு மூத்தவராக இருக்கும் பாலாஜி சக்திவேலை வெட்டியவரை ஆத்திரத்துடன் தேடி கட்சி ஆபீசுக்கே சென்று வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்கு போய்ட் விடுகிறார் சரத்குமார். அந்த கொலைகாரன் என்ற அடைமொழியுடன் தன் பிள்ளைகளை வளர்க்க விருப்பமில்லாமல் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்னை வந்து வாழ்க்கையை ஓட்டுகிறார் ராதிகா. சென்னையில் வளரும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு புதிய தொழில் தொடங்குகிறார்கள். பதினாறு வருட சிறை தண்டனை முடிந்து வெளியில் வரும் சரத்குமார் மறுபடியும் தன் குடுப்பத்தாருடன் இணைய நடக்கும் போராட்டமே கதை.

சரத்குமார் & ராதிகாவின் நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்வதெல்லாம் பூக்கடையில் இருந்து வாசம் வருது என்று சொல்வது மாதிரிதா, ஆனால் கொஞ்சம் எக்கி எக்கி நடித்து பல படங்களில் அந்நியமாகிப் போன விக்ரம் பிரபு இதில் அடக்கி வாசித்து வழ்ந்து காட்டி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தான் நடிப்பு ராட்சசி என்பதை மறுபடியும் உறுதி செய்திருக்கிறார்.
நந்தா, சாந்தனு, மடோனா, பாலாஜி சக்திவேல் , மதுசூதனன் என நடிகர்களின் தேர்வால் நேட்டிவிட்டி நச்-சென்று பொருந்துகிறது.

சித் ஸ்ரீராம் மற்றும் கே-வின் பின்னணி இசை அருமை. அறிமுக இசையமைப்பாளர் சித் ஸ்ரீராமின் பாடல்கள் நன்றாக இருந்தது. குறிப்பாக கண்ணுத் தங்கம் பாடல் வெவ்வேறு சூழ்நிலைகளில் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு சரியாக உபயோகப் படுத்தப் பட்டிருப்பது சிறப்பு. ப்ரீத்தா ஜெயராமன் காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்து மிளிர்கிறார்.

பெற்றோர்களின் கண்மூடித்தனமான பாசம், பிள்ளைகளின் மன நிலை என இரு தரப்பின் உணர்வுகளையும் சரியாக புரியும்படி கதை எழுதியிருக்கிறார்கள் மணிரத்னம் மற்றும் தனா. நம் உணர்ச்சி வேகத்தில் செய்யும் ஒரு தவறு நம் வாழ்வை எந்த அளவுக்கு சிதைக்கும் என்ற கோர் லைனை, நடிகர்களின் சிறப்பான நடிப்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகளால் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனா.

ஆனால் விக்ரம் பிரபு மற்றும் மடோனா இடையேயான காட்சிகளில் இருவரது சந்திப்பு அவர்கள் பழகுவதற்கான காரணம் உள்ளிட்டவற்றில் லாஜிக் பிரச்சனைகள் இருப்பதால் நம்பகத்தன்மை குறைகிறது. படத்தின் பிற்பகுதி சற்றே தொய்வை தருகிறது, அத்துடன் அடுத்தடுத்து இப்படிதான் காட்சிகள் வரும் என்பதும் மடோனா கடைசி வரை பயணிக்காததும் அப்செட்=டை தருவதென்னவோ நிஜம்.

மொத்தத்தில் இந்த வானம் கொட்டட்டும் – ஆர்டிஃபிஷியல் ரெயின்

மார்க் 2.5 / 5